செவ்வாய், 30 செப்டம்பர், 2014

நேற்றும் இன்றும் .

நேற்றும் இன்றும் .

உரசி ஓசையெழுப்பும்
மூங்கில் காடுகளில்
சாம்பல் உதிர்க்கும்
சிகரெட் நுனிகள் .
கவிதைக்காகக் காத்திருந்த
மனத்தில் கலைந்த சொற்றொடர்கள்
கோடுகள் விரவி ஓவியம் மலரும்
கேன்வாஸின் கிழிசல் .
மறையும் நேரத்தில்
ஆதித்தியன் கோபம்
இளங்காற்றின் இறுகிய
தழுவலில் இளகிய விந்தை .
ஜன்னலிற்கு வெளியே
குதிக்கும் குரல்கள்
கிளைகளின் முறிவால்
உதிர்ந்த இலைகள் .
கால இடைவெளி
பிசகிய கணக்கால்
சிட்டுக் குருவிகள்
தனித்தனிக் கூட்டில் .
வெள்ளைச் சுவர்களில்
சிலந்தியின் பின்னல்கள்
இரையாக்க் காத்திருக்கும்
இறகிழந்த பூச்சிகள் .
தொடுதலின் விளைவால்
தொலைந்திருந்த உணர்வுகள்
அறுந்த தந்தியிலும்
அற்புத நாதங்கள் .
ஒவ்வொன்றினுள்ளும் ஒவ்வொரு குறைகள்
ஒவ்வாத நிலையிலும் பிணையும்
எலும்புகள்
சிறகுகள் முறிந்த பின்னும்
மிதக்கும் குதிரைகள் .
வட்டமிட்டு வட்டமிட்டும்
இரை கிடைக்காக் கழுகின் சோகம்
ஒரு புறாவின் அலகால்
விலகியது யாவும் .

[ கணையாழி நவம்பர் 2013 ]


புத்தக அறிமுகம் .


காதல் வாசம் – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – ஓமலூர் பாலு .
ஓவியா பதிப்பகம் ,
வத்தலக்குண்டு .

84 பக்கங்களிலும் காதல் ... காதல் ... காதல் ... ஆசிரியரின் வார்த்தைகளில் சொன்னால் இந்த கவிதைத் தொகுப்பு வாழ்வின் விளிம்பு வரையும் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு . “ ஆனால் முழுமையாகப் படித்து முடிக்கும் போது , ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை மட்டுமே இவரது கவிதை வரிகள் உணர்த்தவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது . பெண் மீது உருவாகும் காதலை மேற்பரப்பில் தெரிய வைத்து உள்ளுக்குள் இயற்கை , சமூகம் என எல்லாவற்றின் மீதும் ஏற்படும் காதலை புதைய வைத்துள்ளார் என்றே படுகிறது .
உன் வீட்டின் / சாதியெனும் தக்கையை வைத்து / நம் காதல் கப்பலை / கவிழ்க்க முடியுமா சொல் ... ?
உன் / நெற்றி பார்த்த / முழுநிலவு முடிவெடுத்தது / இன்று முதல் / பிறையாக மாற ...
உன் புருவங்கள் பார்த்து / ஏக்கம் கொண்டது / மழைக்கால – தற்காலிக / வானவில் ...
என்று ஒவ்வொரு வரியிலும் இயற்கையை மறக்காமலே இருக்கின்றார் கவிஞர் .

அடுத்த தொகுப்பில் தம் பார்வையை முழுவதுமாக சமூகம் பக்கமாக திருப்ப விரும்புவதாக கூறியுள்ளார் தன் உரையில் .

வரவேற்போம் .திங்கள், 29 செப்டம்பர், 2014

குருதிப் புனல் .


குருதிப் புனல் .


சிலுவையைச் சுமந்தவன்
வலித்த போது
இறக்கி வைத்து
இளைப்பாறி
தூங்கி விழித்தபோது
சிலுவைக்காக
சண்டையிட்டு மாண்டவர்களின்
குருதியின் ஈரம்

உடம்பெங்கும் .

[ புதுப்புனல் ஜனவரி 2014 ]


[ கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் செப்டம்பர் 16 – 30 / 2014  ]

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

செம்பருத்தி

செம்பருத்தி

எனக்கு பிடித்த மலர்
எதுவென்று
வெகுநாளாய் எனக்குத் தெரியாது .
மணங்களையும்
நிறங்களையும்
இனம் பிரிக்க இயலாமல்
நேற்று வரை
மலர்களை வகை பிரித்து
நேசித்ததில்லை .
எனினும்
இன்று
காய்ந்து , மகரந்தம் சிதறி ,
நிறம் மாறி ,
புத்தகங்களின் இருபக்கங்களிடையே
அடைபட்ட
ஒரு செம்பருத்தி
கிரணங்களாய் விரியும்
சிதறல்களை வீசி
எதையோ
என்னுள் துளிர்க்க வைக்கிறது .
துளிர்ப்பது
உன் நட்பென்று புரிகின்றது .                                                                                                                 


[ புதுப்புனல் பிப்ரவரி 2014 ]

சலனம் .சலனம் .

நிழலுக்கு ஒதுங்கிய
மரத்தின் இலையில் -
பார்வையில் பதிந்த
ஜன்னலின் கம்பியில் -
காலுக்கடியில்
நெருடிய புல்லில் -
நிறம் தெளிக்கும்
ஒற்றை மலரில் -
எங்கெங்கு காணினும்
வான்கோவின் தூரிகை வீச்சாக
அந்த
பட்டாம்பூச்சி
-  அசைவின்றி .
படபடப்பு
மனதில் மட்டும் . 


[ புதுப்புனல் டிசம்பர் 2013 ]சனி, 27 செப்டம்பர், 2014


அருவி / அக்டோபர் – டிசம்பர் 2013 / ஆண்டு மலரில் வெளியான ஹைக்கூ கவிதைகள் . 

கல் எறியப்பட்டது
காய்ந்த குளத்தில்
இரையானது தவளை .

வானத்தில் மீன்கள்
குளத்தில் நட்சத்திரங்கள்
இடமாற்றம் மனதில் .

கழிந்து போன கணங்கள்
அத்தனையும்
காகிதங்களோடு தான் .

ஐந்தோடு முடிந்தது
கண்களில் நட்சத்திரம்
மூச்செங்கும் கந்தகம் .

ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்
நின்றது அடிவாரத்தில் .


[ அருவி / அக்டோபர் – டிசம்பர் 2013 / ஆண்டு மலர் ]


இன்றைய தினம்

வலி எடுத்தும்
நடம் புரியும் நடராஜ தவம் .
தூக்கிய பாதம் இடறி
விழுந்த இரவு
தூங்காமலே பின்னர் கழிந்து போனது .
விழிகள் மூடிய காலை நேரத்தில்
ஆதித்யன் கோபம் மனசை உரசியது .
விழித்துக் கொண்டும்
தூக்கம் கலையாத நேற்றைய மனம்
இன்று புதிதாய் துவங்கிய நாட்டியம் .
ஒவ்வொரு தினமும் வேடங்கள் புதிது .
வேர்கள் மட்டும் மாறவே இல்லை .
வேர்களின் துணையால்
துளிர்த்த இலைகள்
நேசம் வைத்ததென்னவோ
மின்னும் நட்சத்திரங்கள் மீதுதான் .
மீந்தவை கணக்குப் பார்க்கையில்
உடைந்த துண்டுகள் மட்டுமே
இருப்பில் .


[ சுபமங்களா செப்டம்பர் 1995 ]வெள்ளி, 26 செப்டம்பர், 2014


மீறல் 

காலடியில்

குதிக்கும் தவளைகள்
மிதிபடா வண்ணம்
கவனித்து நடப்பினும்
பார்வையில் பலியாகும்

பட்டாம்பூச்சிகள் .

[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 ]
இட மாற்றம்.

இட மாற்றம்.


தேடி
தேடித் தேடி
நடந்து வந்த பாதையில்
ஒதுக்கி வந்த
கற்களும் முட்களும்
தேடலின் முடிவில்
மனதில் .
        

            [ புதுப்புனல் ஜனவரி 2014 ]

வியாழன், 25 செப்டம்பர், 2014


கணையாழியில் வெளியான எனது இரண்டாவது கவிதை .


முற்றுப் பெறாத கவிதையும் முழுமையான முதல் வரியும்

எழுதி எழுதி
திருத்தப்பட்ட கவிதையின்
சிதிலமான வரிகள்
கண் சிமிட்டும் குண்டு பல்பின்
மெலிந்த வெளிச்சத்தில்
என்னைத் தூங்காமல் அடிக்கின்றன .
எத்தனை தடவை திருத்தி எழுதினும்
முடிக்கப் படாமலேயே
காற்றில் பரிதவிக்கின்றன .
சாளரங்கள் மூடப்பட்ட பின்னும்
ஏனோ முற்றுப் பெற மறுக்கின்றன .
வலிக்கும் மனதோடு
முதல் வரியில்
பார்வை பதியும் போது
முழுமை தெரிகின்றது
எனினும்
மற்ற வரிகளை
முற்றிலுமாக அழிக்க
மனம் வராததால்
முழுமை அடையாமல்
வெகு நாளாய்
என் முன்னே படபடக்கின்றது
என் கவிதையும்
என்னைப் போலவே .

[ கணையாழி நவம்பர் 1994 ]

ஞானம் .

ஞானம் .

கொம்பென்பது முட்டுவதற்கும்
பல்லென்பது கடிப்பதற்கும்
காலென்பது உதைப்பதற்குமென்றும்
உணராமல் வாழ்ந்து விட்டது

தவறாகப் போயிற்றென்று
நினைத்துக் கொண்டது
மஞ்சள் நீர் பட்டு

சிலிர்த்த ஆடு .


[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ]

புதன், 24 செப்டம்பர், 2014

சற்றே ....

வழியும் வியர்வை துடைத்து 
வரிசையில் நில்
அடுத்தவன் மூச்சை சுவாசித்து 
தலைவனின் படம் பார்
மைக்கேல்ஜாக்சன் அலறல்களுக்கு 
கை கால் உதறு
பச்சை சுரிதாரை பார்வையில் நிறுத்து
தவறென்று தெரிந்தும் 
மனதால் பிறன் மனை விழை
ஸ்டாரும் சன்னும்
இன்னும் பலவும் 
இடை விடாது ரசி
வேலைக்காக அலைந்து திரி
வெறுப்பில் கல்லெறி .
பாட்டிலைத் திறந்து குடி
மேடைப் பேச்சுகளில் வாய் பிளந்து 
கை தட்டு
யாருக்கேனும் வாக்களி
அன்புக்குரிய தலைவனின் 
பிறந்த நாளுக்கு சுவரொட்டி ஒட்டு
பிடிக்காதவன் முகத்தில் சாணியடி
எல்லாமும் செய் 
என் தலைமுறையே !
அத்தோடு 
சக மனிதனை நேசிக்கவும் 
கற்றுக் கொள் 
சற்றே ....


[ இனிய உதயம் ஆகஸ்ட் 2014 ]

சீச்சீ ....

சீச்சீ ....

தோட்டத்தில் எலுமிச்சை
மனதில் எழுமிச்சை
இரண்டுமே புளித்தது
ஒன்று கிடைத்ததால்
இன்னொன்று கிடைக்காததால் .


[ வலைப்பதிவில் வெளியான பின்பு அக்டோபர் 2014 புதுப்புனல் மாத இதழிலும் வெளியாகியுள்ளது . ]

செவ்வாய், 23 செப்டம்பர், 2014


தொலைந்து போன கேள்விகள் .


தெரியாமல்தான் 
கேட்க வேண்டியதிருக்கிறது 
நிறைய கேள்விகளை .
தெரிந்தும் 
கேட்க வேண்டியதிருக்கிறது 
சில கேள்விகளை சில சமயங்களில் .
கேட்கப் படும் கேள்விகளுக்குத்தான் 
பதில்கள் அளிக்கப் படுகின்றன .
சில சமயங்களில் 
கேட்கப்படாத கேள்விகளுக்கும் 
பதில்கள் அளிக்கவே நேர்கின்றன .
எனினும் 
பல நேரங்களில் 
தெரிந்த பதில்களையும் 
அளிக்க முடியாமல் 
சில கேள்விகள் 
தொலைந்துதான் போகின்றன .

[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 ]

[ நந்தலாலா இணைய இதழ் – 019       ஆகஸ்ட்  – 2014 ]குருவும் சீடனும்  பழம் .

[ உருவகக் கதை ]

சீடன் குருவிடம் சென்றான் .
      குருவின் இருப்பிடமான வட்டப் பாறை காலியாக இருந்தது சீடன் பார்வையை சுழல விட்டான்.
       மேலே பார் . நான் இங்கே இருக்கிறேன் குருவின் குரல் மேலிருந்து ஒலித்தது .
      சீடன் மேலே பார்த்தான் .குரு மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்தார் .     “ மரத்தின் மீதேறி என்ன செய்கிறீர்கள் குருவே ? “
      ” பழங்களை பறித்துக் கொண்டிருக்கிறேன் குருவின் பதில் வழக்கமான புன்னகையோடு வந்தது .
      ” பழத்திற்காக மரமேற வேண்டுமா ? கீழிருந்து கல்லெறிந்தால் பழம் உதிரப் போகிறது . எதற்காக மரத்தில் ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் ? “
       குரு புன்னகைத்தார் .
       “ நன்றாக யோசி . கீழிருந்து கல் எறிவது மேலும் ஆபத்தானது . குறி தப்பி நிறைய தடவை முயல வேண்டியதிருக்கலாம் . பழங்கள் கல்லடி பட்டு சிதைந்து போகலாம் . அப்படி கிடைப்பதுவும் நல்ல பழமாக இல்லாதிருக்கலாம் . கற்கள் பட்டு மரத்தின் இலைகளும் கிளைகளும் சேதப்படலாம் . அது மட்டுமல்ல எறியப் பட்ட கல் பலமான கிளைகளில் பட்டு உன்னையே திருப்பித் தாக்கலாம் . அது இருக்கட்டும். இதோ இந்த பழத்தை ருசித்துப் பார் . குரு நன்றாக பழுத்த ஒரு பழத்தை சீடனிடம் வீசினார் .
      சீடன் இரு கைகளையும் விரித்து , மிகுந்த கவனத்துடன் பழம் சேதமடையாத வகையில் பிடித்துக் கொண்டான் . பின்னர் பழத்தை ருசிக்க வாயருகில் கொண்டு சென்றான் .
      குருவின் புன்னகை உரத்த சிரிப்பாக மாறியது .
      “ பார்த்தாயா , பழம் சாப்பிட கல்லெறிவதை விட எளிதான ஒரு வழி இருக்கிறது . 
      சீடன் திகைப்புடன் மேலே பார்த்தான் .
     “ நாமாக எந்த முயற்சியும் செய்யாமல் , பிறர் முயற்சியால் கிடைக்கும் பழத்தை ருசிப்பது .
     சீடன் கையில் இருந்த பழத்தை வட்டப்பாறையில் வைத்து விட்டு , மரமேறத் தொடங்கினான் .*********************************************************************************