புதன், 8 அக்டோபர், 2014

குருவும் சீடனும் – ஒளி வட்டம் .

குருவும் சீடனும் ஒளி வட்டம் .

சீடன் குருவைத் தேடிச் சென்றான் .
குரு அவரது இருக்கையான வட்டப்பாறையருகில் நின்று கொண்டு , வட்டப் பாறையில் இருந்த ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் . சீடனைப் பார்த்ததும் புன்னகைத்தார் .
“ நான் சீடனாக இருப்பதை வெறுக்கிறேன் . எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் . எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுப்பீர்களா குருவே ? “
எனக்கே ஒன்றும் தெரியாது . உனக்கெப்படி நான் கற்றுக் கொடுப்பது ? “ குருவின் புன்னகை விரிந்தது .
“ உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும் . உங்களால் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க முடியும் . உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள எவ்வளவு காலமானாலும் நான் இங்கேயே காத்திருக்க தயாராக உள்ளேன் . முடிவே இல்லாமல் தேடிக் கொண்டிருக்க இனி என்னால் இயலாது . “
“ என் மீது நம்பிக்கையில்லையா ? உனக்கு தெரியாத எதுவும் எனக்கு தெரியாது . நீ உன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது போல் நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் . அவ்வளவுதான் . “
“ ஆனால் நான் குழப்பத்தில் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு நீங்கள் தெளிவை உண்டாக்கியிருக்கிறீர்கள் . எனது குழப்பங்களை நானே தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன் . அதற்கு நீங்கள் உதவ வேண்டும் . ‘
குரு வட்டப் பாறை பக்கம் பார்வையைத் திருப்பினார் .பட்டாம்பூச்சி அங்கு இல்லை .
“ அந்த பட்டாம்பூச்சி எங்கு சென்றது ? “ குரு கேட்டார் .
“ எனக்கு தெரியாது . நான் உங்கள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் . அது பறந்து போனதை கவனிக்கவில்லை . “
“ எனக்கும் அது எப்போது போனது , எங்கே போனது என்பது தெரியாது . இப்போது சொல் . உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? “ குருவின் புன்னகை மேலும் விரிந்திருந்தது .
“ நான் இது போன்ற விஷயங்களைப் பற்றி கூறவில்லை . நான் உள் மனதைப் பற்றிய உண்மைகள் குறித்து பேசுகிறேன் . நான் வாழ்க்கை பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . “
“ வாழ்க்கை குறித்த அனைத்து உண்மைகளையும் உணர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ? “ குரு புன்னகை மாறாமல் கேட்டார் .
“ நிச்சயமாக . இருந்திருக்கிறார்கள் ;  இப்போதும் இருக்கிறார்கள் . ஏன் நீங்கள் இல்லையா ? “ சீடனின் குரலில் நம்பிக்கை தொனித்தது .
குரு தனது இருக்கையான வட்டப் பாறையில் அமர்ந்தார் .
“ அப்படிப் பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது ? “ குருவின் புன்னகை மாறவே இல்லை .
  அவர்களின் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் தெரியும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் . “
“ என் தலையைச் சுற்றி ஏதேனும் ஒளி வட்டம் தெரிகிறதா ? “
“ ஆமாம் . சீடனின் பதில் எந்த வித தயக்கமுமில்லாமல் வந்தது . “ அதனால்தான் நான் உங்களைத் தேடி வந்தேன் .
குருவின் புன்னகை மாறி , உரத்த சிரிப்பு வெளியானது .
“ பார்த்தாயா , என்னால் பார்க்க முடியாத ஒன்றை உன்னால் பார்க்க இயலுகிறது . இப்போது சொல். யாருக்கு அதிகம் தெரிந்திருக்கிறது ? உனக்கா அல்லது எனக்கா ? “

சீடன் சிறிது நேரம் திகைத்து நின்றான் . பின்னர் எதையோ உணர்ந்து கொண்டவனாக அமைதி நிறைந்த மனதோடு திரும்பி நடக்க ஆரம்பித்தான் .   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக