திங்கள், 12 அக்டோபர், 2015

” ஆலிவ் இலைகள் . ” [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .”  ஆலிவ் இலைகள் . [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
-------------------------------------------------------------------
ஆலிவ் இலைகள் “ – கவிதைத் தொகுப்பு .
ஆசிரியர் – கவிஞர் கூடல் தாரிக் .[ முனைவர் கா . பீர்முகமது தாரிக் ]   [ 99425 30284 ]
வெளியீடு – கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ் , தேனூர் , மதுரை .
விலை – ரூபாய் 50 /
கவிஞரின் முதல் தொகுப்புதான் எனினும் அனுபவ வரிகளும் , அழகிய கவித்துவமும் அடங்கிய தொகுப்பு .
51 தலைப்புகளில் சில குறுங்கவிதைகளும் , பல நீள் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு . கவிதைகள் மட்டுமல்ல புத்தக வடிவமைப்பும் அழகுதான் . கண்களை உறுத்தாத எழுத்துகளும் , கவிதைகளுக்கேற்ற படங்களும் சிறப்பு .
பல நீள் கவிதைகள் அநேகமாக ஒன்றுக்கொன்று தொடர்புள்ள குறுங்கவிதைகளாக எழுதப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பு . தனித் தனியே வாசித்தாலும் தலைப்பில் தந்திருக்கும் பாடுபொருளை நம் கண் முன் கொண்டு வந்து விடுகின்றன .
வாழ்வின் முழுமையை குறியீடாக உணர்த்துவது போல குழந்தை “ பருவத்தின் சிறப்பு குறித்த கவிதையில் ஆரம்பமாகும் தொகுப்பு , மெழுகுவர்த்தியாய் உருகிய “ அம்மா “ அணைந்து போன சோகத்தில் முடிகிறது .
இடையில் கவிதைகள் விரிவான களங்களில் விரவிக் கிடக்கின்றன . சமூகம் , காதல் , பாசம் , பாசத்திற்கான ஏக்கங்கள் , இயற்கையும் அதன் இழப்புகளும் , பறவைகளின் உலகமும் அவற்றின் மொழிகளும் , நாகரீகத்தின் நன்மைகளும் , தீமைகளும் .... என சிறகுகளை விரித்து பறந்திருக்கிறார் கவிஞர் . தமிழ் ஆசிரியர் என்பதால் பொருத்தமான சொற்கள் தானாகவே வந்து அதனதன் இடத்தில் அமர்ந்து விடுகின்றன .
முதல் கவிதை “ குழந்தை “ மூலமே வாசிப்பவனை தன் வசமாக்கிக் கொள்கிறார் அதன் அர்த்தமும் , அழகும் நிறைந்த வரிகளால் .
அறியாப் பருவத்தில் , சூழலுக்கேற்ப அப்பா , அம்மாவில் ஆரம்பித்து டீச்சராக , பேருந்து ஓட்டுனராக , மீன் விற்கும் அக்காவாக , குடை பிடித்து வரும் அத்தையாக தன்னை எளிதாக மாற்றிக் கொள்ள இயலுகிறது குழந்தையால் எனச் சொல்லி நிறுத்தி ,
“ எவராலும் / மாற முடிவதில்லை / குழந்தையாக “ என முடியும் கவிதை வரிகள் வாசிப்பவன் மனதில் மீண்டும் குழந்தையாகும் ஏக்கத்தை உருவாக்காமல் அடுத்த கவிதைக்கு கடந்து போக விடாது .  
“ வாழ்க்கை / வாழ்வதற்கல்ல / பகிர்வதற்கு / சாட்சியாய் /
குழந்தைகளும் பொம்மைகளும் “ என்று “ பகிர்தல் “ எனும் கவிதையில் வாழ்வின் பொருளை எளிதாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் .
இயற்கையின் அருமையையும் அவசியத்தையும்  “ நதி “ மூலம் சில வரிகளில் உணர்த்தி விடுகிறார் .
“ வரைபட / உள்ளங்கையில் / கோடுகளாகத் தெரிவது / நதிகளல்ல /
உலகின் / எதிர்காலத்தை / நிர்ணயிக்கும் / ஆயுள் ரேகைகள் “
தேனிக்காரர் என்பதால் “ பென்னி குக் “ குறித்து எழுதாமல் இருக்க இயலுமா ?
காலமென்னும் சிலுவையில் / அறையப்படலாம் / உன் நினைவுகள் /
பள்ளத்தாக்குக் கவிஞர்கள் / நாங்களிருக்கிறோம் / எங்கள் / கவிதைகளால் / உயிர்த்தெழச் செய்வோம் / உன்னை . “
[ தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை இதுவென்பது கூடுதல் சிறப்பு . ]
