ஞாயிறு, 21 டிசம்பர், 2014

பரிணாம வளர்ச்சி .

பரிணாம வளர்ச்சி .

நல்லா நினைவிருக்கு
நல்ல தண்ணிக் கிணற்றருகே
உப்புக் கிணறு .
ஒன்று குடிப்பதுக்கு ;
உப்புக் கிணறு மற்றதுக்கு .
சிமெண்ட் பூசிய
உப்புக் கிணறு சுற்றி
ஒரே கூட்டம் .
எம்பி எம்பிப் பார்த்த
எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்
உள்ளே மிதந்தவளுக்கு
அறுபதிருக்கும் .
தாளமுத்துக் கிழவனின்
மனைவியாம் .
தினம் தினம்
சாராயம் சாப்பிட்டதை
தட்டிக் கேட்டதினால்
தகராறாம் .
தண்ணியில் மிதந்தாளாம்
போன மாதம்
ஊருக்குப் போயிருந்த போதும்
சிமெண்ட் பூச்சு உதிர்ந்த
உப்புக் கிணறு சுற்றி
ஒரே கூட்டம் .
எட்டி நின்று பார்த்த போது
உள்ளே மிதந்தவனுக்கு
என் வயதே இருக்கும் .
தாளமுத்துக் கிழவனின்
பேரன் தாளமுத்துவாம் .
கைக்குழந்தையோடு
பகல் காட்சி
பார்க்கப் போனவளை
திட்டியதால் தகராறாம் .
தண்ணியில் மிதந்தானாம் .

[ நந்தலாலா இணைய இதழ் – 019       ஆகஸ்ட்  – 2014 ]

[ புதுப்புனல் டிசம்பர் 2014 ]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக