செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

” ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

-------------------------------------------------------------
வாழ்க்கை அவலங்களாலும் , கவலைகளாலும் இன்னும் பிற வருத்தம் தரும் உணர்வுகளாலுமே நிரம்பி வழிகிறது . எனினும் அவ்வப்போது அழகான பக்கங்களையும் நமக்குக் காட்டிக் கொண்டுதான் நகர்ந்து கொண்டிருக்கிறது . வாழ்வின் இரு பக்கங்களையும் வாசிப்பவரோடு பகிர்ந்து கொள்வதுதான் ஒரு படைப்பாளியின் முதல் நோக்கமாக இருக்க முடியும் . அதிலும் குறிப்பாக கவிதைகளில் . அதைச் செவ்வனச் செய்து காட்டியுள்ளார் இரா . பூபாலன் தனது ஆதிமுகத்தின் காலப்பிரதி “ கவிதைத் தொகுப்பில் .
இப்போது
உங்கள் கைத்துப்பாக்கி
நடுங்காமலிருக்கட்டும்
நம்புங்கள் ஆறு தோட்டாக்களில்
ஆகச் சிறந்தது
கடைசித் தோட்டா மட்டுமே .
ஆறு தோட்டாக்கள் உள்ள துப்பாக்கி ... “ என்ற கவிதையின் இந்தக் கடைசி வரிகளை வாசித்து முடிக்கையில் , முதல் ஐந்து தோட்டாக்களில் எத்தனையை நாம் இது வரை அடுத்தவர் மீது பயன்படுத்தியுள்ளோம் , எத்தனை தோட்டாக்களை பிறர் நம் மீது பயன்படுத்தியுள்ளார்கள் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது .
*******************************************
மனித இனம் இயற்கையோடு ஒன்றி வனத்தில் வாழ்ந்த காலத்திலும் வாழ்க்கை முற்றிலும் இனிப்பாக மட்டுமே இருந்தது என்று சொல்ல இயலாதுதான் . ஆனால் இன்றைய நாகரீக சமூகத்தில் நிகழும் அவலங்களோடு ஒப்பிட்டால் அவை ஒன்றுமில்லை என்று உணர்த்தும் வகையில் இப்படி முடிக்கிறார் ஒரு கவிதையை ....
சில மிருகங்கள்
அவளை வேட்டையாடிவிட்டன
என்று நான் இக்கவிதையை
முடித்தால் நிச்சயம்
அவள் என்னை மன்னிக்கமாட்டாள் .
**********************************************
தர்மத்தைக் காப்பாற்றுவது இன்றைய கால கட்டத்தில் அவ்வளவு எளிதல்ல என்பதை பகடியாக இப்படிக் கூறுகிறார் இன்னொரு கவிதையில் – கையாலாகாக் கண்ணன்
இந்த முறை
காது கேட்காத மாதிரி
நடிக்கத் துவங்குகிறான் .
******************************
நாம் இயற்கைக்குத் துரோகம் செய்தாலும் , இயற்கை இயன்ற அளவு நம்மைக் கைவிடாதுதான் இருக்கின்றது என்பதைக் காட்டும் அழகான் வரிகள் –
மஞ்சள் மலரொன்றை
என் மீது
விழச்செய்து
ஆசிர்வதித்த பின்னர்தான்
வெட்டத் துவங்கினேன்
அம்மரத்தை .
******************************************
வாழ்வின் அவலமான பக்கங்களை பல கவிதைகளில் வலிமையும் , வலியும் மிகுந்த வார்த்தைகளால் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள் தொகுப்பு முழுவதும் பரவிக் கிடக்கின்றன . எனினும் அவை தரும் மனச் சோர்வைப் போக்கும் வகையில் , எந்த ஒரு மனிதனின் வாழ்விலும் சற்று கூடுதலாக வெளிச்சம் தருபவர்கள் குழந்தைகள்தான் என்பதை உணர்த்தும் விதமாக , தவிர்க்க முடியாத செயற்கைப் பூச்சுகளை இன்னும் பூசிக் கொள்ளாத குழந்தைப் பருவத்தின் அழகான தருணங்களைத் தன் கவிதைகளில் அங்கங்கே தூவியுள்ளார் .   
கதைப் புத்தகத்தின்
பக்கத்தில்
புலி துரத்திக் கொண்டோடும்
மானுக்குக்
கூடுதலாக இரண்டு
கால்கள்
வரைகிறது குழந்தை .
***********************************
வெள்ளிக் கிழமை
சாயங்கால மகளைப் போல
இருப்பதில்லை
திங்கட்கிழமை காலை
மகள்......
***********************************
தொகுப்பை முழுவதுமாக வாசிக்கும் போதுதான் கவிஞரின் வார்த்தைகளின் வீரியத்தை உணர இயலும் . எடுத்துக் காட்டாக .....
அன்பின் குரல்களுக்கு
எப்போதும் ஒரே முகம் .
***********************************
வாழ்த்துகள் பூபாலன் இன்னும் ....இன்னும்....வீரியம் மிக்க தொகுப்புகள் பல கொண்டு வர .
*********************************** 
ஆதிமுகத்தின் காலப்பிரதி “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – இரா . பூபாலன் .
வெளியீடு – பொள்ளாச்சி இலக்கிய வட்டம் , பொள்ளாச்சி .
விலை – ரூ 70 /

------------------------------------------------------------------ 

செவ்வாய், 26 ஜூலை, 2016

மெளனத்தின் பிளிறல் – [புதியமாதவி ] - ஒரு வாசிப்பு அனுபவம் .


மெளனத்தின் பிளிறல் – [புதியமாதவி ] - ஒரு வாசிப்பு அனுபவம் .
-----------------------------------------------------------------
கவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு தருணங்களில் தனித்தனியே வாசித்திருந்தாலும் , கவிதைகளின் மூலமாக வெளிப்படும் அவரது எழுத்தின் வீச்சை ஒரே தொகுதியாக வாசிக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி வேறு விதமாகத்தான் உள்ளது .
எழுத்து “ வெளியீடாக வெளிவந்துள்ள மெளனத்தின் பிளிறல் “  தொகுப்பில் உள்ள 46 கவிதைகளிலும் முதல் வாசிப்பில் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு வகை அறச்சீற்றமே தென்பட்டாலும் , மறுவாசிப்பில் ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு பரிமாணங்களில் விரிகின்றது .
*********************
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா ?
**********************************************
சமூகம் குறித்த சீற்றத்தை , மென்மையான வார்த்தைகளாலும் வெளிப் படுத்த முடியும் என உணர்த்தும் நிறைய கவிதைகள் தொகுப்பெங்கும் சிதறிக் கிடக்கின்றன .
******************************************************
மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்க என்னை
அனுப்பாதே....
யுத்தமில்லா பூமியில் எங்காவது உன்னைச் சந்தித்தால்
அப்போது வருவேன் ....
மீண்டும் உன் காதலியாக .
புத்தம் சரணம் கச்சாமி ...
*************************************************  
கலை விமர்சகர் இந்திரன் தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல புதியமாதவி அவர்களின் கவிதைகள் பால்பகா உயர் திணைக் கவிதைகளாகவே உள்ளன . அவரது கூற்று தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு நியாயம் கற்பிப்பதாகவே படுகிறது .
**********************************************
வெள்ளை மனிதர்களுக்கு நடுவில்
கருங் காக்கைகள் கத்துவதும் கூட
காதுகளுக்கு  சங்கீதமாய் .
********************************************
சற்றே விரிந்த பார்வையில் பார்த்தால் பெண்ணின் குரலாக வெளிப்படும் அநேக கவிதைகள் , ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தான சமூகத்தின் பொதுக் குரலாகவே தோன்றுகின்றன . எதனை எதற்கு உருவகப் படுத்துகிறார் என்ற கேள்வியை முன் வைத்து வாசிக்கும் போது விரிந்து கொண்டே போகின்றன கவிதை வரிகள் .
*************************************
குடைக்குள் நடப்பதும்
குடை பிடித்து நடப்பதும்
வேறு வேறான உலகம் .
இப்போதெல்லாம் எனக்கான குடை
எப்போதும் என் வசம் .
*****************************************
ஒரு வகையில் பொறாமையாகக் கூட உள்ளது . நான்கு தலைமுறையாக மும்பையில் வாழும் ஒருவரால் எப்படி இவ்வளவு அழுத்தமாக தனது கால்களை தனது தாயகமான தாமிரபரணி நதியோடும் மண்ணிலும் , அதன் தொன்மங்களிலும் பதித்து நிற்க முடிகிறது என்று .
**********************************************************
கடகரேகையும் மகரரேகையும்
சங்கமிக்க மறுக்கும்
பூமத்திய ரேகையின் அடிவயிற்றில்
இந்தப் பஃறுளி
மெளனத்தின் பிளிறலோடு .
************************************************
மெளனத்தின் பிளிறல்களில் இருந்து விடுபட சற்று நாட்கள் ஆகும் என்றுதான் தோன்றுகிறது . விடுபட முடியுமா என்றும் தோன்றுகிறது .
-----------------------------------------------------------
 மெளனத்தின் பிளிறல் – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – புதியமாதவி .
வெளியீடு – எழுத்து , சென்னை .
விலை – ரூ 60 /

---------------------------------------------------------------

திங்கள், 25 ஜூலை, 2016

அம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .

அம்மாவின் கோலம்                                                [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
----------------------------------------------------------

கவிதையில் “ இருண்மை “ வேண்டாம் என்று உரக்கச் சொல்லும் ஒரு கவிஞரின் கவிதைகளில் “ வெளிச்சம் “ தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும் ? கவிஞர் ஜெயதேவனின் “ அம்மாவின் கோலம் “ தொகுப்பில் உள்ள 43 கவிதைகளும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன நமது இன்றைய வாழ்க்கை முறையையும் , அதன் மூலம் நாம் இழந்தவற்றையும் . வெளிச்சம் என்றால் கண் கூச வைக்கும் வெளிச்சம் இல்லை ; மனம் கூச வைக்கும் வெளிச்சம் . நாமேதான் நம்மை ஒருவித இருட்டிற்குள் நுழைத்துக் கொண்டு வாழ்கிறோம் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன கவிதை வரிகள் .
*******************************************
ஆயினும் விற்க இன்னும் மிச்சம்
இருந்து கொண்டுதானிருக்கிறது வாழ்க்கை . [ வாழ்வின் முடிச்சுகள் ]
***************************************************************************
வெளிச்சம் என்றால் ஒளி இல்லாமல் இருக்குமா ?  ஒளி இருந்தால் சூடும் அநேகமாக தவிர்க்க முடியாதுதானே ? நிறையவே இருக்கிறது சூடு இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் . சூடுகள் வலியை உண்டாக்கினாலும் வடுக்களை உண்டாக்கவில்லை . மாறாக சூழலில் இருந்து விடுபட வழியைத்தான் காட்டிச் செல்கின்றன வரிகள் .
*****************************************
40 சதவீதம் மனிதனாகவும்
60 சதவீதம் சராசரியாகவும் . [ முன்னுக்குப் பின் ]
********************************************************
டாஸ்மாக்கில் குப்புறக்கிடப்பவனும்
எதிர்பார்க்கிறான் கலப்படமற்ற போதையை . [ கல்லெனக் கிடக்கிறது காலம் ]
***********************************************************************
வானம்பாடிக் கவிஞர்களின் காலத்தைச் சேர்ந்த அநேக கவிஞர்கள் சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளாக குறுகிய வட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கும் போது , அவர்களில் ஒருவரான ஜெயதேவன் அதி நவீன சிறகுகளை வளர்த்துக் கொண்டு கால மாற்றத்திற்கேற்பத் தன் கவிதைகளையும் பரந்த எல்லைகளில் பறக்க வைத்திருக்கிறார் .
**************************************
பிரமாண்டமானது எல்லாம்
பயமானதும் கூட . [ கவிதையின் கருவறை ]
*****************************************************
நாம் புரியினும் புரியாவிடினும்
என்றும் நம்மோடிருப்பது என்னவோ
நம்மூர் பெருமாள்கோயில் மாடுகளும்
மந்தையில் நிற்கும் அரசமரமும்தான் . [ உறவுகள் ]
***************************************************************
தொகுப்பில் மூன்று வீடுகளை கட்டியிருக்கிறார் / காட்டியிருக்கிறார் . ஒவ்வொரு வீட்டில் புகுந்து வெளிவரும் போதும் வெவ்வேறான உணர்வுகளுடன்தான் வெளிவர வேண்டியதிருக்கிறது .
****************************************************
உணர்ச்சிகளால் கட்டப்பட்டவன் மனித
உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல வீடு .  [ வீடு 1 ]
******************************************************************
வீடு கனமானதுதான்
வீடு கனக்கிறது என்று
காட்டுக்குப் போனவன் காடு பூராவும் வீடு . [ வீடு 2 ]
*********************************************************************
பொதுவாக பெயர்களையும் , பொருட்களையும் அடுக்கி வைத்து எழுதப்படும் கவிதைகளை கேட்லாக்கிங் கவிதைகள் என்று வகைப் படுத்துவார்கள் . ஆனால் தொகுப்பில் உள்ள சில கவிதைகளில் பெயர்களும் , பொருட்களும் அடுக்கப் பட்டிருந்தாலும் அவை கலிடியாஸ்கோப் காட்சிகளாக விரிந்து ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு  காட்சிகளையும் , பொருளையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன . ஒரு கவிதைக்குள் எத்தனை வேறுபட்ட விஷயங்களை நுழைக்க முடிகிறது இவரால் என்ற வியப்பு சில கவிதைகளை வாசிக்கையில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது .
ஹீமொகுளோபின்கள் , நியுரான்கள் , மைக்கேல் ஜாக்சன் , காரல் மார்க்ஸ் , கண்ணதாசன் , ஜிப்ரான் , உமர்கயாம் , பாரதி , கூடவே கஞ்சா புகை என்று கலந்து கட்டியுள்ள “ டம்ளரில் ஊற்றப்படும் வாழ்க்கை “ என்ற கவிதையை வாசிக்கையில் இந்த வாழ்க்கை அவருக்கு மட்டுமானதாக இல்லாமல் வாசிக்கும் எனக்கும் , உங்களுக்கும் உரித்ததாகி விடுகிறது .
*******************************************
உமர்கயாம் பாரதி விட்ட
கஞ்சா புகையிலும் இருக்கிறதே
நமக்கான கவிதைகள் .
************************************************
கவிஞனாய் இருப்பது வரமா , சாபமா என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் உள்ளது வாழ்க்கைக்குத் தூரமாய் கவிதை .
**************************************************************************
உரசினால் பற்றும் தீக்குச்சியாய்
பிறப்பெடுத்த கவிஞனால் வேறென்ன செய்யமுடியும் ?
***********************************************************************
அடுக்கிக் கொண்டே போகலாம் தொகுப்பில் உள்ள கவிதைகளில் மனதை ஊடுருவும் கேள்விகளை – கீழே உள்ளவை போன்று .
**************************************************************
வடக்கே எத்தனை காதம் நம்ஊர் ?
தெற்கே எத்தனை காதம் நம் காடு ?  [ திசைகள் ]
***************************************************************
நீங்கள் நடந்த நிழலில்தான்
நடக்கிறது என் நிகழ்கால நிஜம் .  [ அப்பாவுக்குக் கடிதம் ]
*********************************************************************
ஆயினும் தொகுப்பை முழுமையாக வாசித்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும் ஒரு போன தலைமுறைக் கவிஞனின் இன்றைய வாழ்க்கை குறித்த நவீன பார்வை ஜெயதேவன் போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் வித்தையை . பரவிக் கிடக்கும் படிமங்களும் , உருவகங்களும் , தொன்மங்களும் வாசிப்பவனுக்கு மனதில் நிறைய வேலையை உருவாக்கும் அருமையான தொகுப்பு .  
-----------------------------------------------------------
 ‘ அம்மாவின் கோலம் ‘ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – ஜெயதேவன் .
வெளியீடு – எழுத்து , சென்னை .
விலை – ரூ 60 /

----------------------------------------------------------------     

செவ்வாய், 3 நவம்பர், 2015

வாழ்க்கைச் சதுரங்கம் .


வாழ்க்கைச் சதுரங்கம் .
அவரவர் காய்களை
அவரவர்கள்
நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்
மற்றவர் காய்களை வீழ்த்துவதற்காக .

மண்ணாசைக்குக் கோட்டைகளும்
பெண்ணாசைக்கு எதிரியின் ராணியும்
பொன்னாசைக்கென்று தனியே
காய்களில்லையென்பதால்
ஆடுபவர் மனதில் மட்டும் .

நகர்த்துதல்கள் மட்டுமே
நாமாகச் செய்வது
கட்டங்களும் காய்களும்
ஏற்கனவே படைக்கப் பட்டவைதான் .

வெற்றியோ தோல்வியோ
முற்றுப் பெறுவதில்லை ஆட்டம்
ஆடி அடங்கும் வரை .

------------------------------------------------------
[ அகல் மின்னிதழ் நவம்பர் 2015 தீபாவளி மலர் - 1 ] 

திங்கள், 2 நவம்பர், 2015

நிகழ் ...


நிகழ் ...

தொலைக்காட்சி  சமையல் குறிப்புகளை
உன்னிப்பாய் கவனிக்கிறாள் அவள்
கடைச் சாப்பாடு வாங்கப் போயிருக்கும்
கணவனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் .

[ ஹெல்த் கேர் ஆகஸ்ட் 2015 ]

சனி, 31 அக்டோபர், 2015

4 சென்றியுக்கள் ....


4  சென்றியுக்கள் .... 

1 ] ஊதச் சொன்னவர்
வாயில் இருந்தது
உள்ளூர் சரக்கு வாசம் .

2 ] காம்ப்ளான் குடித்து
வளர்ந்தது
மளிகைக் கடைப் பாக்கி .

3 ] தத்ரூப ஓவியம்
புலி விழுங்கிவிட்டது
ஓவியனை .

4 ] இராமன் வேடம் போட்டவன்
கவர்ந்து சென்றான்
உள்ளூர் சீதையை  .

[ நீலநிலா அக்டோபர் 2015 ]

வெள்ளி, 30 அக்டோபர், 2015

அவனும் நானும் .


அவனும் நானும் .

எதிரில் வந்தவனுக்கு
என் வயதுதானிருக்கும்
யாரென்றேன் .
உன்னைத் தெரிந்திருந்தால்
என்னையும் தெரிந்திருக்குமென்றான் .
எங்கேயோ கேட்டதாக
இருக்கிறதேயென்றேன் .
புதிர் வேண்டாம் புரியும்படிச் சொல்லென்றேன் .
உற்றுக் கவனி
உன்னுள் என்னைக் காணலாம் .
என்னைக் கண்டுவிட்டால்
உன்னையும் நீ கண்டு கொள்ளலாமென்றான் .
உணர்ந்து காண்பதற்குள்
உருவமே இல்லாதவனாகி விட்டான் .
திரும்பிப் பார்க்கையில்
என்னையும் காணவில்லை .
என்னையோ அல்லது அவனையோ
யாரேனும் காண நேர்ந்தால்
சொல்லுங்கள் கட்டாயம்
என்னிடமோ அல்லது அவனிடமோ .

[ புதுப்புனல் ஜூலை – ஆகஸ்ட் 2015 ]