புதன், 31 டிசம்பர், 2014

தோன்றியது ....


தோன்றியது ....
எட்டாவதுவரை கூடப் படித்த ஈஸ்வரனை
எரித்துவிட்டு வந்தபோது மூடப்பட்டிருந்தது
எதிர்ப்பட்ட ரயில்வேகேட் .
வாகனம் நிறுத்தி
பக்கத்தில் புதிதாய் முளைத்திருந்த
டீக்கடையில் வாங்கிச் சுவைத்த
கீரைவடையின் ருசியில் தோன்றியது
கடை பெரிதாகிவிடும் விரைவிலென்று .
தொடர்வண்டிக்காக இருபுறமும் காத்திருந்த
வாகனங்களை கண்டபோது தோன்றியது
தேவை கட்டுப்பாடு வாகனங்களுக்கும்
ஓசோனின் ஓட்டை தவிர்க்கவென்று .
கடைக் கல்லாவிற்கு மேலிருந்த
தொலைக்காட்சிப் பெட்டிச் சதுரத்தில்
நாயகனும் நாயகியும் கட்டிப் புரண்ட
காட்சியைப் பார்த்தபோது தோன்றியது
இது தொலைக்காட்சியா இல்லை
தோல்காட்சியாவென்று .
இடைஇடையே தோன்றிமறைந்த
விளம்பரங்கள் கண்ணில் படுகையில்
தோன்றியது அவை
விற்பது பொருட்களையா
அல்லது பொய்களையாவென்று .
சிகரட் பற்ற வைத்த இடைவெளியில்
எதிரில் இருந்த சூடான தேநீரில்
விழுந்து தத்தளித்த ஈயைப் பார்த்த போதுதான்
தோன்றியது
தீக்காயம் பட்டு பத்து நாளாய்
படுக்கையில் கிடந்த ஈஸ்வரனை
உயிரோடு இருக்கையிலேயே
போய் பார்த்துவிட்டு வந்திருக்கலாம்
ஒரு தடவையேனும் என்று .


[ இன்மை இணைய இதழ் டிசம்பர் 2014 ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக