வியாழன், 8 ஜனவரி, 2015

” நல்லார் ஒருவர் உளரேல் ….” [ சிறுகதை ] -


நல்லார் ஒருவர் உளரேல் .        [ சிறுகதை ]  -  

-------------------------------------------------------------------------------------------------------
[[ புதுப்புனல் ஜனவரி 2015 ]
-------------------------------------------------------------------------------------------------------
ஏங்க நல்லெண்ணெய் சுத்தமா இல்லை வாங்கிட்டு வந்துருங்க மனைவியின் குரல் சமையலறையில் இருந்து வந்தது .
படித்துக் கொண்டிருந்த புத்தகம் மார்பில் நழுவிய நிலையில் அப்போதுதான் ஆரம்ப நிலையில் கால் வைத்திருந்த நடராஜனின் தூக்கம் மனைவியின் குரலால் கலைந்து போய் விட்டது .
எழுந்து லுங்கியை சரியாக கட்டிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான் .
வாழைக்காய் நிறைய கிடக்கே , பஜ்ஜி போடலாமேன்னு பார்த்தா சுத்தமா எண்ணெய் இல்லைங்க . எப்படியும் ராத்திரி சமையலுக்கும் வேணும் . போய் வாங்கிட்டு வந்திடுங்க . அப்படியே மறந்து போயிட்டா ராத்திரி கஷ்டமாயிடும் . “ மனைவி காபிக்கு பால் சுட வைத்தவாறே சொன்னாள் .
சரி , இந்த மாச லிஸ்ட் இன்னும் கொடுக்கலேல்ல . ரெடி பண்ணு . ஒரேயடியா அதையும் ரங்கசாமி கடையிலே கொடுத்திட்டு வந்திடறேன் .
கலா காபியைக் கலந்து அவனுக்கும் கொடுத்து விட்டு தானும் உறிஞ்சத் தொடங்கினாள் .
நடராஜன் காபியை முடித்து விட்டு கையில் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டான் .
கர்நாடகா பொன்னி சாப்பாட்டு அரிசி பத்து கிலோ. “
கலா மனப்பாடமாக ஒப்புவித்தாள் . அவன் எழுதும் வேகத்திற்கேற்ப பொருள்களின் பெயரையும் எடையையும் கூறிக் கொண்டே வந்தாள் . தொலைக்காட்சித் தொடர் போல நீண்ட பட்டியல் கடைசியில் கடுகு நூறு கிராம் என்று முடிந்தது .
நடராஜன் பேண்ட்டும் சட்டையும் அணிந்து கொண்டு பட்டியலை சட்டை பைக்குள் வைத்துக் கொண்டான் . பர்ஸை பேண்ட் பைக்குள் திணித்தான் .
*
வெளியே வந்த போது வெயில் காய்ந்து கொண்டிருந்தது. நடுப்பகல் போல பளிச்சென்று அடித்துக் கொண்டிருந்தது .  ஐப்பசி பிறக்கப் போகிறது . ஆனால் ஏப்ரல் மே மாதிரி வெயில் வாட்டிக் கொண்டிருந்தது . மழை அடித்துப் பெய்ய வேண்டிய நேரம் . ஏற்கனவே போர்வெல் கிணறுகளில் தண்ணீர் கீழே போய் விட்டது . இன்னும் பத்து நாள் போனால் அதுவும் இருக்காது .
பைக்கை உதைக்கும் போது தெருவின் இரண்டு பக்கமும் பார்த்தான். கண்ணுக்கெட்டிய வரை மரங்களே இல்லை .  இப்படி இருந்தால் மழை எப்படிப் பெய்யும் . மரம் வைக்க முடியாத மாதிரி தெருவின் முழு அகலத்திற்கும் கான்கிரீட் போட்டு வைத்திருந்தார்கள் நகராட்சியில் இருந்து.
நிதானமான வேகத்தில் வண்டியை ஓட்டினான் . தெருவில் அங்கங்கு தொட்டிகளுக்கு வெளியே குப்பைகள் இறைந்து கிடந்தன . அந்த வெயிலிலும் நாலைந்து பன்றிகள் குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்தன . ஹெல்மட்டிற்குள் வேர்த்து வியர்வை நெற்றியிலும் கண்களிலும் இறங்கியது . நிறுத்தி ஹெல்மட்டைக் கழற்றி முன் பக்கம் வைத்து விட்டு வியர்வையைத் துடைத்துக் கொண்டு மீண்டும் கிளம்பினான் .
பத்து நிமிடத்தில் ரங்கசாமியின் கடைக்கு வந்து விட்டான் . ரங்கசாமி கல்லாவில் உட்கார்ந்திருந்தான் .
வாங்க சார் , வாங்க . கரெக்டா மாசத்திற்கு ஒரு தடவைதான் வறதுன்னு வச்சிருக்கீங்க . இடையில ஒரு தடவை சும்மாவது வந்துட்டு போலாம்ல . “ ரங்கசாமி எழுந்து வரவேற்று விட்டு மீண்டும் உட்கார்ந்து கொண்டான் .
ரங்கசாமி கடை கொஞ்சம் பெரிய கடைதான் . எப்போதும் எல்லா பொருட்களும் வைத்திருப்பான் . விலையும் எடையும் சரியாக இருக்கும் . அதனால் ஒரு மாசத்திற்கான பொருட்களை மொத்தமாக வாங்க மட்டும் நடராஜன் அங்கு வருவான் . மற்ற நேரங்களில் பக்கத்து தெருவில் இருக்கும் சின்ன கடைகளில்  வாங்கி விடுவான் .
என்னா வெயிலு , என்னா வெயிலு . சித்திரை மாதிரில்லா காயுது . கொஞ்ச வெயில் தாழ வந்திருக்கலாமே சாரு . “
ரங்கசாமி கடையில் வியாபாரம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம் . எல்லோரிடமும் நன்றாகப் பழகுவான் .
”  எண்ணெய் உடனே வேண்டியது இருந்தது . ஒரேயடியா லிஸ்டைக் கொடுத்திட்டு வாங்கிட்டு போயிடலாமேன்னுதான் வந்திட்டேன் . “
லே குமரா , சாருக்கு ஜில்லுன்னு ஒரு பன்னீர் சோடா உடைச்சுக் குடுடா . “
வேண்டாம் ரங்கசாமி இப்பதான் வீட்ல காபி குடிச்சிட்டு வறேன் . “
வெயிலில வந்துருக்கிங்க . சும்மா ஒரு சோடா அடிங்க.   பராசக்தி கம்பெனி சரக்கு தொண்டைக்கு இதமா இருக்கும் . “
கடைக்குள் இருந்து ஒரு பையன் கையில் சோடா பாட்டிலோடு வந்தான் . இன்னொரு கையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை நடராஜனருகில் போட்டான் .
உட்கார்ந்து சாப்பிடுங்க சார் . “
நாற்காலியில் உட்கார்ந்து சோடாவைக் குடித்தான் வெயிலுக்கு இதமாகத்தான் இருந்தது . அவன் பார்வை பையன் பக்கம் போனது . பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கும் . போன மாதம் வந்திருந்த போது வேறொரு பையன் இருந்தான் .
பையன் புதுசு சார் . நாளஞ்சு நாளாச்சு பழய பய கலியாணம் பண்ணிக்கப் போறேன் , ஊரு பக்கமா ஒரு சின்னக் கடையைப் போட்டுட்டு உட்கார்ந்துக்கிறேன்னான் .சரீன்னு கணக்கு முடிச்சு அனுப்பிட்டேன் . இவனுக்கு நம்ம ஊருதான் . வேலை தேடிட்டுருந்தான் .  சரி நம்ம கடையிலேயே நில்லுன்னு கூட்டிட்டு வந்துட்டேன் . “
நடராஜன் பார்வையைப் புரிந்து கொண்ட ரங்கசாமி சொல்லியவாறே அவன் நீட்டிய சீட்டை வாங்கிக் கொண்டான்.
  நல்லெண்ணெய் மட்டும் இப்ப கொடுத்திருங்க . மத்ததை போட்டு எப்பவும் போல வீட்டுக்கு அனுப்பிடுங்க .
ரங்கசாமி சீட்டை குமரனிடம் கொடுத்தான் .
லே , நல்லெண்ணெ பாக்கட்ட மட்டும் சாருக்கிட்ட கொடு . கையில உள்ள வேலை முடிஞ்சதும் சார் சீட்டுக்கு போட்ரு
சரிங்க முதலாளி . “ குமரன் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனான் .
முடிஞ்சா ராத்திரியே அனுப்பிடறேன் . இல்லைன்னா விடிகாலைல கொண்டு வரச் சொல்லிடுதேன் சார் . “
காலையிலேயே அனுப்புங்க , அவசரம் இல்லை .பையன் வேற புதுசு . வீட்டைக் கண்டு பிடிச்சு வரது கஷ்டமா இருக்கும் . “
அதெல்லாம் வந்துடுவான் சார் . துடியான பையந்தான் . பக்கத்தில கேட்டு கீட்டு வந்திடுவான் . “
காலையிலேயே வரச் சொல்லுங்க போதும் . நாளைக்கு லீவ்தான் . லேட்டாத்தான் எழுந்திருப்பேன் . பத்து மணிக்கு வந்தா சரியா இருக்கும் . “
சரிங்க சார் . வழக்கம் போல காசை பையன்கிட்டேயே கொடுத்து விட்ருங்க . சத்த நேரம் உட்கார்ந்துட்டு வெயில் தாழப் போலாமே . வீட்ல போயி என்ன பண்ணப் போறீங்க ? இந்தா , மாலைமுரசு இருக்கு . படிச்சுக்கிட்டிருங்க . அரை மணி கழிச்சு போகலாம் . “ உள்ளிருந்து செய்தித்தாளை எடுத்து நீட்டினார் . மின் விசிறியை இலேசாகத் திருப்பி அவனுக்கும் காற்று வருவது போல செய்தார் .
ரங்கசாமி சொன்னதும் சரியாகவே பட்டதால் செய்தித்தாளை வாங்கி விரித்து படிக்க ஆரம்பித்தான் .
ஐந்தாறு ஆட்கள் பொருள் வாங்க வந்தார்கள் . எல்லோருமே ஒன்றிரண்டு பொருட்கள் வாங்க வந்தவர்கள்தான் . ரங்கசாமி ஒவ்வொருவரிடமும் பொருட்களைக் கேட்டு உள்ளே திரும்பி குமரனுக்கு கேட்பது போலச் சொல்லச் சொல்ல அதே வேகத்தில் குமரன் பொருட்களை எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருந்தான் . உண்மையிலேயே துடிப்பான பையன்தான் .
அரை மணி நேரத்தில் வெயில் நன்றாக இறங்கி விட்டது.
“ அப்ப கிளம்பறேன் . “ நடராஜன் எழுந்தான் .
லே , அந்த எண்ணெ பாக்கட்டை சார்கிட்ட கொடுடா . “
குமரன் கொண்டு வந்து கொடுத்த பாக்கெட்டை வாங்கிக் கொண்டு நடராஜன் கிளம்பினான் .
*
”  சீக்கிரம் வந்திருந்தா பஜ்ஜி போட்டிருப்பேன்ல . “
ஏன் , இப்ப போட்டா சாப்பிடமுடியாதா என்ன ? நடராஜன் லுங்கிக்கு மாறினான்
இப்ப பஜ்ஜி சாப்ட்டா எப்ப ராத்திரி சாப்பாடு சாப்டறது? 
கடிகாரத்தைப் பார்த்தான் . “ மணி ஏழே ஆகலியே . போடு ரெண்டு பஜ்ஜி சாப்ட்டா பசில்லாம் போயிடாது . “
கலா ஐந்தே நிமிடங்களில் இரண்டு தட்டுகளில் பஜ்ஜியோடு வந்து அவன் முன் உட்கார்ந்தாள் .
நாளைக்கு காலைல மத்த சாமான்லாம் வந்திடும் . அவன் கடைக்கு புதிதாக வந்திருக்கும் பையனைப் பற்றிச் சொன்னான் .
பஜ்ஜி சூடாக மொறமொறப்பாக இருந்தது .
பஜ்ஜி சுவையாவே இருக்கு . காரணம் நீயா அல்லது எண்ணெயா தெரியலியே.“ அவனது தட்டு காலியாகியிருந்தது.
ரெண்டும்தான் . “
இன்னும் நாலு போட்டு வை . ராத்திரி டிபனோடு சாப்டலாம் . “
போதும் , போதும் . அப்புறம் கொலஸ்ட்ரால் அது இதுன்னு டாக்டர்கிட்டே அலைய வேண்டியதிருக்கும் . கலா காலியான தட்டுகளை தூக்கிக் கொண்டு சமையலறைக்குள் போய் விட்டாள் .
நடராஜன் பாதியில் விட்ட புத்தகத்தில் மீண்டும் நுழைந்து கொண்டான் .
எட்டரை மணிக்கு கலா குரல் கொடுத்தாள் .“ ஏங்க சாப்ட்ரலாமா ? “
கொஞ்சம் நேரம் போகட்டுமே . “
நினைச்சேன் . ஏழு மணிக்கு பஜ்ஜியை மொக்கறப்பவே தெரியும் . இன்னைக்கு ராச்சாப்பாடு லேட்டாத்தான்னு . “ கலா கையை புடவையில் துடைத்தவாறே வந்து அவனருகில் தரையில் உட்கார்ந்தாள் .
நீ வேணும்னா சாப்பிடேன் . “
எனக்கு வழக்கமான நேரம் ஒன்பதுதானே . வார இதழ் ஒன்றை விரித்தாள் . “ இதில புதுசா ஒரு சமையல் குறிப்பு போட்ருக்கான் . நாளைக்கு அதான் . “
சரி , அப்ப நல்லாப் புரிஞ்சு படி . செய்யும் போது வேற மாதிரி ஆயிடப்போகுது . “
கலா திரும்பி முறைத்தாள் . அவன் சிரித்தான் .
சற்று நேரம் கழித்து கலா உள்ளே போனாள் . வரும் போது இரு கைகளிலும் உப்புமா நிறைந்த தட்டுகள் .
நீ எது பண்ணாலும் சுவையாத்தான் இருக்கு . “ அவன் வாய் நிறைய உப்புமா .
பேசியவாறே சாப்பிட்டு முடித்த போது மணி பத்து . அவன் புத்தகத்தோடு படுக்கையில் சாய்ந்தான் . பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு புடவையால் கழுத்தை துடைத்தவாறே கலா வந்தாள் .
வெயிலு என்னங்க இப்படி அடிக்குது . மழையே வராதா.  இன்னும் நாலஞ்சு நாள் போனா போர்ல சுத்தமா தண்ணி இருக்காது . “
வரும் , வரும் . வராம எங்கே போயிடப் போகுது . “
சற்று நேரத்தில் இருவரும் தூங்கி விட்டார்கள் . புத்தகம் அவன் மார்பில் . வார இதழ் அவளருகில் .
நடராஜனின் கனவில் மழை வந்தது . சோவென்று பெரு மழை . வீதிகள் நிரம்பி வீட்டிற்குள் தண்ணீர் . அவனும் கலாவும் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் போது அவனது தூக்கம் கலைந்து விட்டது . எழுந்து தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் தூங்கி விட்டான் .
*
காலையில் ஏழு மணிக்குதான் எழுந்தான் . அதற்கு முன்பே கலா எழுந்து காபி குடித்து விட்டு டிபன் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள் .
விடுமுறைதான் என்பதால் காபி காலைக் கடன்கள் , குளிப்பு , காலைச் சாப்பாடு எல்லாவற்றையும் நிதானமாக முடித்து விட்டு செய்தித் தாளை மேய ஆரம்பித்தான் . எல்லாப் பக்கங்களிலும் கொலை அல்லது கொள்ளை , இல்லையெனில் கற்பழிப்பு . எங்கே இருந்து பெய்யப் போகிறது மழை என நினைத்தவாறே நான்காவது பக்க கொலையில் மூழ்கியிருந்த போது , கதவு தட்டப் பட்டது . மணியைப் பார்த்தான் . பத்து . குமரனாகத்தான் இருக்க வேண்டும் .
செய்தித் தாளை உதறி விட்டு கதவைத் திறந்தான் . குமரனேதான் .
வணக்கம் சார் . “ சைக்கிளில் இருந்து பையைத் தூக்கிக் கொண்டு வந்தான் . பையின் கனத்தால் அவனது கை ஒரு புறமாக இறங்கியிருந்தது.
எப்படிப்பா வீட்டைக் கண்டு பிடிச்சே ? “
தெரு ஆரம்பத்திலே நின்ன இஸ்திரிக் காரரை கேட்டேன் சார் . அடையாளம் சொல்லி அனுப்பினார் சார் . “
பையைத் தரையில் வைத்து விட்டு குத்துக் காலிட்டு உட்கார்ந்தான் . சீட்டை நடராஜனிடம் கொடுத்தான் . படிங்க சார் . நான் எடுத்து வைக்கிறேன் . “
ரங்கசாமி தொழில் சொல்லிக் கொடுத்திருப்பான் போலும்
நடராஜன் சீட்டைப் பார்த்தான் . எழுத்துகளும் எண்களும் ஒரே சீராக குண்டு குண்டாக அச்சடித்தது போல இருந்தது . இதற்கு முன்பிருந்த பையனுக்கு எழுதத் தெரியாது . ரஙகசாமிதான் எழுதுவான் . கோழி கிளறியது போலிருக்கும் .
நீதான் சீட்டு எழுதினேயா ? எழுத்து நல்லா இருக்கு . என்ன படிச்சிருக்கே ? “
எட்டு முடிச்சிருக்கேன் சார் . “
மேல படிக்கலயா ? “
இல்லை சார் . அப்பாவுக்கு சரியான வேலை இல்லை . ரெண்டு தங்கச்சிங்க வேற . வீட்டுக்கு உதவியா இருக்குமேன்னு வேலைக்கு வந்திட்டேன் . “
அவன் குரலில் இலேசான வருத்தம் ஒளிந்திருந்தது .
பொன்னி அரிசி பத்து கிலோ .
பொன்னி அரிசி பத்து கிலோ . “ அவன் திருப்பிச் சொல்லி விட்டு அரிசியை எடுத்து தரையில் வைத்தான் . நடராஜன் சொல்லச் சொல்ல பொருள்கள் தரைக்கு வந்தன .
மளிகைச் சாமான் வந்திடுச்சா ? “ கலா காபியோடு வந்தாள் .
ஆமா , சொன்ன மாதிரி சரியா பத்து மணிக்கு வந்துட்டான் . இன்னொரு காபி கொண்டு வாயேன் .
“ வேணாம் சார் . கடையில இருந்து கிளம்பும் போது டீ குடிச்சிட்டுதான் வந்தேன் . “
அட சும்மா குடிப்பா . சாராயமா குடிக்கச் சொல்றேன். காபிதானே , என் வீட்டுக்காரி காபி நல்லாவே இருக்கும் . பயப்படாமே குடி . “
குமரன் இலேசாக புன்னகைத்தான் “  கலா உள்ளே போனாள் . குத்துப் பருப்பு அரை கிலோ ...
 எடுத்து வைத்தான் . போன வேகத்திலேயே கலா காபியோடு வந்தாள் .
காபியைக் குடிச்சிட்டு பார்ப்போம் . “ நடராஜன் காபியை உறிஞ்சினான் . குமரன் தம்ளர் வாயில் படாமல் ஊற்ற முயற்சி செய்தான் . சிந்தியது .
சூடா இருக்கு . சும்மா உறிஞ்சியே குடி . “
காபி காலியானது . கடலைப் பருப்பு ஒரு கிலோ ...
மளிகைச் சாமான்கள் ஒவ்வொன்றாய் இடம் மாறியது .
கடைசியில் கடுகு நூறு என்றவாறே கடுகை எடுத்து வைத்து விட்டு பையை மடித்து வைத்தான் குமரன் .
எல்லாம் சரியாயிருக்கு சார் . “
நடராஜன் உள்ளே போய் பணம் எடுத்து வந்தான் .
ஆயிரத்து ஐநூறு . “ ஒரு ஆயிரம் ஒரு ஐநூறு என்று இரு நோட்டுகளை கொடுத்தான் . இந்தா , இதை நீ டீ சாப்பிட வச்சிக்கோ . “ தனியாக ஒரு பத்து ரூபாயை நீட்டினான் .
அதெல்லாம் வேண்டாம் சார் . டோர் டெலிவரிக்கு முதலாளி தனியா காசு கொடுப்பாரு . “ ஆயிரத்தைநூறை மட்டும் வாங்கிக் கொண்டான் .
இந்தா , குமரன் கிளம்பறான் . “
கலா வெளியே வந்தாள் .
ஒன்றண்டு சாமானா இருந்தாக் கூட போன் போடுங்க , கொண்டு வந்திடுறேன் சார் . அம்மா வரட்டுங்களா ? “
வெளியே போய் சைக்கிளில் ஏறி மிதித்தான் . நடராஜன் கதவைச் சாத்தி விட்டு உள்ளே வந்தான்.
*
சீட்ல மொத்தம் சரி பார்த்திட்டீங்களா ? “ கலா பொருட்களை வாளியில் அள்ளி வைத்தவாறே கேட்டாள் .
எல்லாம் சரியாகத்தான் இருக்கும் .
எத்தனை தடவை சொல்லியிருக்கேன் . ஒரு தடவை சரி பார்த்திட்டு பணம் கொடுங்கன்னு . “
நடராஜன் சீட்டை எடுத்துக் கூட்ட ஆரம்பித்தான் . தப்பாக இருந்தது போலத் தோன்றியது .
நீ ஒரு தடவை கூட்டேன் . “ சீட்டை கலாவிடம் நீட்டினான் .
தப்பா இருக்கா , அதான் சொல்றது . “
கலா கூட்டினாள் .
என்னங்க ,  நூறு ரூபா கம்மியா போட்ட மாதிரி இருக்கே . “
ஆமாம் . அதான் உன்னை சரி பார்க்கச் சொன்னேன் .
நடராஜன் மீண்டும் ஒரு தடவை கூட்டிப் பார்த்தான் . நூறு விட்டுப் போயிருந்தது . கூட்டும் போது மூன்று இலக்க எண்கள் ஒன்றில் ஒரு ஒன்றை விட்டு விட்டிருந்தான் பையன்.
ரங்கசாமி கடைதானே . அந்த பக்கம் போகும் போது கொடுத்தாப் போச்சு . “
போக வேண்டிய சந்தர்ப்பம் ஒரு மணி நேரத்திலேயே வந்து விட்டது . கலாவுக்கு திடீரென்று தலைவலி அதிகமாகி விட்டது . வழக்கமாக வரும் வலிதான் . எப்போதும் தைலம் வீட்டில் இருக்கும் . அன்று காலியாகி விட்டிருந்தது .
நான் போய் வாங்கிட்டு வந்திடறேன் . “  நடராஜன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான் .
இப்ப எதுக்குங்க இந்த வெயிலிலே ? “
சாயங்காலம் வரைக்கும் வலியோடவா இருப்பே . வந்து கொஞ்ச நேரம் ஃபேன்ல உட்கார்ந்தால் சரியாயிடும் . “
*
வெயில் நேற்றுப் போலவே கடுமையாகத்தான் இருந்தது.  நடராஜன் மருந்துக் கடையில் தைலத்தை வாங்கி விட்டு சற்றுத் தள்ளி இருந்த ரங்கசாமி கடைக்குச் சென்றான் .
குமரன் மட்டும்தான் இருந்தான் .
என்ன சார் , எதாவது வேணுமா ? போன் போட்ருந்தா நான் கொண்டு வந்திருப்பேன்லா . “
மெடிக்கல் ஷாப்பிற்கு வர வேண்டியது இருந்துச்சு . ரங்கசாமி இல்லையா ? “
இருக்காரு சார் . உள்ளே வீட்டிற்குப் போயிருக்காரு . இதோ கூப்டறேன் . “ ரங்கசாமி வீடு கடையோடு சேர்ந்தே இருந்தது .
அதற்குள் ரங்கசாமியே வந்து விட்டான் .
என்ன சார் , எதாவது அவசரமா தேவைப் படுதா ? லிஸ்ட் கொடுக்கறப்ப மறந்து போயிட்டுதா ? “
அதெல்லாம் இல்லை , ரங்கசாமி . “ நடராஜன் சீட்டைக் கொடுத்து விட்டு விபரத்தைச் சொன்னான் . ஐநூறு ரூபாய் தாளையும் கொடுத்தான் .
அதுக்கென்ன அவசரம் சார் . “ ரங்கசாமி சீட்டை கையில் வாங்கிக் கொண்டான் . அவசரமாக கூட்டலை சரி பார்த்தான் .
 ‘ ஆமா , நூறு ரூபா விட்டுதான் போய்ருக்கு . பையன் புதுசுல்லா தப்பாயிருக்கு .   சீட்டில் திருத்தி எழுதினான் .
லே . கவனமா இருக்கணும்டா . ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கூட்டிப் பார்க்கணும் . “
சரிங்க முதலாளி . “ குமரன் குரலில் பதட்டம் .
சார் நல்ல மனுஷர் . கொண்டு வந்து கொடுத்திட்டார். இல்லேன்னா லாபமும் போய் முதலுக்கே நஷ்டமாயிடும் . ரொம்ப நன்றி சார் . “ மீண்டும் குமரனிடம் திரும்பினார் .
லே ,  இதான் லாஸ்ட் . இன்னொருவாட்டி தப்பு பண்ணா வீட்டிற்கு அனுப்பிடுவேன் . “
குமரன் கண்களில் மிரட்சி . “ சரிங்க முதலாளி . “
ரங்கசாமி , பையன் புதுசுதானே . ஏதோ தப்பாயிடுச்சு. ரொம்ப மிரட்டாதே . நல்ல பையன் . “
சரிங்க சார் . ஒரு சோடா குடிச்சிட்டுப் போங்க . வேணாத வெயில்ல வந்திருக்கீங்க . “
அதற்குள் குமரன் சோடாவை உடைத்திருந்தான் .
நடராஜன் சோடா குடித்து விட்டு கிளம்பினான் .
*
வீட்டிற்குப் போகும் தெருவில் திரும்பிய பிறகுதான் மீதி சில்லறை வாங்காமல் வந்து விட்டது ஞாபகம் வந்தது . வண்டியை திருப்பினான் .
கடை முன் வண்டியை நிறுத்திய போது ரங்கசாமி குமரனிடம் எதோ சப்தமாக கூறிக் கொண்டிருந்தான் . பாவம் குமரன் என்று தோன்றியது நடராஜனுக்கு . நியாயமாக நடந்து கொள்ள நினைத்தது குமரனுக்கு இடைஞ்சலாக ஆகி விட்டது .
அட விடுங்க ரங்கசாமி . பையன் தெரியாம பண்ணிட்டான் . ஒரு தடவை மன்னிச்சிடுங்க . “
அதெல்லாம் ஒன்னுமில்லே சார் . இது வேற விஷயம். அது சரி இந்த வெயில்ல உடனே திரும்பி வந்திருக்கீங்க ? “
மீதி சில்லறை வாங்காம போயிட்டேன் . எப்படியும் ஒரு தடவை வரணும் . ஒரே அலைச்சலா போட்டும்னுதான் உடனே வந்திட்டேன் . “
மீதியா ? ரங்கசாமி எதுவுமே தெரியாதவனாக கேட்டான் . 
“ ஆமா . விட்டுப் போன நூறுக்காக ஐநூறு கொடுத்தேன்.  மீதி நானூறு வாங்காமலே போயிட்டேன் . “
ரங்கசாமி கல்லாவின் டிராயரை இழுத்துப் பார்த்தான் . கல்லாவில ஐநூறே இல்லயே சார் . நூறுதான் கொடுத்து இருப்பிங்க . நல்லா யோசிச்சுப் பாருங்க . “
இல்லை , ரங்கசாமி ஐநூறுதான் கொடுத்தேன் . “
 “ வேணும்னா நீங்களே கல்லாவில பாருங்க சார் . “
எவ்வளவு சொல்லியும் ரங்கசாமி அசையவில்லை . நடராஜனுக்கு ஐநூறுதான் கொடுத்தோமென்பதில் சந்தேகமே இல்லை .
என்ன சார் , உங்ககிட்ட பொய் சொல்வேனா ? “ ரங்கசாமி இரு கைகளையும் விரித்துக் கேட்டான் .
ஒரு வேளை நாம்தான் தப்பாக கூறுகிறோமோவென்று சந்தேகம் வந்து விட்டது நடராஜனுக்கு . அதற்கு மேல் அங்கே நின்று பயனில்லை என்று தோன்ற மீண்டும் வண்டியில் ஏறிக் கிளம்பினான் .ரங்கசாமி ஏமாற்றி விட்டான் என்ற எண்ணத்தை மனதில் இருந்து அகற்ற முடியவில்லை .
*
வீட்டிற்குள் வந்து ஃபேனை ஓட விட்டு உட்கார்ந்தான் . கலாவிடம் எல்லாவற்றையும் சொல்லும் போது மனது வலித்தது .
பேசாமல் விட்டிருக்கலாம் . இப்ப குமரனுக்கும் கஷ்டமாகி நம்ம காசும் நஷ்டமாயிட்டது . நல்லதுக்கு காலமில்ல கலா . “
ரங்கசாமிய நல்லவன்னு நினைச்சோம் . ஆனா காசுன்னு வந்திட்டா நல்லவனும் கெட்டவன் ஆயிடுவான் போலிருக்கு . சரி , விட்டுத் தள்ளுங்க . அடுத்த மாசம் வேற கடை பாருங்க . அவன் சங்காத்தமே இனி வேண்டாம் . “ கலா சமையலறைக்குப் போய் விட்டாள் .
நடராஜனுக்கு வேதனையாக இருந்தது . குமரனை நினைத்தால் வலி அதிகரித்தது . எவ்வளவு முயற்சி செய்தும் ரங்கசாமியின் செயலை நியாயப் படுத்த முடியவில்லை . வெறும் நானூறு ரூபாய்க்காக எப்படி அப்படி ஒரு பொய் . ச்சீ...
மதியம் சாப்பிட்டுவிட்டு படுத்தான் . வெகுநேரம் கழித்துதான் தூக்கம் வந்தது .
*
 ஏஙக சாயங்காலம் மிக்ஸி கிடைச்சிடும்னு சொன்னீங்களே . “  கலா அவனை எழுப்பி விட்டபோது மணி ஆறு .
“ ஆமாம் மறந்தே போச்சு . “
எழுந்து முகம் கழுவி விட்டு கலா கொடுத்த காபியை குடித்தான் . உடை மாற்றிக் கொண்டு வண்டியை எடுத்தான் .ஆறு மணிக்கும் வெயில் சற்று இருந்தது .
ரிப்பேர் பார்க்க கொடுத்திருந்த மிக்ஸியை அன்று மாலை தருவதாகக் கூறியிருந்தான் ரகுபதி . சொல்லியது போலவே தயாராக வைத்திருந்தான் . ஓட்டிக் காண்பித்து விட்டு பையில் போட்டுக் கொடுத்தான் . நூற்றிருவது சார் . “
மிக்ஸியை வாங்கிக் கொண்டு வரும் போது பேருந்து நிலையம் அருகில் அல்வா வாடை வந்தது . மணி கடையில் சூடாக அல்வா சாப்பிட கூட்டமாக இருந்தது . நின்றான் .          
கால் கிலோ அல்வாவும் நாலு பருப்பு வடையும் கட்டுங்க . அப்படியே குடிக்க ஸ்ட்ராங்கா ஒரு டீ . “
டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த போதுதான் அவனைப் பார்த்தான் . குமரன் . கையில் ஒரு துணிப் பையோடு பேருந்து நிலையம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தான் .
குமரா . “ திரும்பிப் பார்த்தான் . கொஞ்சம் தயங்கி விட்டு அவனருகில் வந்தான் . “ மணி இன்னொரு டீ . “
என்ன குமரா , எங்கே இந்த பக்கம் ? “
ஊருக்குப் போறேன் சார் . “
ஏன் எதாவது அவசரமா ? ஊரில யாருக்காவது உடம்பு சரியில்லையா ? “
சற்று தயங்கி விட்டு சொன்னான் . “ இல்லை சார் . நான் வேலையை விட்டுட்டேன் . அதான் . “
ஏம்பா கூட்டல் தப்பாயிட்டதால ரங்கசாமி ரொம்ப திட்டிட்டானா ? “
பதில் சொல்வதா வேண்டாமா என்று யோசிப்பது போல் நின்று கொண்டிருந்தான் . மணி டீயை நீட்டினான் .
முதல்ல டீயைக் குடி. “
வாங்கி உறிஞ்சினான் . “ வடை ஏதாவது சாப்டறியா ? “
“ வேண்டாம் சார் . “
டீயை முடித்து விட்டு காசைக் கொடுத்து மணி நீட்டிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டான் நடராஜன் .
வா , இப்படி ஓரமா நின்னு பேசலாம் . “
ஆளில்லாத இடம் பார்த்து நின்றார்கள்
நான் பண்ண தப்புக்கு திட்டினதுக்கு வருத்தம் இல்லை சார் . தெரியாம பண்ணினாலும் தப்புதானே . ஆனால் உங்களுக்கு மீதி கொடுக்கிற விஷயத்தில முதலாளி நடந்துகிட்டது எனக்கு பிடிக்கல சார் . “
நடராஜன் பார்வை குமரனின் கண்களில் பதிந்தது . அதில் தெரிந்த வலியை உணர முடிந்தது .
நீங்க ஐனூறுதான் கொடுத்திங்க . நான் பார்த்தேன் . அப்புறம் பேச்சு வாக்கில மீதி வாங்கல . நல்லா ஞாபகம் இருக்கு . நீங்க போனப்புறம் முதலாளிகிட்ட சொன்னேன் . அட விடுடா , இந்த தடவை பார்த்திட்டதனால திருப்பிக் கொடுத்திட்டாரு . படிச்ச நீயே தப்பு விட்ருக்க . நான் எத்தனை தடவை தப்பு விட்ருக்கனோ . எல்லாம் சரியாப் போச்சு என்று கூறி விட்டு நீங்க கொடுத்த தாளை உள்ளே வீட்ல கொண்டு போய் வச்சிட்டாரு .நீங்க திரும்பி வந்தப்ப அதைப் பற்றிதான் பேசிக்கிட்டிருந்தோம் . “ அவன் குரல் கம்மிப் போயிருந்தது.
ரங்கசாமி நல்லவந்தான் . ஆனால் இன்னைக்கு அவன் புத்தி ஏன் அப்படி போச்சுன்னுதான் புரியல . “
நல்லவர்தான் சார் . எடையில கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறது , விலை கொஞ்சம் கூட்டிச் சொல்றது . அதல்லாம் இந்த தொழில்ல சகஜம்தான் . அதக் கூட அவர் பண்றதில்ல . சம்பளமும் நல்லாத்தான் கொடுப்பாரு . ஆனால் இன்னைக்கு நானுறு ரூபாய்க்காக அப்படி பொய் சொன்னதை என்னால ஏத்துக்க முடியல . அது விஷயமா பேசும் போது கொஞ்ச மனத்தாங்கலாயிப் போச்சு சார் . அவர்கிட்ட இதற்கு மேல வேலை பார்க்க மனசு ஒத்துக்கல . அதான் விட்டுட்டு ஊருக்கே போயிடலாம்னு கிளம்பிட்டேன் . “
குமரன் பேசுவதை நிறுத்தினான் . பேசியிருக்கக் கூடாதோ என்று யோசிப்பதாகப் பட்டது .
வீட்ல நிலமை மோசம்னியே ? “
ஆமா சார் , ஊரில சம்பளம் கம்மியாத்தான் வரும் . வேற நல்ல வேலை கிடைக்கிற வரை எப்படியாவது சமாளிக்க வேண்டியதுதான் . சரி , நான் வாறேன் சார் . பஸ் வந்திடும் . விட்டா வேற வண்டி கிடையாது . “
செலவுக்கு ஏதாவது வேணுமாப்பா ? “
அதல்லாம் இருக்கு சார் . பத்து நாள் சம்பளம் இருக்கு . நான் வறேன் . வீட்ல அம்மாகிட்ட சொல்லிடுங்க சார் . “  குமரன் கிளம்பி விட்டான்
நடராஜன் சற்று நேரம் அவன் போன திசையையே பார்த்துக் கொண்டு நின்றான் .
அது வரை இருந்த புழுக்கம் திடீரென்று மறைந்து குளிர்ந்த காற்று உடம்பில் பட்டது போலிருந்தது . மேலே பார்த்தான் . வானம் நிறம் மாறியிருந்தது .
வண்டியைக் கிளப்பிய போது இலேசாக தூறல் விழுந்தது. போகும் போதே மழை பெரிதாகி விட்டது . வீட்டிற்கு போவதற்குள் முழுவதுமாக நனைந்து விட்டான் .
வண்டியை நிறுத்தி விட்டு வாசலில் நின்று சோவென்று பெய்த மழையையும் தெருவில் ஓடிய நீரையும் பார்க்க ஆரம்பித்தான் . கலாவும் அவன் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள் . 

------------------------------------------------------------------------------------------------------

[ புதுப்புனல் ஜனவரி 2015 ]

---------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக