புதன், 30 செப்டம்பர், 2015

எஞ்சியவையாவது மிஞ்சட்டும்.....


வலைப்பதிவர் திருவிழா 2015 “ மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “ மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015 “
“ புதுக்கவிதைப் போட்டிக்கான கவிதை “

எஞ்சியவையாவது மிஞ்சட்டும்.....

பறந்து கொண்டிருக்கிறோம்
பரிணாமத்தின் உச்சம் தேடி .
மறந்து கொண்டிருக்கிறோம்
மனிதப் பண்பாட்டின் கூறுகளை மட்டும் .

ஆதி ஆரம்பத்தில் வனங்களில்தான் வாழ்ந்தோம்
எல்லா உயிரும் சமமென்றுதான் இருந்தோம்
ஒன்றாய் உழைத்து நன்றாய் வாழ்ந்தோம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பினோம் .

முதலில் மரங்களை வெட்டினோம் மறைவிடம் தேடி
மறையத் தொடங்கின மற்றவையும் கொஞ்சம் கொஞ்சமாய்
பின்னர் வேர்களையும் விட்டு வைக்கவில்லை
இன்றோ வளர்ச்சி எனும் கானல் நீர் கண்களை மறைக்க
அழித்துக் கொண்டிருக்கிறோம் மனிதப் பண்பாட்டின்
எஞ்சியிருக்கும் கொஞ்சம் விதைகளையும் .

வாழு , வாழ விடு என்பதே மனிதப் பண்பாடு
தான் வாழப் பிறரை அழிப்பது பெருங்கேடு .
சுற்றி நடப்பதை உற்றுக் கவனித்தால்
பற்றி எரிகிறது மனம் ஒவ்வொரு கணமும் .

வளர்ச்சி என்றாலே பணம்தான் எனும் மாயை
வளர்த்து விட்டது மனித மனதில் பல நோயை
விரட்டியடிப்போம் இனியாவது அந்தப் பேயை .

எஞ்சியிருப்பதை வளர்த்தெடுப்போம்
அடுத்த தலைமுறையையாவது வாழ விடுவோம்
வாழ்வதற்கேற்ற வளமான புவியில் .

                                       - சுப்ரா .
உறுதி மொழிகள் :
1 ] இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே .
2 ] இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 “ மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “ மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015 “ க்காகவே எழுதப்பட்டது .
3 ] இது இதற்கு முன் வெளியான படைப்பல்ல . முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது .
4 ] வலைப்பதிவுக் கையேடுக்கான விபரங்கள் அனுப்பியுள்ளேன் .

பதிவரின் பெயர் : வே . சுப்ரமணியன் [ சுப்ரா ]

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

அவனும் நானும் .


அவனும் நானும் .
எதிரில் வந்தவனுக்கு
என் வயதுதானிருக்கும்
யாரென்றேன் .
உன்னைத் தெரிந்திருந்தால்
என்னையும் தெரிந்திருக்குமென்றான் .
எங்கேயோ கேட்டதாக
இருக்கிறதேயென்றேன் .
புதிர் வேண்டாம் புரியும்படிச் சொல்லென்றேன் .
உற்றுக் கவனி
உன்னுள் என்னைக் காணலாம் .
என்னைக் கண்டுவிட்டால்
உன்னையும் நீ கண்டு கொள்ளலாமென்றான் .
உணர்ந்து காண்பதற்குள்
உருவமே இல்லாதவனாகி விட்டான் .
திரும்பிப் பார்க்கையில்
என்னையும் காணவில்லை .
என்னையோ அல்லது அவனையோ
யாரேனும் காண நேர்ந்தால்
சொல்லுங்கள் கட்டாயம்
என்னிடமோ அல்லது அவனிடமோ .

[ புதுப்புனல் ஜூலை – ஆகஸ்ட் 2015 ]

மக்குபவையும் , மக்காதவையும் .


மக்குபவையும் , மக்காதவையும் .

ஆடிக் காற்றில்
மஞ்சனத்தியும் , வேம்பும்
உதறிய பூக்களும் , இலைகளும்
நிரம்பிக் கிடந்த தோட்டத்தைக்
கூட்டித் தள்ளி மாளவில்லை .

வேலைக்காரப் பெண்மணி
சலித்துக் கொண்டதால்
வெட்டியாகி விட்டது
அடிக்கட்டையை மட்டும் விட்டுவிட்டு
மழை வரும்போது
மறுபிறப்பு எடுத்துக் கொள்ளுமென
மனதைச் சமாதானப்படுத்தி .

தோட்டத்துக் குப்பைகளைக் குறைத்தாயிற்று
காலியாகக் கிடக்கும் பக்கத்து மனையில்
தினசரி வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளை
வசதியாக மறந்தவாறு
ஏனென இதுவரை யாரும் கேட்காததால் . 

[ காக்கைச் சிறகினிலே “  -  ஆகஸ்ட் 2015 ]

மரத்தலும் திகைத்தலும் .பார்வையை இழக்கும்போது
சப்தங்களைக் காதலிக்கக்
கற்றுக் கொள்கிறோம் .
செவி தன் தன்மை இழக்கும்போது
அமைதியை நேசிக்கக்
கற்றுக் கொள்கிறோம் .
பேசும் திறன் இழக்கும்போது
மெளனத்தை அணைத்துக் கொள்ளக்
கற்றுக் கொள்கிறோம் .
வயிறு தன் இயல்பை இழக்கும்போது
பசியைப் பொறுக்கக்
கற்றுக் கொள்கிறோம் .
மனம் மரத்துப் போகும் போதுதான்
செய்வதறியாது

திகைத்துப் போகிறோம் . 

 [ புதுப்புனல் மார்ச் 2015 ]

யாருக்கான கவிதை ?


யாருக்கான கவிதை ?

எனக்கே எனக்கென்று
எழுதும் கவிதையின்
இரண்டாவது வரியிலேயே
எப்படியாவது நுழைந்து விடுகிறார்கள்
வாசிப்பவர்களும்
அதன்பின் அவர்களுக்கும்
உரியதாகி விடுகிறது
அந்தக் கவிதையும் .

[ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

எஞ்சியவை .எஞ்சியவை .
நீண்ட நாட்களுக்குப் பின்
கண்ட நண்பனோடு
பசுமையிழந்து போன பூங்காவின்
சிதைவுற்ற சிமெண்ட் இருக்கை
தேடி
அமர்ந்த இடத்தருகில்
எஞ்சியிருந்த ஒற்றைச் செடியில்
ஏதோவொரு பெயர் தெரியாப் பூச்சி
தேடிக் கொண்டிருந்தெதையோ .
கையிலிருந்த
படபடக்கும் பட்டாம்பூச்சி குறித்த
கவிதைத் தாளை காட்டினேன்
வாசிப்பதில் விருப்பமுள்ள
தோழனிடம் .
பட்டாம்பூச்சியல்ல
வண்ணத்துப் பூச்சியே சரியென்றான்
கவிதைக்குள் போகாமலே நண்பன் .
அவரவர் கருத்துகளை
பரிமாறிக்கொண்ட கணத்தில்
கலைந்து போன நிசப்தத்தால்
பாதிக்கப்பட்டு
பறந்துபோய்விட்டது அந்த
பெயர் தெரியாப் பூச்சி
வேறு செடி தேடி .
வார்த்தைப் பரிமாற்றங்களின்
முடிவிலெந்த முடிவுக்கும் வராது போக
திருப்பி வாங்கிக் கொண்ட கவிதையை
திரும்பிப் பார்க்கையில்
பட்டாம்பூச்சியுமில்லை
வண்ணத்துப் பூச்சியுமில்லை
கவிதையில்
வெறும் வார்த்தைகளே எஞ்சியிருந்தன .


[ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]

உருமாற்றம் .உருமாற்றம் .

எந்தக் கணத்தில்
பறவையாக மாறினேன் நானென
புலப்படவில்லை இதுவரையெனக்கு .
முதலில் சிறகுகள் முளைத்ததாகத்தான்
ஞாபகம்
அல்லது அலகுகளாகக் கூட
இருக்கலாம் .
ஏதோவொன்று
எதுவென்று
தெளிவாயில்லை நினைவுகளில் .
எனினும்
பறவையாக மாறி விட்டேனென்று
உறுதிப் படுத்தியது
நானமர்ந்திருந்த மரக்கிளயின்
இலைகளிலொன்றின் உரசல் .
சிறகுகள் உதிர்ந்தும்
அலகுகள் சிதைந்தும் போய்
எல்லாம் முடிந்தும்
மனம் மட்டும் பறந்து
கொண்டேயிருக்கிறது
உருமாற்றத்திற்கு வழியில்லாமலும்
தரையிறங்கத் தெரியாததாலும் .


[ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]

சனி, 26 செப்டம்பர், 2015

சமயங்கள் .


எதிர்பாராத நிகழ்வுகள்
திகைக்க வைக்கின்றன .
எதிர்பார்த்த நிகழ்வுகள்
ஏமாற்றம் அளிக்கின்றன .
எதுவுமே நிகழாதபோது

நிறைந்திருக்கிறது மனது .

[ புதுப்புனல் மார்ச் 2015 ]

வருவதும் போவதும்....
ஓடிப் போகின்றன நாட்கள்
வருந்துவதற்கு ஏதுமில்லை
வரவேற்கப்பட்டா வருகின்றன நாட்கள்

சொல்லிக் கொண்டு போவதற்கு .

[ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]

எஞ்சியது !அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் ;

வெந்து தணியவில்லை காடு .

பொந்திருந்த மரம் தவிர

வேறொரு மரமங்கு இல்லையென்பதால்

வேறெங்கும் பரவவில்லை அக்கினி .

அப்படியே இருந்தது மீதிக்காடு


எரிந்தழிந்த அந்த ஒற்றை மரத்தின்


கரிய சாம்பலோடு . 

[ புதுப்புனல் மே 2015 ]

எதை.... ?
ஒரு நாவல் எழுதும் நேரத்தில்

பத்து சிறுகதைகள் எழுதிவிடலாம் .

பத்து சிறுகதைகள் எழுதும் நேரத்தில்

நூறு கவிதைகள் எழுதிவிடலாம் .

நூறு கவிதைகள் எழுதும் நேரத்தில்

நிச்சயமாய்

ஒரு கடிதம் எழுதி விடலாம்

உற்ற நண்பனுக்கு .

இதில் எதை எழுதுவது

உத்தமம் என்று

யோசித்துக் கொண்டிருக்கிறது மனது –

கைகளில் திறவாத எழுதுகோலை


உருட்டிக் கொண்டு . 

[ புதுப்புனல் ஏப்ரல் 2015 ]

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

இழப்பென்றெதுவுமில்லை....சென்ற வேகத்தில்
நின்று கவனிக்காமல் போன
வழியோரத் தும்பைப் பூக்களும்
பக்கத்துத் தெரு
கடைசி வீட்டின் பல வண்ண
செம்பருத்தி மலர்களும்
வீடு திரும்பி தளர்ந்து சாய்ந்த கணத்தில்
மனதிற்குள் பூத்துக் குலுங்கிய போதுதான்
உணர்ந்து கொண்டேன்
இழந்து விட்டோமென்று நினைக்குமெதுவும்
இழக்கப்படுவதில்லை

வாழ்வில் என்ற உண்மையை .

[ புதுப்புனல் மார்ச் 2015 ]

அசைவைனவும் அசையாதவையும் .பிறந்து வளர்ந்த வீட்டை
விலைக்கு வாங்கியவரிடம்
சாவியை ஒப்படைப்பதற்கு முன்
அகற்றியாகிவிட்டது
அகல மறுத்து
ஒவ்வொரு அறையிலும் தவழும்
பாலிய காலத்து நினைவுகளைத் தவிர
மற்றெல்லா
அனைத்து அசையும் பொருட்களையும் .

[ புதுப்புனல் மார்ச் 2015 ]
.

கவிதையில் பசி .பசித்தவன் கவிதைக்கும்
பசியே அறியாதவன் கவிதைக்கும்
அவ்வளவாக தெரிவதில்லை
வேறுபாடு .
மொழியின் பசியும்
உணர்வின் பசியும்
சமயங்களில் தேடலின் பசியுமே
கவிதைகளாவதால்
உணரப்படுவதில்லை
வயிற்றின் பசி
அநேக வரிகளில் .

[ புதுப்புனல் மார்ச் 2015 ]

நிலாவும் நண்பனும் .தினம் தினம் கேணியில் விழுந்து

மீண்டு வரும் நிலவு

பொறாமைப்பட வைக்கிறது

அதே கேணியில் ஒரே ஒரு முறை

வீழ்ந்து மீண்டு வராது போன

பள்ளிக்கால நண்பனை நினைக்கும் போது  .


[ புதுப்புனல் மார்ச் 2015 ]

அவர்களும் இவர்களும் ...அவர்களும் இவர்களும் ...

அவர்கள் அப்படி இருக்கிறார்கள்

அவர்கள் இப்படி இருக்கிறார்கள்

அவர்கள் அதைச் செய்தார்கள்

அவர்கள் இதைச் செய்தார்கள்

அவர்கள் அதை வாங்கினார்கள்

அவர்கள் இதை வாங்கினார்கள்

அவர்கள் அப்படிச் சொன்னார்கள்

அவர்கள் இப்படிச் சொன்னார்கள்

அவர்கள் அது வைத்திருக்கிறார்கள்

அவர்கள் இது வைத்திருக்கிறார்கள்

இப்படி

அவர்களைப் பற்றியே

பேசிக் கொண்டும்

நினைத்துக் கொண்டும் இருப்பதினால்

வாழாமலே கழிந்து விடுகிறது

சிலரது வாழ்க்கை .


[ காக்கைச் சிறகினிலே மார்ச் 2015 ]

வியாழன், 24 செப்டம்பர், 2015

வரிகள் .... வலிகள் ....படிமங்களாலும் உவமைகளாலுமே
நிரம்பி வழிகின்றன கவிதை வரிகள்
அவ்வப்போது எட்டிப் பார்க்கும்
யதார்த்தங்களும் உண்மைகளும்
வலிக்கத்தான் செய்கின்றன

கவிதையின் அழகையும் மீறி .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

உணர்வுகளும் உணர்வுகளும் .எண்ணிலடங்கா உணர்வுகளை
புரிந்து கொள்ள முடிகிறது .
என்னிலடங்காத உணர்வுகளைத்தான்
என்ன செய்வதென்று

தெரியவே இல்லை .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]

மேகங்களின் அழுகை .


பகலில் பகலவனின் வெம்மை
தாளாது அழ நேரிடுகின்றது
இரவில் நிலவின் குளிர்ந்த அன்பு
அழ வைக்கின்றது
இப்படி அவ்வப்போது யாராலாவது
மேகங்கள் அழ வைக்கப் படுகையில்தான்

கொஞ்சமேனும் குளிர்கிறது பூமி .

[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]