வெள்ளி, 16 அக்டோபர், 2015

” குழந்தைகளைத் தேடும் கடவுள் ” – ஒரு வாசிப்பு அனுபவம் .குழந்தைகளைத் தேடும் கடவுள் – ஒரு வாசிப்பு அனுபவம் .

கவிஞர் ச. கோபிநாத் எழுதி வாசகன் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஹைக்கூத் தொகுப்பு “குழந்தைகளைத் தேடும் கடவுள் “ . சிறந்த ஹைக்கூ நூலுக்கான மின்மினி – கார்முகிலோன் ஹைக்கூ விருது பெற்ற நூல் .
பக்கத்திற்கு நான்காக 39 பக்கங்களில் 156 ஹைக்கூக்கள் [ சென்ரியு உட்பட ] அடங்கிய அருமையான தொகுப்பு . தளத்தை சுருக்கிக் கொள்ளாமல் குழந்தைகள் மன உலகம் , சமூக அவலங்கள் , சமூகச் சிந்தனைகள் , இயற்கையின் அருமை , பண்பாட்டின் பெருமை மற்றும் அதன் அழிவு குறித்த பொருமல் , சுற்றுச் சூழல் மாசு படுதல் குறித்த கவலை , தமிழ் மீது உள்ள காதல் , விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த பார்வை , மூடநம்பிக்கை குறித்த எள்ளல் , கூடவே சிறிது வாழ்க்கைத் தத்துவங்கள் என்று பரந்த களத்தில் தன் கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறந்திருக்கிறார் கவிஞர் கோபிநாத் .
தொழிலால் ஆசிரியர் என்பதால் குழந்தைகளைக் குறித்து நிறையக் கவிதைகள் உள்ளன . எனினும் குழந்தை , கடவுள் இருவரையும் இரு வேறுபட்ட பார்வைகளில் பார்க்கும் கீழ் கண்ட கவிதைகள் நயம் அருமை . ஒன்றில் தத்துவமும் இன்னொன்றில் எள்ளலும் நடை போடுகின்றன .
குழந்தைகளைத் தேடும்
கடவுள்
நிம்மதிப் பெருவாழ்வு .
********************
கடவுளைத் தேடும்
குழந்தைகள்
தேர்வு நாள் .
**********************
தவிர்க்க இயலாமல் கண்ணில் படும் காட்சிகளை மாற்றுச் சிந்தனையில் பார்க்கிறார் இன்னொரு கவிதையில் .
வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை .
*********************************
கவிஞனின் சுய எள்ளலாக வெளிப்படுகிறது இன்னொரு கவிதை .
சூடாக இருந்தன
கவிதைகள்
திண்பண்டத் தாள் .
*************************
மறைபொருளாய் எதையோச் சுட்டிக் காட்டிச் செல்கிறார் சமயங்களில்
வளரத்துடிக்கும் வேர்கள்
வெட்டப்படும் வேதனை
தொட்டிச்செடி வாழ்க்கை .
********************************
வாசிப்பவனின் கற்பனைகளை வெவ்வேறு திசைகளில் சிறகடிக்க வைக்கிறது சில கவிதைகள் . 
சலசலப்பிருந்தும்
சலனமில்லை
நதியின் பயணம் .
***************************
அடர்காடு
ஆரவாரமின்றி
குயிலோசை .
*************************************
மொத்தத்தில் நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்துள்ளது தொகுப்பு .
கவிஞரின் படைப்புகள் பெருக வாழ்த்துகள் .
குழந்தைகளைத் தேடும் கடவுள் ஹைக்கூத் தொகுப்பு .
வெளியீடு – வாசகன் பதிப்பகம் , சேலம் .
விலை – ரூபாய் 50 /

---------------------------------------------------------------------- 

2 கருத்துகள்:

  1. படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைத்து விட்டது தங்களின் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் ஐயா! அழகாக சொல்லியுள்ளீர்கள்! .சிறப்பான பதிவு நன்றி!

    பதிலளிநீக்கு