வெள்ளி, 31 அக்டோபர், 2014

செங்காத்து இதழில் மூவடிகள் மூன்று .


எளிதாகக் கிடைக்கும்
பொழுது போக்கிற்கு
இலவச வரிவிதிப்பு குழந்தை .

அனைவருக்கும் வீடு கட்டித்தர
முயற்சிக்கட்டும் ஒரு மரமல்ல
தோப்பையே உருவாக்குவோம் .

காடுகளழித்து நாடுகளாக்கும்
மனிதன் மிருகமாவதை
தடுப்பதுதான் எப்படி ... ?[ செங்காத்து . செப்டம்பர் அக்டோபர் 2014 ]

வியாழன், 30 அக்டோபர், 2014

தீர்வு

தீர்வு

உளிகளின் மன உளைச்சலால்
சிதைந்து போன
சிற்பங்களின் சிதறல்கள் .
தூரிகைகளின் கோபத்தால்
கலைந்து போன
ஓவியத்தின் கோடுகள் .
வார்த்தைகளின் குழப்பத்தால்
பாதியில் நின்று போன
கவிதை வரிகள் .
நரம்புகள் முறுக்கிக் கொண்டதால்
ஸ்வரம் தவறிய சங்கீதங்கள் .
தோலில் துளை விழுந்ததால்
தடுமாறிய தாளங்கள் .
எல்லாவற்றையும் வாரி அள்ளி
தெருவோரத் தொட்டியில்
போட்ட பின்பு
மேலும் அதிகமாக ஒளிரத்
தொடங்கியது
வானத்து நிலா .

[ கணையாழி மே 2014 ]


புதன், 29 அக்டோபர், 2014

ஓயாத அலைகள்

ஓயாத அலைகள் .

அலைகள் ஓய்வதற்காக
காத்திருக்கிறேன்
ஆனால் 
அலைகள் நான்
ஓய்வதற்காக

இயங்கிக் கொண்டே இருக்கின்றன .

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சங்கப் புலவன் மன்னிப்பானாக


சங்கப் புலவன் மன்னிப்பானாக .யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
உந்தன் சம்பளமும் எந்தன் வருவாயும்
நுந்தை தந்த பெரும் சீரும்
செம்புலப் பெயல் நீர் போல
தாம் கலந்தனவே .

திங்கள், 27 அக்டோபர், 2014

பிம்பம் .


பிம்பம் .

கண்ணாடியில் முகம் பார்க்காமலே
கழிந்து போன காலம் நிறைய உண்டு .
வகிடெடுக்கும் வழக்கம் இல்லாததால்
தலை வாரவும் கண்ணாடி பார்த்ததில்லை .
அகத்தின் அழகு தெரிந்து விடுமோவென்ற
அச்சத்தினாலும் இருந்திருக்கலாம் .
முகமில்லை அகமென்று
உணர்ந்த பின்னும்
ஏனோ கண்ணாடி பார்க்கத்
தோன்றவேயில்லை .
எனினும்
முகம் காணும் வேட்கையில்
கண்ணாடி பார்க்கும் ஆசை
வந்த போது
முகம் தொலைந்து போயிருந்தது .
இப்போதோ
தெளிவான நீரில் கூட
தொலைந்து போன

முகம் தேடும் மனம் .

[ புதுப்புனல் அக்டோபர் 2014 ]ஞாயிறு, 26 அக்டோபர், 2014

படையல்

படையல்

வாழ்ந்த போது
வழங்கத் தவறிய
அத்தனையும் அளித்தாயிற்று
அப்பாவாகவும் அம்மாவாகவும்
உருவகப் படுத்திய
வேட்டிக்கும் சேலைக்கும் .


சனி, 25 அக்டோபர், 2014

கவிச்சூரியனில் கவிதை மூன்று

காலனுக்கும் ஆசை
கவியரசரின்
கவிதை கேட்க .

உலகில் உள்ளோர்
அனைவருக்கும் உணவு
அதுவே நம் கனவு .

வாழ்க்கையிலும் தேவை
வார்த்தைகளிலும் தேவை

சிக்கனம் .கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 26 [ அக்டோபர் 16 - 31 , 2014 ]

வெள்ளி, 24 அக்டோபர், 2014

பாட்டியின் பாம்படம் .

பாட்டியின் பாம்படம் .         சிறுகதை    

பூவரச மரத்து நிழல் இதமாக இருந்தது . முத்தையா பனியனுக்கு மேல் போட்டிருந்த துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டான் .
களத்து மேட்டு மூலையில் பூவரச மரத்தின் அடியில் இருந்த திண்டின் மீது துண்டை விரித்து உட்கார்ந்தான்  .
“ என்ன முத்தையா ! இந்த வருஷம் வெளைச்சல் எப்படி ? “
மண் சுவருக்கு மறுபுறம் கந்தசாமி நின்று கொண்டிருந்தார் .
“ நல்ல வெளைச்சல்தான் அண்ணாச்சி . எனக்கு வெவரம் தெரிஞ்சு இத்தனை மேனி போனதில்லை . இந்த வருஷம் தண்ணி நல்ல நேரத்தில விட்டான் . உரமும் நல்லா புடிச்சுகிச்சு “
“ வெலையும் எக்கச்சக்கமா இருக்குதாம் . நல்ல பார்ட்டியா பார்த்துப் போடு . சவத்துப் பயலுவ ஏமாத்திடுவானுக . “
கந்தசாமி போய் விட்டார் . முத்தையாவுக்கு அப்பா ஞாபகம் வந்தது.
முத்தையா ! மழை இல்லாம பூமியில வெளைச்சல் சரியில்லைன்னு வித்துடாதே . என்னைக்காவது ஒருநாள் அள்ளித் தரும்.“ அப்பா அடிக்கடி கூறுவார் .
அந்த வருடத்து அமோக விளைச்சலைப் பார்க்க அப்பா இல்லாமல் போய் விட்டாரே என்று நினைத்தான் . அப்பாவின் நினைவில் மனம் கனமாகிப் போனது .
முத்தையாவையும் தம்பி பழனியையும் உட்கார வைத்து பரிமாறினாள் லட்சுமி . சாப்பிட்டு விட்டு வாசலில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது கண்ணம்மா ஆச்சி வந்தாள் . முதையாவின் தந்தை வழிப் பாட்டி .
“ ஆச்சி , எங்க போயிட்டு வாறே ? “
“ கோவிலுக்குப் போனன்டா முத்தையா . கூட யாரு பழநியா ? மூதேவி , கீழே இறங்கி உட்காருலே . அண்ணாச்சிக்கு சமமா உட்காருவியோ ? “
“ இருக்கட்டும் ஆச்சி . நீ உட்காருபழநி . ஆச்சி ! இந்த வருஷம் நல்ல வெளைச்சல் . நாளைக்கு நெல்லை வித்ததும் முதல்ல ஒனக்கு தங்கத்துல ஒரு ஜோடி பாம்படம் செஞ்சுடலாம் .
“ அது கிடக்கட்டும் . முதல்ல லட்சுமிக்கு ஒரு சங்கிலி செஞ்சு போடு . எனக்கென்னா கெழவி . “ ஆச்சியின் வார்த்தைகளை மீறி அவளுடைய சந்தோஷம் வெளிப்பட்டது .
“ அதையும் பண்ணிடலாம் . “
பாட்டி உள்ளே போய் விட்டாள் .
நெல் விற்ற பணத்தை முத்தையா எண்ணிப் பார்த்தான் . எட்டாயிரம் இருந்தது .
“ பழநி ! நீ போய் ஆசாரியை வரச் சொல்லிடு . ஆச்சிக்கு பாம்படமும் லட்சுமிக்கு செயினும் செய்யணும் . டவுனுக்குப் போய் தங்கம் வாங்கியாந்திடலாம் . “
தனது ரொம்ப நாளைய ஆசை நிறைவேறப் போகிறது என்ற எண்ணத்தில் ஆச்சி ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் .
“ உங்க அப்பங்கிட்ட சொல்லி சொல்லி சலிச்சுப் போயிட்டேன். அவனைச் சொல்லியும் குத்தமில்லை . வந்த காசு வீட்டு செலவுக்கே சரியாப் போச்சு . மிஞ்சினாத்தானே தங்கத்தில பாம்படமும் ஒட்டியாணமும் . ஏதோ இப்பவாவது நேரம் வந்துச்சே . “
முதையாவிற்கும் சந்தோஷமாக இருந்தது . ஆச்சியின் வெகுநாளைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் போகும் சந்தோஷம் .
இரண்டு நாட்களும் ஆச்சியின் பேச்சு முழுவதும் தங்கப் பாம்படங்களைப் பற்றிதான் . மூன்றாம் நாள் ஆசாரி பாம்படங்களை காகிதத்தில் பொதிந்து கொண்டு வந்தார் . காகிதத்தைப் பிரித்து பாம்படங்களைக் காட்டியதும் ஆச்சியின் உற்சாகம் உச்சத்தை அடைந்து விட்டது .
“ என்னம்மா மின்னுது பாரேன் ! ஏ அப்பா ! தங்கம் நயம்தான் . என்னமா ஜொலிக்குது ! “
பழைய பித்தளைப் பாம்படங்களை கழற்றி விட்டு ஆச்சியின் காதுகளில் தங்கப் பாம்படங்களை மாட்டி விட்டாள் லட்சுமி . கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டினாள் . பாட்டி மின்னும் பாம்படங்களை கண்ணாடியில் பார்த்து பூரித்துப் போனாள் . காதுகளையும் பாம்படங்களையும் மாறி மாறி தடவி விட்டுக் கொண்டாள் .
ஆச்சி பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் போய் தங்கப் பாம்படங்களை காட்டி வரப் போய் விட்டாள் . ஊரிலேயே முதல் தங்கப் பாம்படங்கள் என்ற பெருமையோடு .
அன்று இரவு முத்தையாவும் பழநியும் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் போதே ஆச்சியின் குரல் கேட்டது . கூட இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் . பக்கத்தில் லட்சுமியும் நின்றாள் .
முத்தையாவைக் கண்டதும் ஆச்சியின் குரலில் சோகமும் , எரிச்சலும் அதிகமாயின .
“ முத்தையா ! கேட்டியாலே அநியாயத்தை . நீ ஆசையா வாங்கிப் போட்ட பாம்படத்தை எந்த சண்டாளப் பாவியோ அவுத்துட்டுப் போயிட்டாம்ல . அம்மன் அவனைச் சும்மா விட மாட்டா . அவன் கை புளுத்துப் போகும் . காலு மடங்கிப் போகும் . “
வடக்குத் தெருவில் இருந்த சொந்தக்காரர்களிடம் பாம்படத்தைக் காட்டுவதற்காக போய் விட்டுத் திரும்பும் போது பனையன் மடம் அருகில் ஆச்சியை யாரோ ஒருவன் வழிமறித்து மிரட்டி பாம்படங்களை கழற்றிக் கொண்டு ஓடி விட்டிருக்கிறான் .
ஆச்சியின் புலம்பல் அதிகமானது .
“ சரி ஆச்சி விடு , போனது போனதுதான் . நல்ல வேளை காதோட சேர்த்து பிய்க்காம விட்டானே . நாளைக்கு நம்ம ஆளுங்களை விட்டுத் தேடச் சொல்லுவோம் . திருட்டுப் பய அகப்படாமலா போயிடப் போறான்?
கட்டிலில் வந்து படுத்தான் முத்தையா . பாம்படம் போனதை விட ஆச்சியின் வருத்தம்தான் முத்தையாவை அதிகமாக பாதித்திருந்தது .
கட்டிலில் படுத்ததும் தூக்கம் வரவில்லை . உள்ளே ஆச்சியின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது . திருடனை பலவிதமாக திட்டிக் கொண்டிருந்தாள் .
முத்தையாவின் எண்ணங்கள் வேறு திசையில் ஓடின . எழுந்து உட்கார்ந்தான் . பக்கத்தில் கீழே பாய் விரித்து சாய்ந்திருந்த பழநியும்  எழுந்து உட்கார்ந்தான் .
“ அண்ணாச்சி ! ஆச்சி பாம்படத்தை திருடினது யாரா இருக்கும் ? “
“ தெரியலடா பழநி ! ஆனா ஒண்ணு கவனிச்சியா . இந்த வருஷம் நல்ல வெளைச்சல் . அதனால நம்ப பொருளாதார நெலைமை ஆச்சிக்குத் தங்கத்துல பாம்படம் செஞ்சு போடற அளவுக்கு உயர்ந்திருக்கு . இந்த வருட வருமானத்தில் அது ஒரு சின்ன செலவுதான் . ஆனா அந்த அரைக்காப் பவுன் பாம்படத்தைத் திருடித்தான் சாப்பிடனும்கற அளவுக்கு நாட்டில சில பேரோட பொருளாதார நிலைமை மோசமா இருக்கு பார்த்தியா ? “
“ அது எப்படி அண்ணாச்சி ? திருடறவன் உடலை வருத்தி உழைக்கச் சோம்பேறித்தனம் பட்டு திமிறிலதான திருடறான் . “
“ திருடறது தப்புதாண்டா பழநி . ஆனா இப்படி ஒரு கிழவியோட அரைக்காப் பவுன் பாம்படத்தை ஒருத்தன் திருடுறான்னா அவனோட சந்தர்ப்ப சூழ்நிலைங்க ரொம்ப மோசமாத்தான் இருக்கணும் . வேற வழியில்லாமத்தான் தப்பு பண்றான்ணு தோணுது . உழைச்சு சாப்பிட வாய்ப்பே கெடைக்காதவனா இருக்கலாம் . இப்படி சின்னத் திருட்டில ஆரம்பிச்சு பெரிய திருட்டுக்குப் போகும் போது வேணும்னா அது அவனோட தப்புங்கலாம் . திமிருங்கலாம் . ஆனா இது ... “
முத்தையா பேச்சைத் தொடர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து போனான் . ஒரு பெருமூச்சு வெளிவந்தது . ஆச்சியின் குரல்தான் மெளனத்தை கலைத்தது .
“ முத்தையா ! நாளைக்கு அம்மன் கோவில் பூசாரிகிட்ட மைபோட்டுப் பார்க்கணும்ல . “
சற்றுமுன் பழநியிடம் பேசியவை ஞாபகம் வந்தது . ஆச்சியிடம் அதையெல்லாம் சொன்னால் புரியாது . அவளைச் சமாதானப் படுத்த ஒரே ஒரு வழிதான் தோன்றியது .
“ சரி ஆச்சி . பாத்துடுவோம் . அது கெடைச்சதுன்னா பார்ப்போம் .     இல்லாட்டி ஆசாரிகிட்ட சொல்லி புதுசா வேற ஒரு ஜோடி செஞ்சிடுவோம். 
கொஞ்ச நேரத்தில் ஆச்சி தூங்கி விட்டாள் .
----------- -------------- --------------- --------------
அக்டோபர் 06 – 12 , 1989 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளி வந்த எனது சிறுகதை .
----------- ------------- ------------ -----------------
 

வியாழன், 23 அக்டோபர், 2014

பண்ட மாற்று .

பண்ட மாற்று .

மதுரை வீரனுக்கு
சுருட்டும் சாராயமும் .
மரத்தடி விநாயகருக்கு
நெய் கலந்த வெண்பொங்கல் .
முழிக்கும் முனியப்பனுக்கு
கொளுத்த கிடா .
நாக்கு துருத்திய காளியாத்தாவுக்கு
நல்ல நாட்டுக் கோழி .

களத்தடிப் பெருமாளுக்கு
தாளித்த தயிர்ச் சாதமும்
கொண்டைக் கடலை சுண்டலும் .
சாமிகள் விரும்புவதைப்
படைத்தாயிற்று .
அவரவர் விரும்புவது
அவரவர்க்கு கிடைக்குமென்ற

நம்பிக்கையில் .

[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ]

செவ்வாய், 21 அக்டோபர், 2014

இந்தத் தடவையாவது ...

இந்தத் தடவையாவது ...

“ கொஞ்சம் இருண்ணே . இன்னும் ஒரு டிக்கெட் வரலை . ரிசர்வ் பண்ணது . அஞ்சு நிமிஷம் இருக்கில்ல . பார்த்துட்டுப் புறப்படுவோம் . “ என்றார் நடத்துனர் .
நடத்துனர் அனுமதித்த ஐந்து நிமிடம் முடிந்ததும் ஓட்டுனர் வண்டியை பின்னால் ஓட விட்டு நகர்த்தினார் .
அந்த இளைஞன் ஒரு பெட்டியைத் தூக்கியவாறு திருவள்ளுவரை நோக்கி ஓடி வந்தான் . பெட்டி கனமானதுதான் .
பஸ்ஸில் ஏறியவன் மருதுவின் பெட்டிக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் பெட்டியை வைத்தான் . மருதுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மருதுவைப் பார்த்துப் புன்னகைத்தான் .
மருதுவின் பார்வை அவன் பெட்டியின் மீது பாய்ந்தது . இரண்டு பெட்டிகளும் ஒரே மாடல் . ஒரே கலர் . நடுவில் கூடுதல் பூட்டு வைத்த மாடல் . இரண்டிலும் ஒரே மாதிரி பளபளா .
மருது தீர்மானித்து விட்டான் . இந்த தடவை எப்படியாவது பெட்டியை மாற்றிவிட வேண்டும் .
நடத்துனர் எல்லா டிக்கெட்டுகளையும் பார்த்துவிட்டு விளக்கை அணைத்ததுமே பக்கத்து ஸீட் வாலிபன் சாய்ந்து தூங்கி விட்டான் .
மருதுவுக்குத் தூக்கம் வரவில்லை . சிந்தனை முழுவதும் பெட்டியை மாற்றுவதிலேயே இருந்தது .
பெட்டியை மாற்றும் சிந்தனைகளில் மூழ்கியவாறே தூங்கி விட்டான் மருது .
தூக்கம் கலைந்த போது திருவள்ளுவர் நின்றிருந்தார் . எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள் . பக்கத்து ஸீட் வாலிபன் ஏற்கனவே இறங்கி விட்டிருந்தான் .
மருது தன் பெட்டியை எடுத்துக் கொண்டான் . அவன் திருமணத்திற்கு சென்னை நண்பர்கள் பரிசாகக் கொடுத்திருந்த அந்த பெட்டியில் நடுப் பூட்டு ஆரம்பத்தில் இருந்தே சரியாக வேலை செய்யவில்லை . அதன் பின் நாலைந்து தடவை சென்னை வந்தும் நேரம் கிடைக்காமல் போய் விட்டது . இந்தத் தடவை காலையிலேயே வந்த வேலையை முடித்து விட்டு மத்தியானம் எப்படியும் அந்த கடைக்குப் போய் கியாரண்டி கார்டையும் , பில்லையும் காண்பித்து வேறு பெட்டி மாற்றிக் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு மருது தன் பெட்டியோடு லாட்ஜ் நோக்கி நடந்தான் .
-------------- --------------------- ---------------------
02 . 09 . 1993 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளிவந்த எனது ஒரு பக்கக் கதை .    


திங்கள், 20 அக்டோபர், 2014

நீயும் நானும்

நீயும் நானும்

நீயும்
நானும்
வேறு வேறுதான் .
உடலால் ,
உண்ணும் உணவால் ,
உடுக்கும் உடையால் ,
வசிக்கும் ஊரால் ,
வாழ்கின்ற வாழ்க்கையால் .
எனினும்
உள்ளத்தால் ,
உருவாகும் எண்ணத்தால் ,
பட்ட காயங்களால் ,
படுகின்ற அனுபவங்களால்
நீயும்
நானும்
ஒன்றே
தெரியுமோ ?

[ புதுப்புனல் பிப்ரவரி 2014 ]ஞாயிறு, 19 அக்டோபர், 2014

உற்றுக் கவனியுங்கள் .

 உற்றுக் கவனியுங்கள் .....

உற்றுக் கவனியுங்கள் தலைவரின் வார்த்தைகளை .

கற்றுக் கொள்ள அதில் ஏதுமில்லை எனினும் ;

வெற்றுப் பேச்சு மட்டுமே போதும் - உலகில்

வெற்றி பெற என அது உணர்த்துவதால் .


உற்றுக் கவனியுங்கள் தலைவரின் வார்த்தைகளை .

சனி, 18 அக்டோபர், 2014

நாமும் அவைகளும்

நாமும் அவைகளும் .

எதை நீ அன்பென்கிறாய் ?
உன்னை நேசிக்கும்
அதே அளவில்
இந்த புல்லை ,
அந்த மேகங்களை ,
மின்னும் நட்சத்திரங்களை ,
நிமிர்ந்த மரங்கள் ,
அதன் இலைகள் ,
வீசும் காற்றை
நேசித்தல் தவறா ?
அசைவென்பது
உனக்கு மட்டுமா ?
அசைவும் , உணர்வும்
உள்ள அவைகளுக்கு
நேசிக்கப்படும் தகுதி இல்லையா ?
எனவே
நண்பனே !
புல்லை மிதிக்காதே ...
இலையைப் பறிக்காதே ...
மரங்களை வெட்டாதே ...
இன்னும் ...


[ புதுப்புனல் நவம்பர் 2013 ]        

வெள்ளி, 17 அக்டோபர், 2014

பார்வை - சிறுகதை .


பார்வை .                   சிறுகதை                     

நகரத்திற்கே உரித்தான பரபரப்பு . மாலைச் சூரியனின் மரண அவஸ்தை .
நான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும் ஒருமணி நேரம் கழித்துத்தான் . என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் இப்படி பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் மாலை நேரம்தான் வாழ்வின் நிஜங்களைத் தரிசிக்கும் கணங்கள் .
காகிதங்களுடனும் , எண்களுடனும் அலுவலகத்தில் கழியும்  ‘வயிற்றுக்காக ‘ நேரத்திற்கும் , காற்றில்லாத அறையின் அவலத்தில் ஸார்த்தரின் எழுத்துக்களோடு உறவாடும் ‘ மனதிற்காக ‘ நேரத்திற்கும் இடையில் உள்ள இந்த நேரம்தான் மனித மனத்தின் நிஜமான பக்கத்தைக் காட்டும் புத்தகம் .
எதிரே தெரிகின்ற உயர்ந்த கட்டிடம் . பின்புறம் ஓடும் கழிவுநீரின் கரைகளில் முடங்கியிருக்கும் குடிசைகள் – அதனைச் சுற்றி உழலும் ஒரு தனி உலகம் .
எதிர்ச் சுவரில் பெரிய போஸ்டர் . உடைகளைப் பற்றிக் கவலைப் படாத கதாநாயகி . அவளை விடப் பெரியதான A . அந்தப் படங்களைப் போடுவதற்கென்றே சில தியேட்டர்கள் . அந்தப் போஸ்டர்களை ஒட்டுவதற்காகவே சில சுவர்கள் .
பக்கத்தில் சிறிதாக பகல் காட்சியில் ‘ 7வது மனிதன் ‘ . பிழைக்கத் தெரியாத டைரக்டர் .
பெரிய சதுரத்தை நிற்க வைத்து வர்ணங்களை இறைத்தாற்போல பெட்டிக்கடை . எத்தனை பத்திரிகைகள் ! இலக்கிய ஆர்வம் வளர்கிறது என்ற பெருமிதத்தைக் கொல்வதற்காகவே அவற்றின் பின்னால் கயிற்றில் தொங்கும் சில பத்திரிகைகள் . அவற்றின் அட்டையில் போஸ்டர் கதாநாயகியின் சிறு பதிப்புகள் . பெண்மைக்கு அவை அளிக்கும் விளக்கம் மனதைச் சுடுகின்றது .
திருப்தி அளிக்கும் சிகரெட்டின் பெரிய விளம்பரப் பலகை . உடல் நலத்திற்கு கெடுதி விளைவது பற்றிய உபயோகமற்ற எச்சரிக்கை அதன் மூலையில் .
தினம் தினம் காணும் அசைவில்லாத காட்சிகள் . அவற்றைவிடச் சுவையானவை அவற்றின் பின்னணியில் உலவும் மனிதர்கள் .
பஸ் ஷெல்டரின் மூலையில் இருக்கும் கம்பத்தில் சாய்ந்து நிற்கும் பச்சைப் புடவை . இளம்பெண் .கல்லூரிப் பெண் . அருகில் நின்று கொண்டு வலது கை அவள் தோளில் உரச கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் வாலிபன் . அவர்களுக்கிடையே மெல்லிய குரலில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் முடிவில்லாத உரையாடல் . இடை இடையே பிறக்கும் அடங்கிய சிரிப்பு .
அடிக்கடி அவர்களைத் திரும்பிப் பார்த்தவாறே தனக்குள் எதோ பேசிக் கொள்ளும் வயதானவர் . கையில் குடை , மாத ஜோதிடம் . ரிட்டையர்ட் லைஃபைக் காட்டும் முகம் . அவரிடம் ஏற்படும் உணர்ச்சிகளின் பரிமாணம் எனக்குப் புரியவில்லை .
தலைமுறை வித்தியாசம் உருவாக்கிய வெறுப்பாக இருக்கலாம் . அவள் வயதில் தனக்கிருக்கும் மகள் இதே நேரம் இதே போல எவனுடனாவது நின்று கொண்டிருப்பாளோ என்ற பயமாக இருக்கலாம் .
பார்வையைத் திருப்புகின்றேன் .
வாரப்படாத தலைமுடி , ஷேவ் பண்ணாத தாடி , மீசை , டெனிம் , அலட்சியமாக ஜீன்ஸூள் செருகப் பட்டிருக்கும் சட்டை , கண்களில் ஒளியில்லாத விரக்தி , கையில் ‘ நீட்ஷேயின் கடிதங்கள் ‘ . தன் மீது மோதி திரும்பும் பார்வைகளின் வெறுப்பைக் கண்டு கொள்ளாமல் இடைவிடாமல் புகையும் சிகரெட்டோடு , உடம்பை தளர்த்தி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் இவனை கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த நாளிலிருந்தே இந்த பஸ் ஸ்டாப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
அப்போதெல்லாம் ‘ ரேமன்ஸ் ‘ விளம்பரத்தில் இருந்து கிளம்பி வருவது போல இருப்பான் . கவலைப் படுவது எப்படி என்று ஒரு ஸிம்போஸியமே நடத்தினால் கூட அவனுடைய மகிழ்ச்சி குறையாது என்பதைப் போல அவ்வளவு கலகலப்பாக இருப்பான் .
அவனுடைய மாற்றத்தை விடாமல் கவனித்துக் கொண்டுவரும் எனக்கு அவன் மனதின் பிரளயம் நன்றாகப் புரிகின்றது .
என்ன மச்சி ! நேத்து இண்டர்வியூவிற்குப் போனியா ? “ இந்தக் கேள்வி அவனிடம் கேட்கப்படுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன் .
“ எஸ் “ அமைதியான பதில் . இதுவும் வழக்கமானதுதான் .
“ இப்படியேவா போனே ? “
பதிலாக வரும் அவன் வார்த்தைகள் சுற்றி நிற்பவர்களைப் பாதிக்கின்றது . தங்களது சமூக நியதிகளை அவன் தாண்டி ஓடுவதைப் போல அவனைப் பார்க்கிறார்கள் .அப்படி ஓடத்தான் விரும்புகின்றேன் என்பதைப் போல அவன் அதே அலட்சியத்துடன் புகையை உள்ளே இழுத்து வெளியே விடுகின்றான் .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
கடந்த காலத்தை மறைக்க முயலும் மலிவான அலங்காரங்களோடு , உடம்பின் வளைவுகளாலும் செயற்கை சிரிப்பாலும் தனது தொழிலுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் பெண் . அவளைப் பொறுத்த வரையில் இரவு – பகல் என்பதெல்லாம் அர்த்தமில்லாத வார்த்தைகள். வாழ்வில் வயிற்றின் பங்கை நன்கு உணர்ந்தவள் .
சில சமயங்களில் அவள் கண்களில் தெரிவதைப் படிக்க முயல்வதுண்டு . தெரிவதெல்லாம் அவற்றில் பளிச்சிடும் அழைப்புதான் .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
“ ஹலோ , என்னது இது ? மிஸஸ் துர்க்காராம் பஸ்ஸிற்காக நிற்பது ஆச்சரியமா இருக்கே ! வண்டி என்னாச்சு ? “
நான் மிஸ்ஸ் துர்க்காராமைப் பார்க்கிறேன் . வயதின் மேல் ஏற்பட்ட பயம் அவள் அலங்காரத்தில் தெரிகிறது . பஸ்ஸின் மீது ஏற்பட்ட கோபத்தில் பல்லவனைத் திட்டுவது புரிகின்றது .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
ஒரு மாற்றம் என் மனதை நெருடுகின்றது .
அந்த பஸ் ஷெல்டரின் மூலையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பூட் பாலிஷ் முருகன் அந்த இடத்தில் இல்லை . பதிமூன்று வயதுதான் இருக்கும் . தன் உழைப்பால் வாழ்கிறோம் என்ர பெருமிதத்தில் வறுமையை மறைக்க முயலும் முகம் . நான் அவனது வாடிக்கைகளில் ஒருவன் .
இன்று அவனை வழக்கமான இடத்தில் காணாதது ஏதோ போல் இருக்கின்றது .என்னவாயிற்று அவனுக்கு ?
மனதினுள் ஒரு நெருடல் .
நான் தினம் தினம் காணும் மனித சித்திரங்களில் அவன் சற்று வித்தியாசமானவன் . அழகற்ற கான்வஸில் வரையப்பட்ட அழகான ஓவியம் . சத்தியசோதனையைப் படிக்காமலே வாழ்க்கையை நேர் கோடு ஆக்கிக் கொண்டிருப்பவன் .
“ குட் ஈவினிங் ஸார் ! “
திரும்புகிறேன் . இடது கையில் கூடை . வலது கையில் ஒரு கடலைப் பொட்டலம் . ராமு – ஒவ்வொரு மாலையும் நான் சந்திக்கும் இன்னொரு நேர்கோடு . சின்ன வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கடலைக் கூடையோடு நகரத்தின் மூலைமூலையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை நம்பி ஒரு குடும்பம் . சின்ன வயதில் எத்தனை பொறுப்புகள் .
அவன் நீட்டுகின்ற கடலையை வாங்கிக் கொள்கிறேன் .
“ முருகன் எங்கே ? “
“ காலைல போலீஸ் புடிச்சிட்டுப் போயிட்டாங்க ஸார் . “
“ நிஜமாவா ? “ என் மனதின் நெருடல் விரிகின்றது .
 ஆமா ஸார் . ஒரு வாரமா வருமானமே இல்லைன்னு சொல்லி அழுதான் . பிக்பாக்கெட் அடிக்கப் போறேன்னான் ... எவ்வளவோ சொல்லியும் கேட்கல . “
ராமு டெனிம் ஜீன்ஸிற்கு கடலையோடு புன்னகையையும் சேர்த்துக் கொடுக்கிறான் . இன்னொரு கஸ்டமர் .
“ தாங்க்ஸ் ராமு ! “ டெனிம் ஜீன்ஸ் காசோடு நன்றியையும் அளிக்கிறான் .
ராமுவின் பார்வை மிஸஸ் துர்க்காராம் மீது பதிகின்றது . நகர்கிறான் .
“ கடலை சாப்பிடுங்கம்மா . “
“ நீ விற்கிற கடலையையா ? இப்படி பிளாட்பாரத்தில் விற்பதை எல்லாம் வாங்கித் தின்னா ஊர்ல உள்ள வியாதியெல்லாம் வரும் . கொஞ்சங்கூட சுத்தமில்லாதவங்க . “
ராமு நகர்கிறான் . இளம் கால்களில் வேகம் .
அவனை வெறுப்பாகப் பார்த்துவிட்டு மிஸஸ் துர்க்காராம் காலியாக வரும் ஆட்டோவை கை காட்டி நிறுத்துகிறாள் .
மாற்றத்திற்காக பஸ் பயணம் செய்ய வந்து , பொறுமை இழந்து போய் விட்ட நிலையில் அவசரமாக ஆட்டோவை நோக்கி விரைகின்றாள். ஆட்டோவில் ஏறப் போகும் நேரத்தில் அவளை நோக்கி இரண்டு மெல்லிய கைகள் நீளுகின்றன . வறுமை உடம்பெங்கும் தெரிய நிற்கும் இந்நாட்டு செல்வம் ஒன்று . சகோதர இந்தியன் !
சுண்டி விடப் பட்ட நாணயம் ஒன்று உருண்டோடுகிறது . முழு நாலணா . மிஸஸ் துர்க்காராமின் அலட்சியம் நாணயத்தின் ஒலியில் தெரிகின்றது . குனிந்து பொறுக்கும் விரைவில் அந்தச் சிறுவனின் இல்லாமை தெரிகின்றது .
அந்த நாணயம் பொறுக்கப் படுவதற்கு முன்பே மிஸஸ் துர்க்காராமை நோக்கி நீளும் மற்றொரு கை . மீண்டும் ஒரு நாணயத்தின் உருளல் . ஆட்டோ புறப்படுகின்றது . திரும்பி சாலையின் வாகன வெள்ளத்தில் கலந்து மறைகின்றது .
என் மனதில் நெருடல் அதிகமாகின்றது . சட்டத்தின் பிடியில் முருகன் தெரிகின்றான் . தூரத்தில் நேர்கோடாகச் சென்று கொண்டிருக்கிறான் ராமு.  இந்த நேர்கோடும் உருவம் மாறிவிடலாம் , இல்லை மாற்றப்பட்டு விடலாம்.
பிறரின் இரக்கத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் வரிசையைப் பார்க்கிறேன் . மிஸஸ் துர்க்காராமிடம் நாலணா பெற்ற சகோதர இந்தியர்கள் , வலது கையில் பாதி இல்லாத ஒருவன் , கடந்த காலத்தின் சுவடுகள் முகத்தில் புண்களாக மாறிய பெண் , எதிரில் விழும் நாணயங்களையும் பக்கத்தில் வரும் மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடிகின்ற ஒரு குருடன் . வரிசை நீள்கின்றது . பின்னால் சுவரில் ஏதோ ஒரு ஆண்டின் இலட்சிய வரிகள் நிறம் மாறித் தெரிகின்றது .  இவர்களுக்குத் தேவை ஊக்கம் , இரக்கம் அல்ல .
முருகனும் அந்தப் பெண்ணும் இவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டுத் தெரிகிறார்கள் . அவர்கள் உரு மாறியவர்கள்தான் . ஆனால் சமூகத்தின் இரக்கத்தை நம்பி வாழாமல் தங்கள் மன வலிமையால் வாழத் துணிந்துவிட்ட சுயமரியாதைக்காரர்களாகத் தெரிகிறார்கள் . எங்கோ படித்த வரிகள் நினைவில் மோதுகின்றன . சமுதாயம் குற்றங்களை உருவாக்குகிறது . குற்றவாளிகள் அவற்றை செய்து முடிக்கிறார்கள் .
உண்மைதான் . இவர்கள் உருவாகவில்லை . உருவாக்கப் படுகிறார்கள் .
“ ஏ சமுதாயமே ! உன்னிடம் இருந்து உருண்டோடும் நாணயங்கள் உண்மை உழைப்பிற்கு கூலியாக மாறட்டும் . சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கும் போலி கௌரவமாக இருக்க வேண்டாம் . “
மனதின் குரல் வலியை ஏற்படுத்துகிறது .
“ உன் வக்கிர எண்ணங்களால் நேர்கோடுகளை உருமாற்றி சிதைத்து விடாதே . அவர்களும் மனிதர்கள்தான் . சத்திய சோதனையை வாழ்க்கையாக்கிக் கொள்ள அவர்கள் மகாத்மாக்கள் இல்லை . “
டெனிம் ஜீன்ஸ் கையில் சிகரெட்டோடு அப்படியே நின்று கொண்டிருக்கிறான் . மனதின் குமுறல் சிகரெட் புகையாக வெளியேற வெறித்த பார்வையோடு நின்று கொண்டிருக்கிறான் .
அன்றைய வருமானத்தை அளிக்கப் போகும் எவனோ ஒருவனுடன் அந்தப் பெண் பக்கத்துச் சந்தில் மறைகிறாள் . நான் வந்து நிற்கும் பஸ்ஸில் ஏறிக் கொள்கிறேன் .
----------- ------------ ------------ -------------
“ வட்டங்கள் – சதுரங்கள் – முக்கோணங்கள் “ என்ற தலைப்பில் நடத்தப் பட்ட சிறுகதைப் போட்டியில் பிரசுரத்திற்கு தேர்வாகி 20. 05 .1983 தேதியிட்ட தினமணி கதிர் வார இதழில் வெளிவந்த எனது சிறுகதை .  
------------------------------------------------------------------------------------------------------     

    

வெள்ளி, 10 அக்டோபர், 2014

காலத்திரயம்


காலத்திரயம்
நேற்று
நடந்ததைப் பேசிப் பேசியே
வயதாகி விட்டது .
இன்றைய தினத்திலும்
நேற்றைய தினத்தைத்
தோண்டுவதால்
இன்று என்பதே
இல்லாமற் போயிற்று .
நாளைய தினத்திலும்
நேற்றைய தினமே
தூவப்படும் என்பதால்
நாளையும் இல்லாமல்
போய்விடக் கூடும் .
எனினும் ...
எப்போதும் ...
நேற்று
என்பது இனிமைதான் .

[ புதுப்புனல் நவம்பர் 2013 ]       


வியாழன், 9 அக்டோபர், 2014

புறமும் உள்ளும்


புறமும் உள்ளும்

வெளியே
மேகத்தில் மறைந்த
வெளிறிய நிலா .
இருளில் ஓளிந்த  மரங்கள் .
வேலியில் உதிர்ந்த மலர்கள் .
உடைகளில் தொலைந்த மனங்கள்
சப்தங்களில் கரைந்த சங்கீதங்கள் .
வார்த்தைகளால் வீரியமிழந்த
கவிதைகள் .
நிழல்கள் நிஜமாகி
நிஜங்கள் கரைந்து போன
கோட்டோவியங்கள் .
சாளரங்களே இல்லாத
அறையின்
நான்கு சுவர்களுக்குள்
தனியாக அவன் .

[ புதுப்புனல் பிப்ரவரி 2014 ]