திங்கள், 15 செப்டம்பர், 2014


சப்தங்களில் கரைந்த குரல் .

அம்மன் கோவில் கொடைக்காக
பழையனூர் நீலி வில்லுப் பாட்டு .
பெருமாள் கோவிலில் புதிதாகப் பொருத்திய
ஒலி பெருக்கியில்  உருகி வழியும்
சுப்ரபாதம் .
கர்த்தரை காட்ட உறுதியளிக்கும்
சகோதரரின் உணர்ச்சி உரை .
அல்லாவைத் தொழ பள்ளிவாசலில்
அடிக்குரல் அழைப்பு .
வாக்குக்காக வாக்குறுதிகளை விசிறும்
துண்டணிந்த தலைவர்களின்
நீட்டிய முழக்கங்கள் .
நட்சத்திர நடிகர் , நடிகைக்காக
உயிரளிக்கத் துடிக்கும் கோஷங்கள் .
கூடுதல் சம்பளத்துக்காக கூக்குரலிடும்
தோழர்களின் உரிமை கோரல்கள் .
வீடுகள் தோறும்
முடிவே இல்லாத தொடர்களில்
முடியவே முடியாத அழுகைச் சப்தங்கள் .
இல்லையெனில்
சிக்ஸர்களைத் தொடரும் ஆரவாரங்கள் .
பண்பலை வரிசையில்
இரவும் பகலும் சங்கீத கலக்கல்கள் .
இத்தனைக்கும் மத்தியில்
தெருவோரக் கிழவனின் பசிக் குரல்
யார் காதிலும் விழாமல்
இறந்து போனான் கிழவன்
போன வாரம் .

[ இனிய உதயம் ஜீன் 2014 ]

 நன்றி : இனிய உதயம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக