சனி, 29 நவம்பர், 2014

சும்மா தமாசுக்கு..... ரெட்டை வாசல் .


சும்மா தமாசுக்கு..... ரெட்டை வாசல் .

அது கட்சியின் தலைமை அலுவலகம் . அதில் தலைவருக்கென்று தனி அறை . சகல வசதிகளுடன் உள்ள அந்த பிரமாண்டமான அறையில்தான் தலைவர் தொண்டர்களையும் , கட்சிக்காரர்களையும் சந்திப்பார் . அந்த அறைக்கு இரு வாசல்கள் . இரு கதவுகள் . ஒன்று அகலம் குறைந்தது . இன்னொன்று மிக அகலமானது . இரண்டுமே பக்கத்துப் பக்கத்தில் அமைந்திருக்கும் . அநேகமா அனைவரும் உள்ளே வருவதும் போவதும் அகலம் அதிகமான வாசல் வழியேதான் . அகலம் குறைந்த வாசல் சும்மாவாகவே இருக்கும் . கட்சிக்காரர்களுக்கும் , தொண்டர்களுக்கும் வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம். எதற்காக இரண்டு வாசல்கள் ? ஒன்று போதாதா ?  ஆனால் தலைவரிடம் கேட்க பயம் . தப்பாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று . தேசீயக் கட்சியின் தலைவர் ஒருவர் முதன் முறையாக தலைவரைப் பார்க்க வந்தார் ஒரு நாள் . அவருக்கும் அந்த சந்தேகம் வந்து விட்டது . ஆளும் தேசீயக் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே , அதனால் பேச்சு வார்த்தைகள் முடிந்து கிளம்பும் போது தைரியமாக தனது சந்தேகத்தை கேட்டு விட்டார் . தலைவரின் பதில் தயங்காமல் சட்டென்று வந்தது . “ முதல்ல ஒரு வாசல் மட்டும்தான் வச்சு கட்டினேன் . அந்த சின்ன வாசல் . கட்சி ஆரம்பிச்ச புதுசில ஒரு பிரச்சினையும் இல்லை . எல்லோருமே அந்த வாசலைத்தான் பயன்படுத்தினோம் . ஆனால் கட்சி வளர வளர , பாருங்க நம்ம ஆளுங்களாலே அந்த வாசலுக்குள்ள நுழைந்து வர முடியல . அதான் அவங்க அகலத்துக்கேற்ற மாதிரி அகலத்தைக் கூட்டிட்டேன் . சொல்லப் போனா என்னாலயே அந்த சின்ன வாசல் வழியா நுழைய முடியாது . ஆனா இப்பவும் கட்சியோட அடிமட்டத் தொண்டர்கள் அந்த வாசல் வழியாவே வந்திடராங்க.”  தேசீயக் கட்சி தலைவர் கை குவித்து விடை பெற்றுக் கொண்டு அகலம் அதிகமான வாசல் வழியாகத்தான் வெளியே போனார் .
----------------------------------------------------------------------
[ படித்து முடித்ததும் நியூட்டன் ஞாபகமும் , பூனைக்குட்டிகள் ஞாபகமும் வந்தால் அது என் தப்பில்லை . நியூட்டன் மற்றும் அவர் வளர்த்த பூனைக்குட்டிகளின் தவறுதான் . ]
 --------------------------------------------------------------------

புதன், 26 நவம்பர், 2014

சும்மா தமாசுக்கு.....கங்காரு கதை .


சும்மா தமாசுக்கு.....கங்காரு கதை .

புதிதாய் பதவி ஏற்ற ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஓர் ஆசை வந்தது . உலகில் உள்ள அத்தனை நாட்டு தலைவர்களையும் அழைத்து ஒரு விருந்து கொடுக்க வேண்டும் . அத்தனை நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பினார் . குறிப்பிட்ட நாளில் அத்தனை நாட்டுத் தலைவர்களும் ஆஸ்திரேலியாவில் குவிந்து விட்டனர் . இதுவரை உலகில் எங்குமே நடந்திராத அளவில் மிகச் சிறந்த விருந்தாக அமைந்திருந்தது . அத்தனை பேரின் பாராட்டுகளும் ஆஸ்திரேலிய பிரதமரின் உள்ளத்தை குளிர வைத்துவிட்டது . விருந்தின் முடிவில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் . தங்களது அன்பால் நானும் ஆஸ்திரேலிய மக்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் . உங்கள் அனைவருக்கும் ஒரு பரிசு தர விரும்புகிறேன் . உங்களது விருப்பத்தை கூறினால் பரிசுகள் இன்னும் சில தின்ங்களில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் . நன்றாக யோசித்து தங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் . எதுவாக இருந்தாலும் தங்களது பரிசு நிச்சயமாக அளிக்கப்படும் . “ ஒருவர் ஒருவராக தாங்கள் விரும்பும் பொருளைக் கூறக் கூற பிரதமரின் உதவியாளர் குறித்துக் கொண்டார் . நம்ம ஆளு [ இந்திய தலைவர் ] ஒவ்வொருவர் ஆசையையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்தார் . கடைசியாக தன் விருப்பத்தை வெளியிட்டார் . “ எனக்கு இரண்டு கங்காருகள் வேண்டும் . ஒன்று இருப்பதிலேயே பெரிய பை உடையதாகவும் இன்னொன்று இருப்பதிலேயே நன்றாக தாவிக் குதிப்பதாகவும் இருக்க வேண்டும் . “ ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஒரே ஆச்சரியம் . மற்றவர்கள் எல்லாம் விலை உயர்ந்த பரிசுகளை விரும்பும் போது , இவர் மட்டும் இங்கு ஏராளமாக கிடைக்கும் கங்காருவைக் கேட்கிறாரே , காந்தி பிறந்த நாட்டுக்காரர் என்பதனால் மிக எளிமையான பரிசை விரும்புகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டார் . என்றாலும் நம்மவர் அருகில் சென்று மிக மெல்லிய குரலில் தன் சந்தேகத்தைக் கேட்டு விட்டார் . நம்மவரும் மெல்லிய குரலில் பதில் கூறினார் . “  பெரிய பை உள்ள கங்காரு கட்சி தாவும் சபலத்தில் உள்ள என் கட்சிக்காரர்களை போட்டு அமுக்கி வைப்பதற்கு . நன்றாக தாவக் கூடிய கங்காரு எதிர் கட்சிக் காரர்களுக்கு என் கட்சிக்குத் தாவுவதற்கு பயிற்சி கொடுப்பதற்கு .  சரிந்து விழுந்த ஆஸ்திரேலிய பிரதமரை அவரது உதவியாளர் தாங்கிப் பிடித்துக் கொண்டார் .   
-----------------------------------------------------------------------------------------------------------------------------

[ முகநூலில் பதிவு செய்தது . ]செவ்வாய், 25 நவம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 28 [ நவம்பர் 16 - 30 , 2014 ] - இதழில் வெளிவந்த எனது ஹைக்கூ கவிதைகள் .கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 28 [ நவம்பர் 16 - 30 , 2014 ] - இதழில் 

வெளிவந்த எனது ஹைக்கூ கவிதைகள் .

தேசீய ஒருமைப் பாட்டு தினம்

மொழி வேறுதான்
இனம் வேறுதான்
மனம் ஒன்றுதானே ?

இனத்தை மறந்து விடு
மொழியைத் துறந்து விடு
உணர்வால் ஒன்று படு .

உயிரற்ற சாலைகள் கூட
இணைந்தேயிருக்கின்றன
மனிதர்களுக்குப் பாடமாய் .

கலைவாணர் பிறந்த தினம் .

கலைவானில் பறந்தார்
கருணையால் உயர்ந்தார்
மனதில் நிற்கிறார் என்.எஸ்.கே .

மறைந்தார் கலைவாணர்
மறையாத சிந்தனைகளால்
நிலைத்து நிற்கிறார் .

மாட்சுவோ பாஷோ நினைவு தினம் .

மூவடி படிமங்கள்
வெளிச்சமாய் இன்றும்

பாஷோ ஏற்றிய தீபங்கள் .

திங்கள், 24 நவம்பர், 2014

நேற்று பார்த்த நதி .


நேற்று பார்த்த நதி .


நேற்று பார்த்த நதி
இன்று இங்கில்லை
தூரத்தை
முன்னே தள்ளி
காலத்தை
பின்னே நிறுத்தி
ஏற்படும்
இடமாற்றத்தில்
எதிர் படலாம்
அதே நதி
இன்னொரு இடத்தில் .
ஆனால்
நதியென்பது
நீர் மட்டுமன்றி
நீர் சார்ந்திருக்கும்
நிலமும்
நீர் தொடும் கரைகளும்
கரை வாழ் மனங்களும்
என்பதினால்
நேற்று பார்த்த நதியை
மீண்டும் காண்பது
சாத்தியமே இல்லைதான் .

[ புதுப்புனல் நவம்பர் 2014 ]


ஞாயிறு, 23 நவம்பர், 2014

நிறைவு .

நிறைவு .

இடுப்பில் தூக்கி
கொஞ்சிக் கெஞ்சிய போதும் ,
நிலாவைக் காட்டி
பாட்டுப் பாடி
ஊட்டிய போதும் ,
சாப்பிட்டதும் சாக்லேட்டென்று
ஆசை காட்டிய போதும் ,
தெருவோரக் கிழவனைக் காட்டி
பூச்சாண்டியென மிரட்டிய போதும்
சோறுண்ண மறுத்த குழந்தையின்
வயிறும் மனமும்
ஒரு சேர நிரம்பியது
தான் நீட்டிய இலைகளை
மென்று தின்று பசியாறிய
ஆடுகளைப் பார்த்த போது .
[ புதுப்புனல் நவம்பர் 2014 ]


சனி, 22 நவம்பர், 2014

சும்மா தமாசுக்கு..... நவீன துரோணர் .

இந்திய வில்வித்தை வீரர் ராகுல் பானர்ஜி தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தார் . சென்னைக்கு வெளியே அவ்வளவாக பரபரப்பு இல்லாத ஓரிடத்தின் இயற்கையான சூழ்நிலை அவருக்குப் பிடித்துப் போனது . தினமும் அந்த பாதை வழியே இருபுறமும் தென்பட்ட இயற்கை அழகை ரசித்தவாறே நடக்க ஆரம்பித்தார் . ஒருநாள் அவர் கண்ணில் பட்ட அந்த காட்சி அவரை அப்படியே வியப்பில் மூழ்க வைத்துவிட்டது .
மரங்கள் அடர்ந்த ஓரிடம் . இரு மரங்களுக்கிடையே கனமான வெள்ளைத் திரை கட்டப் பட்டிருந்தது . திரை முழுவதும் வில்வித்தைக்கான வட்டக் குறிகள். ஒவ்வொரு குறியின் நடுமையத்திலும் குறிபார்த்து எய்யப்பட்ட அம்புகள் . ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார் . இத்தனை வருடமாக பயிற்சி எடுக்கும் தனக்கே சாத்தியமாகாத திறமை உடையவர் யாராக இருக்கும் என நினைத்தவாறே சுற்றிலும் பார்த்தார் .
 சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி மரத்தில் சாய்ந்திருந்த உருவத்தைப் பார்த்தார் . அவரது பக்கத்தில் ஒரு வில்லும் சில அம்புகளும் இருந்தன . அருகில் சென்ற போது ஒரு பிரபல நடிகர் என்பது புரிபட்டது . தமிழ் நடிகர்தான் . ஆனாலும் அவர் படங்கள் நிறைய ஹிந்தியில் டப் செய்யப் பட்டிருந்ததால் பானர்ஜிக்கு அடையாளம் தெரிந்து விட்டது . [ பெயர் வேண்டாமே . வேண்டுமா ? சரி குமுதம் பாணியில் ஒரு க்ளூ . தமிழின் முதல் எழுத்தில் ஆரம்பமாகும் பெயருடையவர் . போதுமா ? ]
கண்களை மூடிச் சாய்ந்து கொண்டிருந்தவரை எழுப்பலாமா என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் கண்களை திறந்து விட்டார் . பானர்ஜி வணக்கம் சொல்லி விட்டு தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நடிகரும் பதில் வணக்கம் சொன்னார் .
“ அய்யா , இந்த அம்புகள்... “
நடிகர் இலேசான புன்னகையுடன் “ ஆமாம் நான் எய்ததுதான் “ என்றார் .
இவ்வளவு திறமை உள்ள நீங்கள் முயற்சி செய்தால் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று விடலாமே . “
நடிகர் புன்னகைத்தார் உதடுகளை விரிக்காமல் . “ எனது ஆர்வம் எல்லாம் சினிமாதான் .அதிலேயே எனக்கு மனத்திருப்தி , பணம் , புகழ் எல்லாமே கிடைக்கும்போது வேறு எதிலும் எனக்கு ஆசை இல்லை .” 
சரி அய்யா , எனக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுக்க முடியுமா ? உங்களிடம் பயிற்சி எடுத்தால் நிச்சயமாக என்னால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியும் என்று தோன்றுகிறது . ”  என்றார் பானர்ஜி .
“ எனது பிஸி ஷெட்யூலில் அதற்கெல்லாம் நேரம் கிடைக்காது . “
“ அப்படியானால் தயவு செய்து எப்படி இவ்வளவு குறி பார்த்து அம்பு எய்வது என்று சில டிப்ஸாவது தர முடியுமா ? “ பானர்ஜி கெஞ்சுவது போலக் கேட்டார் .
சாய்ந்திருந்த நடிகர் நிமிராமலே சொன்னார் . “ அது வெகு சுலபம் . முதலில் அம்பை எய்து விட வேண்டும் . பின் அம்பைச் சுற்றி வட்டங்களை வரைந்து விட வேண்டியதுதான் . “  அவருக்கு சற்றுத் தள்ளி ஒரு காலி பெயிண்ட் டப்பா உருண்டு கிடந்தது . மயங்கி விழப்போன பானர்ஜி சமாளித்துக் கொண்டு நடையைக் கட்டினார் .

[ முகநூலில் பதிவு செய்தது ]வெள்ளி, 21 நவம்பர், 2014

பொடி விஷயம் .


                      
                      பொடி விஷயம் .                       

காலையில் கிளம்பும் போதே பரபரப்போடுதான் கிளம்பினார் ரங்கசாமி . ஆறு மாதமாக காலியாக இருந்த பக்கத்து இருக்கைக்கு இன்று புதிதாக ஆள் வருகிறான் .
அலுவலகத்தில் அவர் பிரிவில் இரண்டு கண்காணிப்பாளர் பதவிகள் . ஒன்று காலி . ரங்கசாமிதான் ஆறு மாதமாக கூடுதல் பொறுப்பில் அந்த இடத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .
கால் மணி நேரத்திற்கு முன்பே இருக்கையில் இருந்தார்  ரங்கசாமி . ஐந்து நிமிடத்தில் புதியவனும் வந்து விட்டான் .
வந்தவுடன் அறிமுகம் செய்து கொண்டான் . இருவரும் சென்று மேல் அதிகாரிகளை பார்த்து விட்டு வந்தார்கள் .
இருக்கையில் அமர்ந்ததுமே வெற்றிலை போட ஆரம்பித்தான் . அவருக்கும் நீட்டினான் . பெட்டியை இருவருக்கும் நடுவில் இருந்த ரேக்கில் வைத்தான் .
கால் மணி நேரம் கழிந்ததும் ரங்கசாமிக்கு மூக்கு அரித்தது . கை அனிச்சை செயலாக ரேக்கிற்கு நீண்டது . வழக்கமாக வைக்கும் இடத்தில் பொடி டப்பா இல்லை . .திரும்பிப் பார்த்தார் . டப்பாவில் இருந்து உரிமையோடு எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான் .
பொடி டப்பாவை அவன் ரேக்கில் வைத்ததும் அவசரமாக எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார் .
கால் மணி நேரம் போயிருக்கும் பொடி உறிஞ்சும் ஓசை கேட்டுத் திரும்பினார் . அவன்தான் .
அதன் பின் கால் மணி நேரத்திற்கு ஒரு தடவை பொடியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் . போற போக்கில் பயல் டப்பாவை காலி பண்ணி விடுவான் போலிருந்தது .
மாலையில் அவசரமாக பொடி டப்பாவை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டார் . டப்பா அநேகமாக காலி . நாளை டப்பாவை பைக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் . கொஞ்சமும் நாசூக்கு இல்லாத பயல் .
வீட்டிற்குள் நுழையும் போதே மனைவியின் குரல் ஒலித்தது .
ஆபிஸ்ல எப்படி வேலை ஓடுச்சு ? பொடி டப்பாவை எடுக்காமலேயே போயிட்டிங்களே . “ மனைவி கையில் அவரது பொடி டப்பா .
அவரது கை பைக்குள் அதே போலிருந்த டப்பாவை வருடியது .  
 [ நவம்பர் 21 – 27 , 2014 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளிவந்த எனது சிறுகதை . ] 
                                    வியாழன், 20 நவம்பர், 2014

சும்மா தமாசுக்கு. - சட்டை .

சும்மா தமாசுக்கு . - சட்டை 

அவர் பிரபலமான தேசீயத் தலைவர் .  குஜராத்தைச் சேர்ந்தவர் . தீபாவளிக்கு அவருக்கு பிடித்த ஒரு துணி வாங்கினார் . அந்த துணி வகையில் அதுதான் கடைசி இருப்பு . தீபாவளி நேர நெருக்கடியில் பின்னால் தைத்துக் கொள்ளலாம் என்று வைத்து விட்டார் . தீபாவளி முடிந்ததும் அவருடைய ஆஸ்தான தையற்காரரிடம் சென்றார் . துணியை அளந்து பார்த்துவிட்டு , “ அய்யா , துணி உங்களுக்குப் பற்றாதுஎன்று கூறி விட்டார் . தலவருக்கோ வருத்தம் . பிடித்தமான துணியில் சட்டை தைக்க முடியாமல் போய் விட்டதே என்று . எதற்கும் இருக்கட்டும் என்று வேறு சில தையற்காரர்களைப் பார்த்தார் . எல்லோரும் அதையேதான் சொன்னார்கள் . துணி உங்களுக்குப் பற்றாது . சில தினங்களுக்குப் பிறகு மும்பைக்குப் போன போது துணியை கூடவே எடுத்துச் சென்றார் . அங்குள்ள பிரபல தையற்காரர்களும் துணி பற்றாது என்று சொல்லிவிட தலைவர் மனம் உடைந்து போனார் . அடுத்த வாரம் ஹரியானா பயணம் . அங்கே உள்ள தையற்காரர்களிடம் இருந்தும் அதே பதில்தான் . தலைவர் சோகமாகி விட்டார் . மனதிற்குப் பிடித்த துணியில் சட்டை தைத்துப் போட முடிய வில்லையே என்று . எனினும் மனம் தளரவில்லை . ஒரு மாதம் கழித்து சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை . விடாமல் துணியையும் எடுத்துச் சென்றார் . சென்னையின் பிரபல தையற்கலைஞரைச் சந்தித்து துணியை கொடுத்தார் . சென்னை தையற்காரர் அந்தத் துணியில் அழகான சட்டை ஒன்றை தைத்துக் கொடுத்து விட்டார் . கச்சிதமாகப் பொருந்தியிருந்த அந்த சட்டையைப் பார்த்ததும் தலைவருக்கு ஒரே ஆச்சரியம் . குஜராத்திலும் , மகாராஷ்டிராவிலும் , ஹரியானாவிலும் பற்றாத துணி இங்கு எப்படி எனக்கு சரியாக இருக்கிறது!  “ என வியந்து போனார் . சென்னை தையற்காரர் அமைதியாகச் சொன்னார் : “ அங்கு எல்லாம் நீங்க பெரிய ஆளாக இருக்கலாம் . ஆனால் இங்கு அப்படி இல்லை . “           


 [  முகநூலில் பதிவு செய்தது  ]

புதன், 19 நவம்பர், 2014

கொஞ்சம் ஹைக்கூ ....

                         கொஞ்சம் ஹைக்கூ ....
வெட்டப் படுகின்றன குளங்கள்
நிரப்பப் படுகின்றன
சிலரின் பணப்பைகள் .

தீராப்பசி தீர்ந்து விட்டது
இதர செலவுக்கும் பணம்
நாளை தேர்தல் .

பாற்கடல் கடையப் பட்டது
பாத்திரம் மாறிப் போனது
விஷமாயிற்று அமிர்தம் .

விடிய விடிய மழை
பாப்பாவுக்கு கவலை
கப்பலுக்கு காகிதம் இல்லை .


கறுப்பு வெள்ளை
கட்டங்கள் அதேதான்
ஆட்டம்தான் வேறு .

நட்டது வாழை
பழுத்தது பலா
மண் மாறியதால் .

செவ்வாய், 18 நவம்பர், 2014

ஏமாற்றம் .- பாக்யாவில் என் கவிதை .

ஏமாற்றம் .

ஏனோ தெரியவில்லை
பாட்டி வடை சுடத்
துவங்கவில்லை இன்று .
எண்ணெய் வாங்க மறந்ததினாலோ
அல்லது
உடம்புக்கு முடியாமல் போனதினாலோ
இருக்கலாம் .

காகம் கூட பறந்து விட்டது
வேறு இரை தேடி .

மரத்தடியில்
அமர்ந்திருந்த நரி
சோர்ந்து போய் விட்டது .

கதைக்காக
காத்திருந்த குழந்தை
இன்னொரு பாட்டியின் மடியில்
தூங்கி விட்டது
ஏமாற்றத்தோடு .


[ நவம்பர் 21 – 27 , 2014 பாக்யா ] 

திங்கள், 17 நவம்பர், 2014

கொஞ்சம் ஹைக்கூ ....


கொஞ்சம் ஹைக்கூ ....

மழை இருந்தது
விளைநிலம் இருந்தது
வயிறு மட்டும் இருக்கின்றது .

பெரிதாகிறது வீடு
அதிகமாகிறது வெற்றிடம்
வீட்டிலும் மனதிலும் .


தெருவெங்கும் பிளாஸ்டிக்
சுற்றுச் சூழலுக்குக் கேடு
இன்றைய பசி தீர்ந்தது .

கீதை பைபிள் குரான்
எல்லாமே ஒன்றுதான்
பழைய பேப்பர் வியாபாரி .

தடங்கள் அதேதான்
கழிந்தன வருடங்கள்
பாதங்கள் மட்டும் வேறு .


கீதை பைபிள் குரான்
எல்லாமே ஒன்றுதான்
பழைய பேப்பர் வியாபாரி .


ஞாயிறு, 16 நவம்பர், 2014

உலக சைவ உணவாளர்கள் தினம் .கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்

உலக சைவ உணவாளர்கள் தினம் .


உண்பது உயிர் வாழ
உண்போம் சைவம்

இன்னொரு உயிரும் வாழ .

இருப்பது ஆறறிவு
பசிதீர மட்டும்
ஐந்தறிவா ?

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

சனி, 15 நவம்பர், 2014

மன்னித்து விடு பாரதி .

  மன்னித்து விடு பாரதி .

காற்று இனிது .
என் கூரையை அடித்துச் செல்லாத வரை .
தீ இனிது .
என் வீட்டை எரிக்காத வரை .
மழை இனிது .
என் இல்லம் ஒழுகாத வரை .
மின்னல் இனிது .
என் பார்வையைப் பறிக்காத வரை .
இடி இனிது .
என் தலையில் இறங்காத வரை .
கடல் இனிது .
என்னை இழுத்துச் செல்லாத வரை .
காடு இனிது .
நான் திக்குத் தெரியாது தவிக்கும் வரை .
எல்லாமே இனிதுதான்
என்னைப் பாதிக்காத வரையிலும் .

மன்னித்து விடு பாரதி ,
நான் சாதாரண மனிதன்தான் .

[ புதுப்புனல் அக்டோபர் 2014 ]


வெள்ளி, 14 நவம்பர், 2014

விட்டுப் போன ' பின் குறிப்பு ' .

விட்டுப் போன   ' பின் குறிப்பு ' .

எத்தனை விதமான 
சமையல் குறிப்புகள் !
வாய் வழியாகத்தான் 
தொடங்கியிருக்க வேண்டும் .
பாட்டி அம்மாவுக்கும் ,
அம்மா மகளுக்கென்றும் .
பின்னர் நளன் பெயரைச் சொல்லி 
ஆண்களும் விற்பன்னர் ஆனது 
காலத்தின் கட்டாயம் -
இயற்கையின் நியதி கூட .
பத்திரிகைகளில் ,
பின்னர் வானொலியில் ,
தொடர்ந்து தொலைகாட்சிகளில் .
இப்போது இணையத்திலும் கூட .
விதம் விதமாக 
சைவமும் அசைவமுமாக .
தொகுப்பான குறிப்புகள் 
தோரணமாகத் தொங்குகின்றன 
புத்தகக் கடைகளில் .
ஆனால் 
எல்லா சமையல் குறிப்புகளிலும் 
விட்டுப் போய் விடுகிறது ஒரு 'பின் குறிப்பு '
சமைத்த பின் அன்பையும் சேர்த்துப் 
பரிமாறினால் மேலும் கூடும் சுவை ".


[ புதுப்புனல் ஆகஸ்ட் 2014 ]


வியாழன், 13 நவம்பர், 2014

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

வளர்ப்போம்
வியத்தகு நகரங்களை

கூடவே மானுடத்தையும் .

நகரங்கள் விரிகின்றன
சுருங்குகிறது
மனித மனம் .

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ் 27 [ நவம்பர் 1 - 15 , 2014 ]

புதன், 12 நவம்பர், 2014

தொடர்ந்து படிகளில் ஏறி . . .

தொடர்ந்து படிகளில் ஏறி . . .        சிறுகதை  .   

“ அவனுக்கு என்ன வயசாகுது ? “
“ இருபத்தஞ்சு இருக்கும் . கல்யாணம் ஆகலே . அலையற வயசு . அந்த டாக்டருக்கும் மானமில்லாமப் போச்சு . அவனே அந்தப் பொண்ணை மாடிக்கு அனுப்பிவைப்பான் போல இருக்கு . “
“ டெளரி ப்ராப்ளம் ஈஸியா ஸால்வாயிடுதுன்னு நினைக்கிறானோ?
தொடர்ந்து கரகரத்த குரலில் கேட்ட சிரிப்பு என்னுள் சுட்டது . பாஸ்டர்ட்ஸ் !
“ அவன் எங்கே சார் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான் . சும்மா கொஞ்ச நாளைக்குதான் . “
“ பக்கத்தில இருக்கற உங்களுக்கெல்லாம் சங்கடமா இருக்குமே ?
“ இருக்காம . அதுவும் அவனும் அதுவும் சேர்ந்து சிரிக்கிற சப்தம் கேட்கறப்ப உடம்பெல்லாம் குத்தும் . வெளியே வந்துட்டா ஏதோ யோக்கியன் மாதிரி தள்ளி நின்னுதான் பேசுவான் . உள்ளே என்னன்ன அசிங்கம் நடக்குதோ ! பக்கத்தில உள்ளவங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறாங்க . “
அதானே . கொஞ்ச நாளில விஷயம் வெளியே தெரிஞ்சிடும் . “
“ அதுக்கு முன்னாடியே நாமா வேற இடத்துக்குப் போயிடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன் . இதைப் பார்த்து நம்ம பொண்ணுங்களும் கெட்டுடறதுக்கு முன்னால நாமா விலகிக்கிறது நல்லது இல்லையா ? “
நான் இருக்கும் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி இருந்த சிவராமன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார் .
மனதினுள் ஏற்பட்ட வெறியை அடக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன் .
வழி முழுவதும் மனதில் குழப்பம் .
“ ச்சீ ! எப்படி இவர்களால் இவ்வளவு அசிங்கமான எண்ணங்களை மனதில் உருவாக்க முடிகிறது ! “
தினமும் மாடிப்படி ஏறும்போதே கீழே இருந்து கேட்கும் உமாவின் குரல் காதில் ரீங்காரமிட்டது .
“ குட் ஈவினிங் “
எவ்வளவு வித்தியாசமான பெண் ! உருவத்தால் மட்டுமில்லை ; மனதாலும் அழகானவள் .
உமாவைப் பற்றிய நினைவுகள் சிவராமன் பேச்சால் மனதில் ஏற்பட்டிருந்த கசப்பை விரட்டியடித்தன .
மூன்று மாதங்களுக்கு முன்னால் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இடத்தில் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த போதுதான் டாக்டர் எனக்கு அறிமுகமானார் . மாடியில் பயன்படுத்தாமல் கிடந்த அறையை எனக்கு வாடகைக்கு விட்டார் .
அந்த பழக்கம் வெறும் வாடகைக் கணக்கோடு நின்றுவிடவில்லை . பழகியவர்களை விட்டு வெகு தூரத்திற்கு வந்திருந்ததனால் மனதில் ஏற்பட்டிருந்த தனிமை உணர்வுகளை எவ்வளவு எளிதாக விலக்கிவிட்டார்கள் டாக்டரும் அவர் மனைவியும் .
அன்பை மட்டும்தான் தந்தார்கள் அவர்கள் . அன்போடு ஆச்சரியத்தையும் தந்தாள் உமா . டாக்டரின் மகள் . இந்துமதியின் கற்பனைகளில்கூட உருவாக முடியாத ஒரு பெண் ஜீனியஸ் , ப்ளஸ் டூ படிக்கும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு விஸ்தாரமான சிந்தனைகளா ! ஆக்கரீதியான அவளது சிந்தனைகள் , விஸ்தாரமான விவாதங்கள் , அறிவு பூர்வமான உரையாடல்கள்... பதினைந்து வயதில் இப்படி ஓர் அறிவுஜீவியா ! சுயமாக சிந்திக்கத் தெரிந்த காலம் முதல் என் மனம் தேடிக்கொண்டிருந்த ஒரு துணையை அவளிடம் கண்டபோது வெகு எளிதாக என்னை அவளோடு இணைத்துக் கொண்டேன் .
மாடி அறைக்கு நான் குடிபுகுந்த மாலை டாக்டரோடு என் அறைக்கு வந்தவள் நான் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்து வியந்தாள் .
“ வாட் எ லவ்லி கலெக்‌ஷன் . இதையெல்லாம் எனக்குப் படிக்க்க் கொடுப்பீங்களா ? “
நான் இலேசாகச் சிரித்தேன் .
“ தீஸ் ஆர் நாட் மில்ஸ் அண்ட் பூன் டைப்ஸ் . எல்லாமே ஹெவி சப்ஜெக்ட்ஸ் . உனக்கு போரடிக்கும் . “
அவள் முகம் வாடியது .
“ இல்லை அங்க்கிள் . ஹெவி சப்ஜெக்ட்ல எனக்கு ரொம்ப இண்ட்ரஸ்ட் . இந்த ஊரில இத மாதிரி சப்ஜெக்ட் எல்லாம் கிடைக்கறதே இல்லை . அப்படியே எனக்குப் புரியாட்டாகூட உங்களுக்கு டைம் கிடைக்கறப்போ உங்ககிட்டே கேட்கலாமே . “
நான் டாக்டரைப் பார்த்தேன் . புன்னகை செய்தார் .
“ ஸோ , மை கிரேஸி டாட்டர் ஹேஸ் காட் எ கிரேஸி கம்பானியன் அட் லாஸ்ட் . “
“ அங்கிள் ! உங்ககிட்டே நீட்ஷே வொர்க்ஸ் இருக்குதா ? நீட்ஷே படிக்க ரொம்ப ஆசை . ஆனால் இதுவரைக்கும் எதுவுமே கிடைக்கலே . அப்பாகிட்டே கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு . “
நான் எதுவும் பேசாமல் Ecce Homo – வை எடுத்து நீட்டினேன் . வாங்கியவள் தாங்க்ஸ் சொல்லிவிட்டுப் போய்விட்டாள் .
மறுநாள் மாலை நான் படிகளில் ஏறும்போது குட்ஈவினிங் சொன்னவள் என்னுடன் மாடிக்கு ஏறிவந்தாள் .
“ நீட்ஷே ரொம்ப போரடித்து விட்டாரா ? “
“ போரா ? கொயட் இன்ட்ரஸ்டிங் . எப்படி இவ்வளவு வித்தியாசமா அவரால திங்க் பண்ண முடிஞ்சதுன்னு ஆச்சரியமா இருக்கு . “
அதன்பின் ஒவ்வொரு நாளும் அவள் புதுப்புது உமாவாகத் தோன்றினாள் எனக்கு . ஃப்ராய்டையும் ஜங்கையும் வேறுபடுத்தும் உமாவாக ; ஸார்த்தேக்கு புதுக்கோணத்தில் விளக்கம் அளிக்கும் உமாவாக; பைரனையும் , கீட்ஸையும் படித்து மனமுருகும் உமாவாக ...
அந்தப் பதினைந்து வயது மனதின் உண்மை விஸ்தீரணம் என்னைப் பிரமிக்க வைத்தது .
என் மனதில் வரையப்பட்டிருந்த அழகான ஓவியத்தை எவ்வளவு எளிதாகச் சிதைத்துவிட்டார்கள் .
நோ ! அந்த அழகான ஓவியம் சிதைந்து விடக்கூடாது . என்னோடு பேசுவதால் உமாவின் பெயருக்கு இழுக்கு வருமென்றால் இனி அவள் என்னோடு பேசவே வேண்டாம் . எங்கள் சந்திப்புகள் அவளைப் பார்த்து மற்ரவர்களைச் சிரிக்க வைக்குமென்றால் இனி அந்தச் சந்திப்புகள் நிகழவே வேண்டாம் .
சாப்பிட்டுவிட்டு , வீட்டிற்குத் திரும்பியபோது உமா தூங்கிவிட்டிருந்தாள் . டாக்டர் மட்டும்தான் விழித்துக் கொண்டிருந்தார் .
“ என்ன இவ்வளவு லேட் ? உமா ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தா . ஜான் லாக் படிச்சுட்டு ஏதோ சந்தேகமாம் . “
“ ஸாரி . ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஃப்ரண்டைப் பார்த்தேன் . பேசிக்கிட்டுருந்ததில் நேரம் போனதே தெரியலை . “
வேகமாகப் படியேறியவன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டு படுக்கையில் விழுந்தேன் . தூக்கம் வரவில்லை . முடிவில்லாத குழப்பங்கல் .
காலையில் சீக்கிரமாக எழுந்து , உமாவின் பார்வையில் படுவதைத் தவிர்த்து வெளியேறி , மாலை நேரங்களைக் குளக்கரையின் தனிமையில் கழித்து , இரவு தாமதமாக அறைக்குத் திரும்பி ... அந்த மூன்று நாட்களில் என் மனதில் வலி பெரிதாகிவிட்டிருந்தது .
மூன்றாவது நாள் இரவு அறைக்குத் திரும்பியபோது பாரபட்  சுவரில் உட்கார்ந்திருந்த உமா என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் .
“ என்ன , இரண்டு நாளா இவ்வளவு லேட் ? “
“ ஃபிலிம் போயிட்டேன் . அது சரி , நீ இன்னும் தூங்கலே ? “
“ நாளைக்கு லீவ்தானே . “
என்னோடு அவளும் உள்ளே வந்தாள் . வெளிச்சத்தில் என்னைப் பார்த்ததும்  அவள் குரலில் ஏற்பட்ட மாற்றம் என்னை மேலும் பாதித்தது .
“ ஏன் இப்படி இருக்கீங்க ? ‘
நான் வாழ்க்கையில் முதன் முதலாக அழுதேன் . சிவராமனின் வார்த்தைகளால் ஏற்பட்டிருந்த பாதிப்பை அவளிடம் கொட்டினேன் .
அவள் மிக இலேசாகச் சிரித்தாள் .
“ அங்க்கிள் ! அவங்க நம்மை சரியாகப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களேன்னு இவ்வளவு வருத்தப்படறீங்களே ... பட் , நீங்களும் அவங்களைச் சரியாப் புரிஞ்சிக்கிடலையே . அவங்க பேச்செல்லாம் வெறும் வார்த்தைகள்தான் . வெறும் வார்த்தைகளால் களங்கப்படற அளவுக்கு நம்ம நட்பு பலவீனமானதில்லை . சராசரி மனித மனத்தில் பிறக்கும் சாதாரண எண்ணங்களுக்காக நம்மோட அசாதாரணமான நட்பை நாமே சிதைச்சுக்கணுமா ... சும்மா மனசைக் குழப்பிக்காம நல்லா தூங்குங்க . நாளைக்கு பேசிக்கலாம் . குட்நைட் . “
அவள் இறங்கிப் போய்விட்டாள் . அவளது அருகாமையால் , அவளது குரலால் இறக்கப்பட்டிருந்த கனம் மீண்டும் என் மனதி புகுந்துகொண்டது .
மறுநாள் காலையில் உமா எழுவதற்கு முன்னரே வெளியே கிளம்பிவிட்டேன் . பாய் கடையில் சிகரட் பற்றவைத்துக்கொண்டு நகர்ந்தபோது ஷீ லேஸ்கள் அவிழ்ந்திருப்பது கண்ணில் பட்டது . வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்த அவசரத்திலும் , குழப்பத்திலும் கவனிக்காமலேயே வந்துவிட்டிருக்கிறேன் .
லேஸ் முடிச்சைப் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது தெருவில் திருப்பத்தில் இருந்து வந்த குரல்கள் காதில் நுழைந்தன .
“ ஏண்டி சரோஜா , அந்த சாவித்ரியம்மா வூட்ல வேலைக்குப் போகாம நின்னுட்டியாமே . சம்பளம் சரியா தரலையா ? “
சாவித்ரியம்மா , சிவராமனின் மனைவி .
“ த்தூ ... எவ்வளவு சம்பளம் தந்தாலும் அந்த வூட்டுக்கு நான் வேலைக்குப் போகமாட்டேன் . மனுஷனா அவன் ? அன்னிக்கு அந்தம்மா ஊருக்குப் போயிருக்கே , வீட்டைத் தெளிச்சு ஒரு கோலம் போடலாம்னு  போனேன் . அந்த ஆளு கதவைச் சாத்திட்டு எங்கிட்டே பேசின பேச்சு ... சை ... யாரு பண்ண புண்ணியமோ அன்னிக்கு தப்பிச்சேன் . வெளியே தெரிஞ்சா அந்தம்மா வருத்தப்படுமேன்னு சும்மா இருக்கேன் . அந்த விவஸ்தை கெட்ட மனுஷன் வீட்ல இனி எப்படி வேலை பாக்குறது ? “
உமா சொன்னதுபோல் , இவர்களின் உண்மை உருவங்களை இனங் கண்டுகொள்ளாமல் நானாகவே மனதில் வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன் . உமா அளவிற்கு மனதால் பக்குவமடைய நானே இன்னும் வெகுநாட்கள் காத்திருக்க வேண்டும் .
திரைகளை அடுத்தவர்கள் போட்டுக்கொண்டிருப்பதாகப் பிரமைகளை ஏற்படுத்தும் இந்தச் சிவராமன்களுக்கு மத்தியில்தான் வாழவேண்டும் . தங்களை மறைக்க திரைகள் போட்டிருந்தால்கூடப் பரவாயில்லை . எளிதில் இனங் கண்டு கொள்ளலாம் . திரைகளையே உடைகளாக அணிந்திருக்கும் கபட வேஷதாரிகள் இவர்கள் . இவர்களிடம் இருந்து காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு , ஒரு அழகிய மலரின் இதழ்களை நானே பிய்த்துப் போட நினைத்துவிட்டேனே .
நான் திரும்பி வீட்டை நோக்கி நடந்தேன் .
“ இன்னைக்கு ஹாலிடேன்னு மறந்திட்டீங்களா ? “
புதிதாக விரிந்த மலராக உமா புன்னகையோடு கேட்டாள் .
“ எஸ் . சின்ன குழப்பம் . வா . ஜான் லாக்ல என்ன சந்தேகம் ? கமான் , டெல் மீ . “
அவள் என்னைத் தொடர்ந்து படிகளில் ஏறி வந்தாள் .
------------ ---------------- -------------- ------------
08 . 11 . 1981 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்த எனது சிறுகதை .