“ பறவைகளில் / காகம் அழகானது / எச்சில் இலைகளை நோக்கி  /
ஓடும் மனிதர்களுக்கு மத்தியில் / நடைமுறைப்படுத்தும் /
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் / என்ற தமிழ் மரபை . “
என்று “ அழகியல் “ குறித்த வேறுபட்ட சிந்தனையைத் தூவியுள்ளார் .
கறுப்பு வெள்ளைக் கனவுகளை அடுக்கிச் செல்கையில் ,
“ அலைபேசி மணி அடிக்காத / மவுன அஞ்சலி நிகழ்வு “ ... என யதார்த்தத்தை தலையில் குட்டிச் செ[ சொ]ல்கிறார் .
அகப்பார்வை / அற்றவனாக / இருப்பினும் / உணர்கிறேன் / உன் /
தரிசனத்தை
*
மேனியெங்கும் / பரவும் / குளிர்ச்சியால் “  என்ற வரிகளில் உணரப்படும் “ தரிசனம் “ நிலவாலா , தென்றலாலா ... என்று வாசிப்பவனையும் யோசிக்க வைத்து விடுகிறது .
வெளிநாட்டில் வேலைக்குச் சென்றிருக்கும் கணவனை நினைத்து மனைவியின் கடிதமும் , பதிலாக கணவனின் கடிதமும் அடுத்தடுத்த கவிதைகளாக மனதை எதோ செய்கிறது .
“ விதவிதமாக / என்னவன் / நீ / அனுப்பிய வாசனை /
திரவியங்களிலிருந்து / ஏமாற்றத்தின் வாசனை “ [ அவள் ]
***************************
மனச் சுழலிற்குள் / சிக்கியவாறு நீ / மணற்சுழலிற்குள் /
சிக்கியவாறு நான் . “ [ அவன் ]
******************************
முதிர் கன்னியை இதழாக பாவித்து , வாசிப்பவர்களை துடிக்க வைக்கின்றன வரிகள் .
“ முன் அட்டையையும் / பின் அட்டையையும் / பார்க்கத் துடிப்பவர்கள் /
படிக்க நினைப்பதில்லை / உள் பக்கங்களை . “ 
பண்டிகைக் காலத்தில் வீடு ஒழுங்க வைக்கப் படுகையில் காணாமல் போன எத்தனையோ பொருட்கள் கிடைத்தும் கூட , கவிஞர் வருத்தமே படுகிறார் :
யாருமே தேடவேயில்லை / நீண்ட காலமாய் / காணாமல் போயிருந்த /
சிட்டுக் குருவியை . “
**************************
“ வாழ்க்கையென்னும் / பேருந்துப்பயணத்தில் / பயணச்சீட்டை /
பறக்க விட்டவர்கள் “ என உருவகப் படுத்துகிறார் குழந்தை தொழிலாளர்களை .
“ பொற்குவியலை / விரும்பமாட்டீர் / என்பதனால் / சொற்குவியலாய் / பெறுவீர் / எமது / கவிதையை “ என முடிக்கிறார் மறைந்த அப்துல் கலாம் அவர்களிடம் நேரில் வழங்கிய வாழ்த்துக் கவிதையை .
“ சாகுபடி இல்லாததால் / சாகும்படி ஆன / விவசாயிகளின் / விடியல் /
விளைநிலங்களில் / விளைச்சலில் “ என விவசாயியின் விடியலுக்கு விளக்கம் அளித்துவிட்டு
“ கவிஞனின் விடியலோ / சமூக இருட்டிற்கான / நிரந்தர வெளிச்சம் “ என முடிக்கிறார் .
லெபனான் நகரின் பெய்ரூத் வீதிகளெங்கும் வீசும் ஆலிவ் இலைகளின் வாசனையில் துவங்கி
“ இடைவிடாது வீசும் / தென்றல் காற்று / ஆலிவ் இலைகளின் /
வாசனையை / பரவச்செய்யும் / உலகம் முழுவதும் “ என முடிக்கும் கவிதையில் உள்ள உருவகங்களும் , படிமங்களும் வாசிப்பவனை எங்கெங்கோ இட்டுச் செல்கின்றன .
“ ஓர் / அடைமழை நாளில் / ஒற்றை மெழுகுவர்த்தியாய் /
எனக்காக உருகிய / அம்மா / அணைந்து போனாள்
வறுமைக் காற்றில்
என்ற கடைசிக் கவிதையின் வரிகள் உருகத்தான் வைக்கின்றன நம் மனதையும் .
கவிதை வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்தத் தொகுப்பை வாசிக்கையில் வரிகளின் அழகாலும் , வலிமையாலும் , ஆழத்தாலும் ஈர்க்கப் படுவார்கள் .
அடுத்த தொகுப்பை விரைவில் வெளிக் கொண்டு வர இருக்கும் கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துகள் . 
________________________________________________________________________


    

2 கருத்துகள்: