செவ்வாய், 6 ஜனவரி, 2015

வெற்று வெட்டு .


வெற்று வெட்டு .

வெட்டுதல்கள் நடை பெற்றுக்
கொண்டேதான் இருக்கின்றன .
அவ்வப்போது நானும் வெட்டுவதுண்டு
நகங்களை
அளவுக்கு மீறி வளர்ந்ததினால் ;
தினமும் மனைவி வெட்டுகின்றாள்
விதவிதமான காய்கறிகளை
உணவுக்காக ;
நேஷனல் சலூன் நயினார்
வெட்டிக் கொண்டே இருக்கிறார்
தலை மயிர்களை .
வீதி வீதியாகக் கூவித் திரியும்
வீரராகவன்
ஏதேனும் ஒரு வீட்டு மரமேறி
வெட்டித் தள்ளுகிறார்
தேங்காய்க் குலைகளை .
நூற்றுக் கணக்கில் வெட்டித்
தள்ளப் படுகின்றன
ஆடுகளும் கோழிகளும்
அம்மன் கோயில் கொடையன்று .
ஒட்டகங்கள் கூட வெட்டுப் படுகின்றன
குர்பாணி நோக்கத்தோடு .
ஒவ்வொரு வெட்டுக்கு பின்னும்
எதோ ஒரு காரணமும்
எதோ ஒரு தேவையும்
இருக்கத்தான் செய்கின்றது .
ஆனால்
சில சமயங்களில்
மனிதர்கள் ஒருவரை யொருவர்
வெட்டிக் கொள்(ல்)வது
ஏன் என்றுதான் புரியவேயில்லை
எத்தனை யோசித்தும் .  


[ இனிய உதயம் ஜனவரி 2015 ]

1 கருத்து: