புதன், 31 டிசம்பர், 2014

” சாமியாடி .” - சிறுகதை

            சாமியாடி .              -  சிறுகதை           
     
      ஞாயிற்றுக் கிழமை . கல்லூரி விடுமுறை . விடுதி சப்தமே இல்லாமல் இருந்தது . அப்பாவிடம் இருந்து வந்திருந்த கடிதத்தை சந்திரன் மீண்டும் ஒருமுறை வாசித்தான் .
நம்ம ஊரு செல்லியம்மன் கோவில் கொடை வழக்கம் போல இங்கிலீசு பத்தாம் தேதி ஆரம்பிச்சு மூணு நாள் நடக்கப் போகுது . ஊர்ல சரியா மழை இல்லாததால இந்த வருசம் நல்லா சிறப்பா கொண்டாடுதுன்னு ஊர்ல முடிவு எடுத்து வரியும் அதிகமா வாங்கியாச்சு .  நீயும் வந்தா நல்லாருக்கும்னு உங்கம்மா நினைக்கா . எனக்கும் அந்த ஆசை இருக்கு . எப்படியாவது லீவு போட்டுட்டு வரப்பாரு . “
வழக்கம்போல அப்பா ஊரைப் பற்றியும் , வீட்டைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டு கோவில் கொடையைப் பற்றிக் கூறி முடித்திருந்தார் .
சந்திரனுக்கும் ஆசைதான் . இதுவரை செல்லியம்மன் கோவில் கொடைக்கு அவன் ஊரில் இல்லாமல் இருந்ததே இல்லை . பிளஸ் டூ வரைக்கும் உள்ளூரிலோ அல்லது பக்கத்து ஊரிலோதான் படிப்பு  . ஆனால் இப்போது நானூறு மைல் தாண்டி ஹாஸ்டலில் .. போக வர ஐந்து நாட்கள் ஆகும் . நினைத்துக் கூட பார்க்க முடியாது .
செல்லியம்மன் கோவில் கொடை மூன்று நாட்களும் எப்போதுமே சுவாரசியமான விஷயம் . கரகம் , வில்லுப்பாட்டு , அம்மன் சப்பர உலா,  கபடிப்போட்டி , கிடா வெட்டு  என்று ஊரே அல்லோல கல்லோலப் பட்டு விடும் .
தேதி எட்டு . இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன . சிவராமன் , கருப்பசாமி , முத்தையா ... கூடப்படித்த அத்தனை பயல்களும் ஊரில்தான் கிடக்கிறார்கள் . ப்ளஸ் டூவில் கம்மி மதிப்பெண்கள் வாங்கி பக்கத்து ஊரில் கலைக் கல்லூரி . அவனைத் தவிர அத்தனை பேரும் கொடையில் அமர்க்களப் படுத்திக் கொண்டிருப்பார்கள் .
அப்பாவின் கடிதத்தை கையில் வைத்தவாறே தூங்கி விட்டான் . முந்திய நாள் இரவு வெகுநேரம் முழித்துப் படித்த களைப்பு வேறு கண்களை சொருக வைத்து விட்டது .
மச்சி , என்னா இப்படித் தூங்கறே ?  ஹாஸ்டலே அமளி துமளியாக் கிடக்கு . நீ ஜம்னு மல்லாந்து படுத்து குறட்டை விட்டுக்கிட்டு இருக்கே . “  அறை நண்பன் மகேஷ் குரல் சந்திரனின் தூக்கத்தை கலைத்தது .
தேர்ட் இயருக்கும் ஃஃபைனல் இயருக்கும் தகறாறு நடந்துச்சில்ல , இன்னைக்கு காலைல மல்லிகா தியேட்டர்ல வச்சு தேர்ட் இயர் சண்முகத்தை நாலஞ்சு ஃபைனல் இயர் பசங்க சேர்ந்து வெட்டிட்டாங்களாம் . பெரிய பிரச்சனை ஆயி அடிதடி ஆயிட்டுது . நெறயப் பேரு ஆஸ்பத்திரில இருக்காங்களாம் . ஹாஸ்டலுக்குள்ள போலீஸ்லாம் வந்திருக்கு . எல்லாருமே உடனே ஹாஸ்டலைக் காலி பண்ணனுமாம் . “
பேசியவாறே மகேஷ் கட்டிலுக்கடியில் இருந்து பெட்டியை இழுத்தான் .
அப்ப கொடைக்குப் போயிடலாம் . “ என்றவாறே எழுந்தான் சந்திரன் .
உங்களுக்கெல்லாம் பரவாயில்ல ஊருக்கு போயிட்டு எப்ப கூப்பிட்டாலும் உடனே புறப்பட்டு வந்திரலாம் . நான் டெல்லிக்குல்ல போகணும் . போயிட்டு கூப்பிட்டவுடனே எங்க வரமுடியும் . போறதுக்கே டிக்கட் கிடைக்காது . பேசாம வெளியே ரூம் போட்ற வேண்டியதுதான் . ஆமா என்னமோ குடைன்னு சொன்ன மாதிரி இருந்திச்சு ? “
சந்திரன் உடைகளை பைக்குள் திணித்தவாறே கோவில் கொடை பற்றிச் சொன்னான்
“ சந்து , நானும் உன் கூட வந்திரட்டா ? நான் இந்த கொடை மாதிரி விழாவெல்லாம் பார்த்ததே கிடையாது . “ மகேஷ் சந்திரனைப் பார்த்தான் .
சந்திரன் சில விநாடி தயக்கத்திற்குப் பிறகு தலை ஆட்டினான் .
என்ன யோசிக்கிறே ? “
“ இல்ல , நீ டெல்லில பிறந்து டெல்லிலயே வளர்ந்தவன் . எங்க ஊரு ரொம்ப சின்ன கிராமம் . பட்டிக்காடு . உன்னால அங்க தங்க முடியுமான்னுதான் யோசிச்சேன் . “
“ அதெல்லாம் நான் பாத்துக்கிறன் . “ 
மகேஷ் பெட்டியை மூடிவிட்டு தோள் பையில் பொருட்களைத் திணிக்க ஆரம்பித்தான் . விலையுயர்ந்த நிக்கான் காமிராவை உள்ளே வைத்து மூடினான் .
விடுதிக்கு வெளியே வந்து நாயர் கடையில் தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டார்கள் . மகேஷ் சிகரட் பற்ற வைத்துக் கொண்டான் .
 “ இப்ப கிளம்பினா நெல்லைக்கே ராத்திரி ஆயிடும் . அங்கேயிருந்து எங்க ஊருக்கு எட்டு மணிக்கு மேல பஸ் கிடையாது . “ சந்திரன் நாயர் கடை கடிகாரத்தைப் பார்த்தவாறே சொன்னான் .
“ அப்ப ராயல்ல மாட்னி பார்த்துட்டு ராத்திரிச் சாப்பிட்டுட்டு கிளம்புவோம் . “ என்றான் மகேஷ் .
பரோட்டா சாப்பிட்டுவிட்டு பேருந்தில் ஏறும் போது இலேசாக தூறல் விழுந்தது . நடுவரிசையில் இடம் கிடைத்தது . அநேகமாக எல்லாமே கல்லூரி ஆட்கள்தான் . பேருந்தில் பாதி விளக்குகள்தான் எரிந்தன .
“ நான் ஆணையிட்டால் .... “ பாடல் அலற ஆரம்பித்தது . ஒட்டுனரோ அல்லது நடத்துனரோ எம் ஜி ஆர் ரசிகராக இருக்க வேண்டும். தொடர்ந்து “ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை ...
பாட்டுச் சப்தத்தில் தூக்கம் வரவில்லை . வெகு நேரம் சந்திரனும் மகேஷும் ஊரைப் பற்றியும் கொடை விழா பற்றியும் பேசிக் கொண்டே இருந்தார்கள் .
“ அப்ப நிக்கானுக்கு நிறைய வேலை இருக்கும் போல இருக்க . மகேஷ் சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றியது . பாட்டு நின்றதுமே மகேஷ் தூங்கி விட்டான் . சந்திரனுக்கு தூக்கம் வரவில்லை . மகேஷ் கூட வருவதற்கு சம்மதம் சொல்ல சிறிது தயங்கியது மனதைக் குடைந்தது . கிராமத்திற்கு அவனை கூட்டிச் செல்ல யோசித்தற்கு காரணம் பட்டிக்காட்டு ஊரையும் அதன் மக்களையும் பார்த்து அவன் கேவலமாக நினைத்து விடுவானோ என்பது . மகேஷ் தமிழ்நாட்டுக்காரன்தான் . ஆனால் அப்பா மத்திய அரசில் பெரிய பதவியில் இருப்பதால் அவன் பிறந்தது , வளர்ந்தது எல்லாமே டெல்லியில்தான் . நல்ல கல்லூரி என்பதால் இடம் கிடைத்து வந்துவிட்டான் .
சில மாதங்களுக்கு முன்னால் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து பணம் கட்டிவிட்டு விடுதி அறைக்கு வந்த போது மகேஷ் ஏற்கனவே அதே அறையில் இருந்தான் . இருவருக்கான அறை அது .
ஜீன்ஸ் பேண்ட்டும் , பச்சை டீ ஷர்ட்டுமாக கையில் ஒரு ஆங்கில புத்தகத்தோடு இருந்த அவனைப் பார்த்ததும் சந்திரனுக்கு இலேசாக நடுக்கமே வந்துவிட்டது .
கிராமத்தில் தமிழில் படித்துவிட்டு , கிராமத்தன்மை மாறாமல் இருக்கும் அவனை ஏற்கனவே நகரம் பயம் காட்டியிருந்தது . இதில் இப்படி ஒரு அறை நண்பன் ! எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று குழம்ப ஆரம்பித்துவிட்டான் .
ஆனால் ஒரே வாரத்தில் அப்படி நினைத்ததற்காக வெட்கப்பட வைத்து விட்டான் மகேஷ்.  மிகமிக நாகரீகமானவன் என்றாலும் சந்திரன் நிற்கும் படிக்கு இறங்கிவந்து அவனையும் தன் அளவிற்கு கிட்டத்தட்ட கொண்டுவந்து விட்டான் அந்த சில மாதங்களில் . அவனுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதோடு நிற்காமல் , அவனுக்கு சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக் கொடுத்து பலவகைகளிலும் அவனது மனதில் இருந்த பயத்தை விரட்டி அவனை கிட்டத்தட்ட ஒரு நகரவாசியாக்கிவிட்டான் .
அதனால் கிராமவாழ்வை நிச்சயமாக கேவலமாக நினைக்க மாட்டான் என்று நினைத்தவாறே தூங்கி விட்டான் .
நன்றாக விடிவதற்கு முன்பே நெல்லை வந்து விட்டது . ஊருக்கு முதல் வண்டி ஜங்ஷன் வழியாகத்தான் என்பதால் ஜங்ஷனிலேயே இறங்கினான் .
வெளியே வந்து ஒரு கடையில் வட்ட டபராவில் காப்பி குடித்து விட்டு எதிர்ப் புற சாலையில் நடக்கத் தொடங்கினார்கள் . இரு புறமும் அந்த நேரத்திலேயே சூடாக இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது .
 ரயில் நிலையம் வரை போய் விட்டு திரும்பி பஸ் ஸ்டாண்ட் வந்த போது என்.ஜே.டி. வண்டி உள்ளுக்குள் நுழைந்தது . கூட்டம் அவ்வளவாக இல்லை . ஏறி முன் வரிசையில் உட்கார்ந்தார்கள் .
பத்து நிமிடம் கழித்து கிளம்பிய போது வண்டி ஓரளவிற்கு நிரம்பி விட்டது . வழியில் உள்ள ஊர்களின் பெயர்களை மகேஷிற்கு கூறியவாறும் , ஊரில் உள்ள தன் நண்பர்களைப் பற்றி பேசியவாறும் வந்ததில் பயணக் களைப்பு தெரியவில்லை .வழி பூராவும் கட்டிடங்கள்தான் . காலியாகக் கிடந்த இடங்களை கருவை முள் புதர்கள் ஆக்ரமித்திருந்தன .
ஒரு காலத்தில ரெண்டு புறமும் வயல்கள்தான் . பச்சைப் பசேல்னு இருக்கும் . மழை சரியா இல்லாம விவசாயம்லாம் போச்சு . எல்லாரும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க .
ஆற்றுப் பாலம் வந்ததும் சந்திரன் எழுந்து ஓட்டுனர் அருகில் சென்றான் .
“ அண்ணே , தேரடி ஸ்டாப்ல இறங்கணும் . “
சரியாக தேரடி மண்டபத்திற்கு நேராக வண்டி நின்றது . இருவரும் இறங்கிக் கொண்டதும் வண்டி கிளம்பியது .
வா மாப்ள , நீ எப்படியும் வந்திடுவேன்னு காலைலதான் சொல்லிக்கிட்டிருந்தேன் . கரெக்டா வந்திட்டே . “ தேரடி மண்டபத் திண்ணையில் இருந்து குதித்தான் சிவராமன் .
 “ எலே சந்திரா வந்துட்டியா ? “ கருப்பசாமியும் முத்தையாவும் ஓடி வந்தார்கள் .
“ வணக்கம் ப்ரதர் . “ மகேஷ் மூன்று பேர்களின் கையைப் பற்றிக் குலுக்கினான் . சந்திரனுக்கு அவன் அப்படி சகசஜமாக பழகியது சந்தோஷமாக இருந்தது . மனதில் இருந்த பயம் விலகிப் போயிருந்தது . மகேஷ் கிராமத்திற்கு பழகி விடுவான் என்று தோன்றியது .
ஊர் திருவிழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது தெரிந்தது . பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள காலி இடத்தில் நாலைந்து ராட்டிணங்கள் பொருத்தப் பட்டிருந்தன . அவற்றைச் சுற்றி சிறுவர்களும் , சிறுமிகளும் . அவர்களைப் பார்த்ததும் ராட்டிணத்தை விட்டு விட்டு அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள் .
கற்பூர நாயகியே ... கனகவல்லீ ... வெவ்வேறு திசையில் இருந்து ஒலிபெருக்கிகள் பாடல்களை மிதக்க விட்டுக் கொண்டிருந்தன . அம்மன் கோவிலுக்குப் போகும் வழியை சுத்தம் செய்து மண் பரப்பியிருந்தார்கள் .
”  நாங்க கொண்டுவாறோம் . “ மூவரும் ஆளுக்கொரு சாமானை தூக்கிக் கொண்டார்கள் .
“ மாமோவ் , யாரு வந்திருக்கான்னு பாருங்க . “ வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே சிவராமன் உரத்த குரலில் செய்தி சொன்னான் .
“ அட சந்திரன் . பதிலைக் காணுமே , வரமாட்டேன்னுலா நினைச்சேன் .
சந்திரன் மகேஷை அறிமுகப் படுத்திவிட்டு கல்லூரியில் நடந்த பிரச்சினை குறித்தும் அதனால் எதிர்பாராமல் கிடைத்த விடுமுறை குறித்தும் கூறினான் . மகேஷ் கூட வர ஆசைப் பட்டதையும் சொன்னான்.
அம்மா கொடுத்த காப்பியை குடித்தார்கள் . “ ரொம்ப நல்லாருக்கும்மா . வீட்டு காப்பி குடிச்சு ரொம்ப நாளாச்சு . “
மேலவாய்க்காலிற்குப் போகும் போது சந்திரனின் மனம் மீண்டும் சஞ்சலப் பட்டது . காலைக் கடனை வெற்று வெளியில் கழிப்பது மகேஷிற்கு பழக்கம் இல்லாத விஷயம் . ஆனால் ஊரில் எந்த வீட்டிலும் கழிப்பறை கிடையாது . “ மகேஷ் , உனக்குதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும் . வெளியிலதான் ...
மேலவாய்க்கால் படித்துறையில் ஆண்களும் . பெண்களுமாய் பத்து பேருக்கு மேல் குளித்துக் கொண்டிருந்தார்கள் . “ முன்னல்லாம் வருசத்ல ஒரு மாசம் தவிர மற்ற நேரமெல்லாம் தண்ணீ ஃபுல்லா ஓடும் . “
மேலும் சற்று தூரம் போய் கருவை அடர்ந்திருந்த இடத்தைக் காட்டினான் . “ இங்கேதான் ... “ மகேஷ் சிகரட் பற்ற வைத்துக் கொண்டான் . வாய்க்காலில் ஓரமாக இறங்கி கால் கழுவிக்கொண்டு திரும்பும் போது இருந்த இன்னொரு மதகுச் சுவர் பக்கம் நின்றான் .      “ இங்கே குளிச்சுடலாம் . அங்கே கூட்டமா இருக்கு . “
அந்த இடத்தில் இரண்டு சிறுவர்கள் மட்டும் கோமணத்தோடு குளித்துக் கொண்டிருந்தார்கள் .
“ ஓடற தண்ணியில குளிக்கிறது சுகமாத்தான் இருக்கு . “ மகேஷ் அனுபவித்துக் குளித்தான் . “ போதும் மகேஷ் , புதுத் தண்ணி சில சமயம் ஒத்துக்காது .
வீட்டிற்கு வந்த போது அப்பா இல்லை . அம்மா தட்டைப் போட்டாள்.
சூடாக இட்லிகளை வைத்தாள் . தாளித்த தேங்காய் சட்னியும் , தக்காளி மிதக்கும் சாம்பாரையும் ஊற்றினாள் . “ கூச்சப் படாம கேட்டு வாங்கிச் சாப்பிடு தம்பி . வெளிச் சாப்பாடு சாப்ட்டு வாயில்லாம் வறண்டு கெடக்கும் .
மகேஷ் சாப்பிட்ட விதத்தில் அவனது மன நிறைவு தெரிந்தது .
 “ சும்மா கொஞ்சம் தூரம் நடந்துட்டு வாறோம் . “ வெளியே வரும் போது மூன்று பேரும் வந்து விட்டார்கள் . கூடவே இன்னும் நாலு நண்பர்கள் .
வீடு திரும்பிய போது அப்பா வந்திருந்தார் . நிறைய நண்பர்கள் இருந்ததால் பேச்சு சுவாரசியமாக இருந்தது . இடை இடையே அப்பா , அம்மா , தம்பி , தங்கை வந்து போனார்கள் . உள்ளிருந்து கோழிக் குழம்பு வாடை விசாரித்தது .
“ சமையல் முடிஞ்சுது . சூடா சாப்டலாம் வாங்க . நீங்க எல்லோருமே இங்கேயே சாப்டலாம் . “ அம்மா கையை புடவையில் துடைத்தவாறே வந்தாள் .
“ இல்லத்தே , எல்லோருக்கும் வீட்ல சொந்தக் காரங்க வந்திருக்காங்க . போகாட்டா நல்லாருக்காது . “ முத்தையா சொல்லி விட்டு எழுந்தான் . கூடவே மற்றவர்களும் எழுந்தார்கள் . “ சாயங்காலம் வர்றோம் . “ போய் விட்டார்கள் .
அம்மா கோழிக்குழம்பும் , வறுத்த கோழிக்கறியும் சமைத்திருந்தாள் . வெந்த முட்டை வேறு . மகேஷ் கேட்டு வாங்கிச் சாப்பிட்டதைப் பார்த்து சந்திரனுக்கு மனம் நிறைந்து விட்டது .
எதிரில் இருந்த வேப்ப மரத்தடியில் கட்டில்களைப் போட்டு படுத்தார்கள் . அந்த வெயிலிலும் வேப்ப மரத்துக் காற்று இதமாக இருந்தது . பயணக் களைப்பும் , வயிறு நிரம்பிய கோழிச் சாப்பாடும் அசந்து தூங்க வைத்து விட்டது .
நாலு மணிக்கு முழிப்பு வந்த போது ஒலிபெருக்கிகள் உச்சத்தில் முழங்கிக் கொண்டிருந்தன . சொன்னது போலவே நண்பர்கள் வந்து நின்றார்கள் .
தேரடி மண்டபம் பக்கம் போன போது ஊர் கொடைக்கு தயாரானதின் அடையாளங்கள் முழுமையாகத் தெரிந்தது . ராட்டிணங்கள் ஓட ஆரம்பித்திருந்தன . சுற்றிலும் குழந்தைகளின் கும்மாளம் . வந்து நின்ற செந்தூர் பஸ்ஸில் இருந்து வில்லுப் பாட்டு கோஷ்டி இறங்கினதைப் பார்த்ததும் , ராட்டு பக்கத்தில் சும்மா நின்ற குழந்தைகள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டன .
பேருந்து கிளம்பியதும் ரோட்டைக் கடந்து , பூங்கிணற்றைத் தாண்டி வயற்காட்டில் இறங்கி வரப்பில் நடக்க ஆரம்பித்தார்கள் .
“ மகேஷ் , பார்த்து நடக்கணும் . வழுக்கிடும் . “ சற்றுத் தொலைவில் அம்மன் கோவில் விழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது . பந்தல் வேலை முடிந்திருந்தது . பெரியவர்களும் சின்னவர்களுமாக கோவிலைச் சுற்றி கூட்டம் .
ஆற்றில் பேருக்கு நடுவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . மகேஷ் மிக உற்சாகமாக இருப்பது போலத் தோன்றியது . காமிராவை வைத்து வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்துத் தள்ளினான் .
“ முந்தில்லாம் தண்ணீ கரை புரண்டு ஒடும் . நீச்சல் அடிச்சு குளிப்போம் . இப்ப கரண்டைக் கால் அளவுக்குதான் இருக்கு . மணலையும் அள்ளிட்டானுக . “ முத்தையாவின் குரலில் வேதனை .
கொஞ்சம் மணற்பாங்காக இருந்த இடத்தில் உட்கார்ந்தார்கள் . சிவராமன் கொண்டு வந்திருந்த கொண்டைக் கடலைச் சுண்டல் உப்பும் உரைப்புமாக சுவையாக இருந்தது . ஊர் பற்றியும் , ஊரில் நடந்தவை பற்றியும் , கல்லூரி பற்றியும் பேசப் பேச பொழுது காணாமல் போய் விட்டது . தண்ணீரைத் தழுவி வந்த மெல்லிய காற்றும் இதமாக இருந்தது.
கிளம்பும்போதே இலேசாக இருட்ட ஆரம்பித்துவிட்டது . வழியில் சந்திரனைப் பார்த்து விசாரித்தவர்களுக்கு பதில் கொடுத்தவாறே வீடு வந்து சேர எட்டாகிவிட்டது .
அம்மாவின் கைப்பக்குவத்தில் ரவை உப்புமா சுவை கூடியிருந்தது . வெளிவாசலில் நார்க் கட்டில்களைப் போட்டு படுத்த அடுத்த நிமிடமே தூக்கம் வந்து விட்டது .
மணி ஆறாயிடுச்சு . எழுந்திருப்பா சந்திரா . ஆறரைக்கு கோவில்ல கால் நடறாங்க . நாங்க முதல்ல போறோம் . அம்மா இட்லி சுட்டு வச்சிருக்கா . ரெண்டு பேரும் போய் குளிச்சுட்டு வந்து சாப்பிட்டுட்டு கோவிலுக்கு வந்திருங்க . “ அப்பா ஏற்கனவே தயாராகியிருந்தார் .
குளித்துச் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குப் போன போது கால் நாட்டு முடிந்து அம்மனுக்கு அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது . பூசாரியின் குரல் ஒலிபெருக்கி மூலம் அலறிக் கொண்டிருந்தது . மொத்த ஊரும் அங்கேதான் இருந்தது . இரட்டை நாயனம் முழங்கிக் கொண்டிருந்தன . மேளக்காரர்கள் போட்டி போட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள் . சன்னதிக்கு நேரே  வெளியே கொட்டாரக்கரை செண்டா மேளக் கோஷ்டி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது .
பந்தலின் இன்னொரு மூலையில் வில்லுப் பாட்டுக்காரர்கள் வணக்கம் போட்டு ஆரம்பித்தார்கள் .
“ தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லெடுத்துப் பாடவந்தோம் ...
 “ சுத்தமல்லி பார்ட்டி . டீவிலல்லாம் வந்திருக்காங்கோ . கரகமும் இந்த வருஷம் மூணு பார்ட்டிங்க . உள்ளூர் தவிர வள்ளியூர் பக்கம் இருந்து ரெண்டு . அவங்களும் டீவில ஆடியிருக்காங்க . “ கருப்பசாமி குரலில் பெருமை மின்னியது .
“ செண்டையும் இந்த வருஷம்தான் முதல் தடவை . எப்படி வெளுத்து வாங்கறானுக . எல்லாம் டெல்லி ப்ரதருக்காகத்தான் . “ சிவராமன் சொல்லியதைக் கேட்டு மகேஷ் இலேசாகப் புன்னகைத்தான் .
அன்று முழுவதும் கோவிலிலேயே பொழுது ஓடிவிட்டது . இரவு வீடு திரும்ப நேரமாகி விட்டது .
மகேஷ் எடுத்த புகைப் படங்களை எல்லோருக்கும் காண்பித்தான் . சாமக் கொடை , சாமியாடுவது , அம்மன் சப்பர உலா , கிடா வெட்டு , பொங்கல் , படையல் என்று கொடையின் அத்தனை அம்சங்களையும் சந்திரன் மகேஷிற்கு விளக்கிக் கூறிய பிறகுதான் தூங்கினார்கள் .
மறுநாள் காலையிலேயே மீண்டும் கோவில் . எந்த சப்தம் அதிகம் என்று சொல்ல முடியாத வகையில் எல்லாச் சப்தங்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன .
“ இன்னைக்கு ராத்திரி சாமக்கொடை ரொம்ப விஷேசமா இருக்கும் . நிறையப் பேர் சாமியாடி குறியெல்லாம் சொல்லுவாங்க . ராத்திரி முழுக்க கோவிலிலேயே இருந்திட வேண்டியதுதான் . “ கருப்பசாமி குரலில் உற்சாகம் .
சாமக்கொடை ஆரம்பித்து விட்டதின் அடையாளமாய் மேளக்காரர்கள் அடியில் வேகம் கூட்ட ஆரம்பித்து விட்டார்கள் . செண்டை மேள சப்தம் அதற்குப் போட்டியிட்டது . இன்னொரு மூலையில் கரகாட்டக்காரர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆடிக் கொண்டிருந்தார்கள் . கூட்டம் எல்லா இடத்திலும் பரவிக் கிடந்தது .
ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடில்லாமல் சாமியாடிகள் ஒவ்வொருவராக தங்களை மறந்து ஆட ஆரம்பித்திருந்தார்கள் . மேளச் சப்தமும் , உடுக்கைச் சப்தமும் அவர்களது ஆட்டத்தை முடுக்கி விடுவது போல் உச்ச நிலைக்குச் சென்று கொண்டிருந்தது .
பலி கொடுப்பதற்கான ஆடுகளையும் , கோழிகளையும் பலி பீடத்திற்கு முன்னால் தயாராக கொண்டுவந்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள் . பூசாரி அவற்றின் மீது மஞ்சள் நீரைத் தெளித்தார் .
கூர்மையான வாளின் ஒவ்வொரு வீச்சிலும் ஆடுகளின் தலைகளும், கோழிகளின் தலைகளும் தரையில் உருண்டன . அறுபட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீச்சி அடித்தது . உடுக்கை ஒலியும் , மேளங்களின் சப்தமும் , சிதறும் இரத்தமும் சேர்ந்து சூழ்நிலையில் ஒருவித அமானுஷ்ய தன்மையை உருவாக்கியிருந்தது .
“ அந்தா ஆடுறாருல்ல அது எங்க அப்பாவைப் பெத்த தாத்தா . வயசு எண்பதாகப் போகுது . மத்த நேரமெல்லாம் முடங்கித்தான் கிடப்பாரு . ஆனா சாமியாடறப்ப மட்டும் அந்த வேகம் எங்கேருந்து ... “ முத்தையா சற்றுத் தள்ளி ஆடிக் கொண்டிருந்த வயதானவரை மகேஷிடம் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது . அதைக் கவனித்த முத்தையா பேசுவதை நிறுத்தினான் .
முதலில் மகேஷின் தோளில் ஆரம்பித்த சிலிர்ப்பு அவன் உடம்பெங்கும் பரவியது . கண்கள் விரிய , இரு கைகளையும் உயர்த்தி ஆட்ட ஆரம்பித்தான் . பூசாரிக்குப் பக்கத்தில் இருந்த மரவையில் இருந்து திருநீற்றையும் , குங்குமத்தையும் அள்ளி நெற்றியில் அப்பிக் கொண்டான். அவனது நிலையைக் கண்ட முத்தையாவும் கருப்பசாமியும் அவனை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டார்கள் . மகேஷ் அவர்கள் பிடியில் இருந்து உருவிக் கொள்வது போல ஆட ஆரம்பித்தான் .
மகேஷ் ஆட ஆரம்பித்ததைப் பார்த்த கூட்டம் மொத்தமாக அவன் இருந்த பக்கம் சூழ்ந்து கொண்டது . சாமியாடிக் கொண்டிருந்தவர்கள் கூட சற்று நேரம் ஆடுவதை நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தார்கள் . பின் மேலும் வேகம் கூடி ஆட ஆரம்பித்தார்கள் .
வெளியூர் பையன் மீது அம்மன் இறங்கியிருக்கிறாள் என்ற செய்தி பரவ , மற்ற இடத்தில் இருந்தவர்களும் அங்கே வந்து விட்டார்கள் . மகேஷ் கைகளை உதறி , கால்களை தூக்கி ஆடிக் கொண்டிருந்தான் . அவனிடம் இருந்து வெளிப்பட்ட குரலைக் கேட்டுப் பதறிப் போனது போல் கூட்டம் விலகி நின்றது . மகேஷின் தலை முன்னும் பின்னும் அசைந்தது.   மேலும் கீழும் ஆடியது . பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது .
அவனது ஆட்டத்தின் உக்கிரம் சுற்றி நின்றவர்களை உலுக்கி எடுப்பது போலிருந்தது . பெண்களில் நிறையப் பேர் கன்னத்தில் கைகளை அறைந்து கொண்டு அவனைக் கும்பிட ஆரம்பித்து விட்டார்கள் .
“ நான் யாருன்னு தெரியுதா ? “ பெண் குரலாக ஒலித்த மகேஷின் கேள்வியில் கூட்டம் விக்கித்து நின்றது .
 தெரியாம என்ன ஆத்தா ! செல்லியாத்தாவைத் தெரியாமலா இருக்கும் ? “ வயதில் மூத்த ஒருவர் மகேஷிற்கு முன் வந்து குனிந்து வணங்கினார் .
“ தெரிஞ்சு என்ன பண்ணறது ? மகேஷின் குரலில் ஒலித்த மூர்க்கம் அவரை மேலும் குனிய வைத்தது .
“ ஆத்தா , என்ன கோபம் ஆத்தா ? ஒரு குறையும் வைக்கலியே உனக்கு . மழ இல்லாம விவசாயம் பொய்ச்சுப் போனாக் கூட ஒரு குறையும் இல்லாம கொடை நடத்திட்டுதானே இருக்கோம் ? “
“ கொடை நடத்தினாப் போதுமா ? “ மகேஷ் சுழன்று ஆடியவாறே கேட்டான் .
“ வேற என்ன வேணும் தாயி , சொன்னாத்தானே தெரியும் . “ ஒரு நடுத்தர வயதுப் பெண் முன்னால் வந்து கேட்டாள் .
“ நான் வெறும் செல்லி மட்டும்தானா ? பூமித்தாயும் நாந்தான் தெரியாதா ?  என் கை காலையெல்லாம் முறிச்சுப் போட்டுட்டு கொடை நடத்தினா மட்டும் போதுமா ? “ மகேஷ் சுழன்று ஆடினான் .
பெரியவர் எதையோ புரிந்து கொண்டவர் போல மிக பவ்வியமாக பேசினார் . “ ஆத்தா , நாளைக்கே வீட்டுக்கு ஒரு மரக்கையோ அல்லது காலோ செஞ்சு காணிக்கை போட்றோம் தாயே .
மகேஷின் குரல் மாறியது . “ மரக்கையும் , மரக்காலும் நான் கேட்கல . நான் கை , கால்னு சொல்றது நிஜமான மரங்களை . எவ்வளவு மரம் இருந்துச்சு . அவ்வளவையும் காணாம ஆக்கினது யாரு ? “
பெரியவரின் தலை அசைந்தது . “ உண்மைதான் ஆத்தா . என்ன பண்ணனும்னு சொல்லு . பண்ணிடறோம் . “
“ நாளைக்கு காலைலயே ஊர்ல உள்ள அத்தனை பேரும் ஒரு மரம் நடணும் . நடறதோடு மட்டுமில்லை . அதுக்கு தண்ணி ஊத்தி வளர்க்கணும் . செய்விங்களா ? . மகேஷ் குரல் கடுமையாக ஒலித்தது .
“ செய்றோம் ஆத்தா . “ கூட்டம் முழுவதும் ஒரே குரலில் பதில் சொன்னது .
“ அது மட்டுமில்ல , காலம் காலமா என் உடம்பை அசிங்கம் பண்றதை நிறுத்தனும் . “
கூட்டம் புரியாமல் முழித்தது . சிவராமனுக்கு மகேஷின் நோக்கம் புரிந்து விட்டிருந்தது .
“ ஊர்ல எல்லோரும் வெட்ட வெளியில காலைக்கடன் கழிக்கறதைச் சொல்லுது ஆத்தா .
மகேஷ் ஆமோதிப்பது போல தலை ஆட்டினான் . கூட்டம் தங்களுக்குள் பேசிக் கொண்டது .
“ நிறுத்திடறோம் ஆத்தா. “ மீண்டும் பெரியவர் பேசினார் .
மகேஷின் ஆட்டத்தின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது . மயங்கிச் சாய்ந்தவனை சந்திரனும் , கருப்பசாமியும் சேர்ந்து தாங்கிக் கொண்டு தூக்கி வந்து சற்றுத் தள்ளி படுக்க வைத்தார்கள் . மகேஷ் இலேசாக கண்களை சிமிட்டிவிட்டு மீண்டும் மூடிக் கொண்டான் . கொடை நிகழ்வுகள் தொடர்ந்தன .
விடிவதற்கு சற்று முன்பே வீட்டிற்கு வந்து விட்டனர் சந்திரனும் மற்றவர்களும் . வீட்டிற்கு வந்த பின்தான் மகேஷ் பேசினான் . “ வயசில மூத்தவங்ககிட்ட மரியாதை இல்லாம பேசிட்டன் . ஆனா வேற வழி தெரியல .  அதன் பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தூங்கினார்கள் .
மறுநாள் பத்து மணி வாக்கில் ஊரைச் சுற்றி வந்த போது ஊரில் அங்கங்கு மரக் கன்றுகள் கண்ணில் பட்டன . வேம்பு , வாகை , பூசனை ... வித விதமான கன்றுகள் . மகேஷின் முகம் மலர்ந்திருந்தது . கோவில் கொடை அதிக உற்சாகத்தோடு நடந்து முடிந்தது .
கொடை முடிந்த மறுநாள் சிவராமன் தலைமையில் ஒரு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றது . பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விபரம் சேகரித்தது . மறுநாளே ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்து முடித்த பின்பே திரும்பியது .
ஊரில் கட்டிப் போட்டு வீணாகக் கிடந்த பொதுக் கழிப்பிடத்தை பயனுக்கு கொண்டு வர கோவில் வரிப்பணத்தில் செலவு போக மீதியிருந்த பணத்தை செலவு பண்ண ஏகமனதாக ஊர் முடிவு செய்து உடனடியாக வேலைகள் ஆரம்பிக்கப் பட்ட போது மகேஷிற்கு கை கொடுத்தார்கள் நண்பர்கள் .  
மூன்றாவது நாள் கல்லூரி திறப்பது குறித்த செய்தி வந்தது . சந்திரனும் மகேஷும் கிளம்பிய போது அனேகமாக மொத்த ஊரும் தேரடி மண்டபத்தருகே கூடியிருந்தது . அடுத்த வருசக் கொடைக்கும் தம்பி கட்டாயம் வரணும் . “
வந்து நின்ற பேருந்தில் இடம் தேடி உட்கார்ந்தார்கள் . வழியில் மரக் கன்றுகள் தலையாட்டி வழியனுப்புவது போலத் தோன்றியது . ஆற்றுப் பாலம் வரும் முன்பு ஆரம்பித்த இலேசான தூறல் ஆற்றுப் பாலம் தாண்டுவதற்குள் பெரும் மழையாக மாறி விட்டிருந்தது . வேக வேகமாக ஷட்டர்கள் அடைக்கப் பட்டன .
அடுத்த வருஷமும் கொடைக்கு வரணும் சந்திரா .  முன் கண்ணாடியில் சடசடவென்று விழுந்த மழைத் தாரைகளைப் பார்த்தவாறே மகேஷ் கூறினான் . “ நிச்சயமா . “ என்றான் சந்திரன் .      

     ------------------------- o------------------------ 0 --------------------------------
[ புதுப்புனல் நவம்பர் 2014 ]

3 கருத்துகள்:

 1. சார் புத்தகம் வெளியான அம்மாதமே உங்களின் கதையைப் படித்துவிட்டேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற மொழியை நிரூபணம் செய்திருந்தது இறுதிக் கிளைமாக்ஸ். அருமை சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. After so many years, read a short-long story, written decently, i liked it, beautifully records olden days'

   நீக்கு
 2. சிற்றூர்களுக்குத் தேவையான சிந்தனைக்கதை....சிறப்பு...! ஆங்கிலத்தைக் குறைத்திருக்கலாம்....!பயண நேரமும் மிகுதி...!
  நிறைவு...நன்று....!

  பதிலளிநீக்கு